தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் 

பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார்.

முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.

 பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி சிதம்பரனார் ‘இலட்சுமணன்’ என்னும் இவரின் பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார். இப்பெயர் மாற்றம் இலக்குவனாரைத் தனித்தமிழில் முழு ஈடுபாடுகாட்டச் செய்தது. தமிழ்ப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட இலக்குவனார், அயற்சொற்களை அகற்றித் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் நிலைப்பாட்டிற்கு வந்தார். எனவேதான் உடன் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டுமல்லாமல், ஊர் தோறும்  சென்று ஊர் மக்களிடமும் (தனித்)தமிழ் ஆர்வத்தைத் தூண்டினார்.  இவ்வாறு மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர் அக்காலத்தில் வேறு எவரும இலர்.

புலவர் வகுப்பு பயிலும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்  தனித்தமிழ்ப்பாவியத்தை இயற்றினார்; தனித்தமிழ்ப் பாடல்களையே எப்பொழுதும் இயற்றினார்.

பள்ளித் தமிழாசிரியராய்ச் சேர்ந்த பின்னும், கல்லூரிப்பேராசிரியராய்த் திகழ்ந்த பொழுதும் மாணாக்கர்கள் வருகை எடுப்பின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ எனத் தமிழில் கூறுமாறு செய்தார். இஃது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடு எங்கணும் பரவியது.

விளையாட்டு வகுப்புகளிலும் ‘அன்பே கடவுள்’ என (love all என்பதற்கு மாற்றாக)த் தொடங்குவது, ஒன்று, இரண்டு, மூன்று என்பனபோல் தமிழில் சொல்வது என்னும் வழக்கத்தை உண்டாக்கினார்.

நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் இவரிடம் தமிழ் பயின்றவர் சொல் விளங்கும் பெருமாள். தனித்தமிழில் பேசுவதும் தமிழ்ப்பற்றை ஊட்டுவதுமே பேரா.இலக்குவனாரின் அன்றாடச் செயல்பாடு என்னும் அவர், ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

ஒரு நாள் யாப்பருங்கலக் காரிகை நடத்திக் கொண்டிருந்தார். “ஐயா, ஒரு சந்தேகம்” என்றேன் நான். பேராசிரியர் முகத்தில் கருமேகம் திரண்டது. புத்தகத்தை மேசை மீது போட்டார். நிலைமையை உணர்ந்த நான்  “ஐயா, தெரியாமல்”  என்றேன்.

“ஐயா, நமது வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமாய்யா? அதற்காகவாய்யா நான் இத்தனை பாடுபடுகிறேன். ஐயம் என்னும் சொல் இருக்க ஐயர் சொல் ஏனய்யா” என்றார்.

 நான் கண்ணீர் விட்டு அழாக்குறையாக எத்துணை வேண்டியும் மனம் ஒப்பினாரில்லை. கேட்ட ஐயம் போன இடம் தெரியவில்லை.  அன்றிருந்து வகுப்பில் யாரேனும் மறந்தும் பிற சொல் கலப்பரோ?” (செந்தமிழ், திசம்பர் 1973)

இவ்வாறு மாணாக்கர்கைளத் தனித்தமிழில் பேசச் செய்தார். ஐயர் தமிழ் என்று சொன்னாரே தவிரப் பேரா.சி.இலக்குவனார் சாதி வேறுபாடு பார்ப்பவ ரல்லர். பிராமண மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை  இல்லை என்பதால், கல்வி உதவித் தொகை தரும் நிறுவனங்களைக் கண்டறிந்து தானே விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்து  பூர்த்தி செய்யச் செய்து அனுப்பி உதவித் தொகை கிடைக்கச் செய்வார்.  பணமுடையால் கல்லூரிக்குப் பணம் கட்டாத ஏழை மாணவர்களுக்குத் தாமாகவே முன் வந்து உதவும் பொழுதும் சாதி வேறுபாடு பார்க்காமல் இயலாமையை மட்டும் கருதி உதவுவார்.

பேரா.சொல் விளங்கும் பெருமாள் தன் கல்லூரிக்காலத்தில் பேராசிரியரின் தமிழ்க்காப்புப்பணியை நினைவு கூர்ந்து மேலும் பின்வருமாறு கூறுகிறார்.

“மாணவர்கள் தங்கள் கைகளில் தார்ச்செட்டி தூக்கித் தெருக்களில் காணப்படும் தமிழ்க்கொலைப் பெயர்களை அழித்தல் வேண்டும் “என்பார். “சிறு வெற்றிலைப்பாக்குக் கடைகளிலும் பெரிய உணவு விடுதிகளிலும் வண்ணக் குடிகளுக்கும் உணவு வகைகளுக்கும் நற்றமிழ்ப்பெயர்களைச் சூட்டவேண்டும்” என்று ஊக்கமூட்டுவார். இவ்வாறு அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களிலும் தமிழ்ப்பெயர் இருக்க வழி காட்டினார்.

ஒரு சமயம் தெ.தி.இந்துக்கல்லூரி முதல்வராக இருந்தபொழுது “நித்தியவெள்ளி உண்கலன் ஒன்று கேட்பாரற்றுக் கிடைத்துள்ளது. உரியவர் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிப்புப் பலகையில் அறிவிப்பை ஒட்டி யிருந்தார். இதனை அன்றைய ஆளுங்கட்சி சார்ந்த இதழ் ஒன்று கேலி செய்து எழுதியிருந்தது. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனாரிடம் கூறிய பொழுது, “அப்படியாவது உண்கலன் என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? மகிழ்ச்சி அடைவோம்” என்றார். இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கண்டு உவகை கொள்பவர் அவர்.

 தனித்தமிழ் எனப்படும் தூய தமிழ் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல. “தமிழ்மொழி மேலும் தமிழர் பண்பாட்டு மேலும் பிறர் பிறரால் ஏற்றப்பட்டிருந்த மாசுகளின் வழியாகத் தொல்காப்பியத்திலும் மாசேற்றப்பட்டிருந்தது. தமிழ்நெறிக்கு மாறாகச் சொல்லப்பட்ட – உரை காணப்பட்ட, அவற்றின் அழுக்கை அறவே துடைத்து மேலைநாட்டு ஆய்வியல் அறிஞர்களின் எண்ணத்தில் படிந்திருந்த கறைகளையும் மாற்றினார்.”(புலவர் மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்,செந்தமிழ்க்காவலர் இலக்குவனார், பக்.14). இவ்வாறு தமிழின் தூய்மை துலங்கவும் பேரா.சி.இலக்குவனார் பாடுபட்டார்.

பேரா.சி.இலக்குவனார் தாம் பணியாற்றிய ஊர்களிலெல்லாம் தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அவை மூலமும் மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் நடத்தும் தமிழ் வகுப்புகள் மூலமும் தனித் தமிழ்ப்பற்றினை ஊட்டினார்; தனித்தமிழை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்பினார். வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், செய்தி யிதழ்கள் ஆகியவற்றில் அயற்சொற்களைக் களைந்து நல்ல தமிழ் வழங்கப்பாடுபட்டார். தமிழ்க்காப்புக்கழகம் முதலான தம் அமைப்புகளைத் தனித்தமிழ் பரவச்செயற்படுத்தினார்.

தாம் நடத்திய சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி முதலான பல் வேறு இதழ்கள்  மூலம் தனித்தமிழ் வளரப் பாடுபட்டார்.

  தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் எனப் பாடுபட்டவர் பேரா.சி.இலக்குவனார். எனினும் ‘தூயதமிழ்’ என்றும் ‘நல்ல தமிழ்’ என்றும் சொல்வதை விரும்புவதில்லை. அவ்வாறு சொன்னால், ‘மாசுடைத் தமிழ்’ என்றும் ‘கெட்ட தமிழ்’ என்றும் இருப்பதாகப் பொருள் வரும் என்பார். பயன்பாட்டில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது  பயன்படுத்துவோர் தவறு. அதற்காகத் தமிழ் மொழியைக் குற்றம் சொல்லக் கூடாது என்பார். எனினும் கலப்பிலிருந்து அடையாளப்படுத்துவதற்காகத் ‘தனித்தமிழ்’ எனச் சொல்லப்படுகிறது. தனித்தமிழ் என்ற சொல்லாட்சி அடிப்படையில் தமிழின் தூய்மையைக் காத்த பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தமிழ்க்காவலர் என்று அழைக்கப் பெறுகிறார்.

தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த  தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள்  களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!

வாழ்க தமிழ்! ஓங்குக இலக்குவனார் புகழ்!

இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

[கார்த்திகை 01, 2049/ நவம்பர் 17. 2018 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 109 ஆம் பிறந்த நாள்]

– தினசரி நாள் 17.11.2018