(தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை + புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி)

எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். அம் மலைநாட்டின் அடிவாரத்தில், தண்டகன் என்ற அரசன் பெயரிடப்பட்ட, தன் நிலைபேற்றிற்காக, ஆதி மனிதன் மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தில், அவனோடு போட்டியிட்டு வந்த, பருத்த உருவ அமைப்பு உடையவாய், அவன் பகை விலங்குகளாம் சிங்கம், புலி, யானை, காட்டெருமை, மலைப் பாம்புகளையும், அவைபோன்றே மனித உயிர்களை மாய்ப்பதில், அப்பெரு விலங்குகளிலும் கொடுமை வாய்ந்த, ஆனால், மிக நுண்ணிய உயிரினங்களாகிய பூச்சிப் பூஞ்சானங்களையும் பெருமளவில் கொண்டிருந்த வெப்ப மண்டலப் பருமரக்காடுகள் இடம் பெற்றிருந்தன.

குறிஞ்சியில், ஞாயிற்றின் வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் தன் பகை விலங்குகளிலிருந்தும், ஆதி மனிதன், தன்னை எளிதில் காத்துக் கொள்ளும், புகலிடங்களைப் பெரும் பாறைகளின் இடுக்குகளிடையேயும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மலைக்குகைகளுக்கிடையேயும் எளிதில் கண்டுகொண்டான். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்குப் பானையை, இன்னமும் அவன் கண்டுகொண்டானல்லன், இயற்கை நீரூற்றுகள், அவனுக்கு நீர் வழங்கத் தவறிவிடும் போது, மலை நாட்டில் கணக்கின்றிக் காணப்படும் பள்ளங்களில் நீர்த் தேக்கங்களைக் கண்டு பயன் கொண்டான்.

காலின் கீழிருந்து எளிதில் எடுத்துக்கொண்ட கூழாங்கல், அவனுக்குத் தொடக்கநிலைத் தொழிற்கருவியாகப் பயன்பட்டது. பல்வேறு வடிவங்களில் ஏராளமாகக் கிடைத்த கல்வகைகள், புதியன காணும் அவன் அறிவிற்கு ஊக்கம் ஊட்டின. அவனும் அவனுக்குத் தேவைப்பட்ட கோடரி, குத்தீட்டி, வெட்டுவாள், மண்வெட்டி முதலானவற்றை வடித்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான். பழங்கற்காலம் என அழைக்கப்படும் மனித நாகரீகத்தின் தொடக்கநிலை, இந்த மண்ணில், இவ்வகையில் உருப்பெற்றது. இக்காலத்தைச் சேர்ந்தனவாகிய பழங்காலக் கலைப்பொருட்கள், கடப்பை, நெல்லூர், வடார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பெருமளவில் பரவிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் சிறப்பாகக் காணப்படுகின்றன.

குறிஞ்சியில் பண்டைமனிதன், தொடக்கத்தில் கனி, கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, கிழங்கு வகைகளை உண்டே உயிர் வாழ்ந்திருந்தான். பருவநிலை மாறுதல் காரணமாக, இவ்வுணவுப்பொருள் கிடைப்பதில் ஏற்பட்டு விட்ட முரண்பாட்டு நிலை, அவன் உணவு வகையில் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்துக் கொள்ளத் தூண்டிற்று. விலங்குப் பகைவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு மேலாக இவ்வுணவுத் தேவையே, அவனை வேட்டையில் வல்லுநனாக ஆக்கிற்று. ஆகவே, மனிதனின் முதல் தொழில், வேட்டையாடுதலாய் அமைந்தது. பழங்கற்காலக் கருவிகளெல்லாம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இவ்வுண்மை, தொடக்க காலத்து வேடுவன், உலகின் பல பாகங்களிலும் அலைந்து திரிந்த பெரிய நாடோடியாம் என்பதை உறுதி செய்கிறது.

குறிஞ்சி நிலத்தின் சுற்றுச் சூழ்நிலை, மனித நாகரீகத்தின் வேட்டுவர் வாழ்வில் வில் – அம்பு, தீ மூட்டுதல் என்ற மேலும் இரு அரிய பெரிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணவும். வழிவகுத்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த குறிஞ்சி நிலங்களில் மூங்கில் ஏராளமாக விளைகிறது. குறவர் என அழைக்கப்படும் அந்நிலத்து வாழ் மக்கள், மூங்கிலின் – பிளவுபட்ட கழிக்களின் வளைந்துகொடுக்கும் இயல்பை நுண்ணியதாக அறிந்து, அவற்றை வளைத்து, அவற்றின் இரு முனைகளையும், உலர்ந்து நீண்ட கொடிகள் கொண்டு இறுக்கிப் பிணித்து, அவற்றினின்றும் நீண்ட முட்களை, இருந்த இடத்திலிருந்தே தொலைவிடங்களுக்கு விரைந்து செலுத்த அறிந்து கொண்டனர். தாரியசு , செருசசு என்ற மாவீரர்களின் படைவரிசையில் பெரிதும் பாராட்டப்பெற்ற பிரிவு, இந்திய விற்படையினர் தாம், இந்திய நாட்டு வேடுவன், புலியைத் தன் வில்லிலிருந்து செலுத்தும் ஒரே அம்பினால் இன்றும் கொன்று விடுவான் என்ற செய்திகள் மூலம், தம் தொழிலில் எக்காலத்தும் சிறந்தவர் என்ற பாராட்டினைப் பெற்றுவிட்ட இந்தியாவின் மலை நாட்டு மக்கள், மேற்கொண்ட, விற்படையின் தோற்றம் இதுதான்.

பண்டைக்காலத்துக் குறவர்களின் மற்றொரு கண்டு பிடிப்பு, மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாம் தீ மூட்டுதல், பழைய கற்காலத்துத் தொடக்க நிலையில், குறிஞ்சிவாழ் மக்கள் கடுமையான புயற்காற்று வீசுங்கால் மூங்கிற்கழிகள் ஒன்றோடொன்று கடுமையாக உராய்த்துக் கொள்ளும் போது, தீப்பொறிகள் எழக்கண்டு இரண்டு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று தேய்ப்பதன் மூலம் நெருப்பை உண்டாக்கலாம் என்பதைக் கண்டு கொண்டனர். நெருப்பை , அவன் முதன்முதலாகப் பயன் படுத்தியது, தான் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை வதக்குவதற்கே.

அக்குடியிருப்பில், ஆடவர், வேட்டை குறித்து வெளியே சென்றிருக்கும்போது மகளிர், கனிபறித்தல், கிழங்ககழ்தல், தங்கள் வாழிடங்களைச் சூழ, நிறைய விளைந்திருக்கும் புல்லரிசி, மூங்கிலரிசி, தினை அரிசிகளைத் திரட்டிக் கொணர்ந்து களஞ்சியங்களை நிரப்பிக்கோடல் போன்ற வற்றில் ஈடுபட்டிருப்பர்.

தங்கள் குழந்தைகளை வளர்ப்பது, மகளிரின் மற்றொரு பணியாம். அந்த நாகரீகப்பருவத்தில், மனிதன் வீடுகட்டத் தெரிந்து கொள்ளவில்லை. வெயில் மழைகளிலிருந்து காத்துக் கொள்ள, பருமரங்கள், பெரும்பாறைகள், இயற்கைக்குகைகள் அளிக்கும் புகலிடம் தவிர்த்து வேறு புகிலடம் தேட வேண்டிய தேவை இல்லாத அளவு, தென்னிந்திய தட்பவெப்பநிலை துணை புரிந்தமையால் வீடுகள் அருகியே தேவைப்பட்டன. தங்குவதற்கான இடத்திற்காக அல்லாமல் உணவுப் பொருட்கள் வடிவிலான பழங்காலச் செல்வத்தை ஈட்டி வைப்பதற்காகவே வீடுகள் முதன்முதலாகக் கட்டப் பட்டன. உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் தேவையைப் பழங்கால மனிதன் இன்னமும் உணரவில்லை. ஓரிடத்தில் நிலைத்து இராமல் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் நாடோடி வாழ்க்கை முறையின் தேவை, நிலையான குடியிருப்பு இல்லாக் குறைபாடு ஆகிய இவை ஆண்மகன் வாழ்வில், குடும்ப வாழ்வு பற்றிய இயல்பான உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. ஆகவேதான் குடும்பத்தில் பெண்ணே தலைவியாம் வாழ்க்கைமுறை, பழங்குடி மக்களிடையே முதலில் இடம் பெற்று வளர்ந்தது.

இவ்வகை வாழ்க்கைமுறை அமைப்பிற்கு, மற்றுமொரு சூழ்நிலையும் ஊக்கம் அளித்தது. ஆதிமனிதன் விரிவான மணச் சடங்குகளால் சிக்கவைக்கப்படவில்லை. கண்டதும் காதல், உடனடியாக ஏற்றுக்கோடல், இவற்றைத் தொடர்ந்து பையப்பைய இடம் பெற்றுவிட்ட பண்டை முறையிருந்தே திருமணச் சடங்காக உருப்பெற்றது. திருமண உறவு நிலையான ஒழுக்கமாக எல்லாக் காலத்தும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். கூறிய இக்காரணமும், தனக்கெனச் சொத்துரிமை கொள்ளும் முறை வளர்ச்சி பெறாத நிலையும், நிலையான குடியிருப்பு முறையில் பற்று இன்மையும், பெண்ணே குடும்பத் தலைவியாம் முறை, மிக நீண்ட காலம் நிலைத்திருந்தமைக்கு ஊக்கம் ஊட்டுவவாயின.

தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் ஆசை எப்போதும் மனிதனுக்குச் சிறப்பளிப்பதாம். அதிலும் குறிப்பாக மகளிரின் பெருவழக்கமாம். குறவர் மகளிர். இன்று போலவே, அன்றும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி எடுத்து, தங்கள் மாந்தர்களை ஒப்பனை செய்ய, அணிந்து கொள்ளும் மாலையாக, அவற்றைக் கோப்பதிலேயே தங்கள் ஓய்வு நேரங்களைக் கழித்தனர். அவர்களின் காதலர் வேட்டையில் தாம் கொன்று வீழ்த்திய புலியின் பல்போலும் வெற்றிச் சின்னங்களை அவர்களுக்கு அளிப்பர். அவர்களின் கழுத்தில் அணிந்து கொள்ளும் அதுவே, பிற்காலத்தில், ஒரு கயிற்றில் அல்லது கழுத்து அணியில் தொங்கவிடப்பட்டு, கணவன்மார் உயிரோடிருக்கப்பெற்ற மணமான மகளிரின் அடையாளச் சின்னமாகத் தென்னிந்தியாவில், பெரிதும் சிறப்பிக்கப்படும் தாலி ஆயிற்று. மற்றுமொரு வகை உடல் அணி, தென்னிந்திய மலைவாழ் மக்களாகிய பழங்குடியினரிடையே இன்றும் அழியாதிருக் கும் வழக்கமான பல இலைகளை, உலர்ந்த கொடி கொண்டு ஆடை போல் தைத்து இடையைச் சுற்றி அணிந்து கொள்ளும் தழையாடையாம்.

வறண்ட மணல் பரந்த நிலமாகிய பாலை, உலக நிலப்பரப்பில் வாழ்வதற்குரிய பகுதிகளில் ஒன்றாக, மிகமிக அருகியே மதிக்கப்படும். கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, முரட்டுவேடுவன் பாலை நிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக் கொள்ள வற்புறுத்தப்படுவான். வீரச் செயல் புரியும் ஆர்வத்துடன் பிறந்து விட்டவர் உள்ளத்தில், பாலையின் அழைப்பு, ஓர் எதிரொலியை ஏற்படுத்திற்று. நாடுவிட்டு நாடு செல்லும் ஓர் நாடோடி வாழ்க்கையில் காட்டும் அளவிறந்த ஆர்வமும், முறுக்கேறிய உடலும், உரம் வாய்ந்த உள்ளமும் வாய்க்கப்பெற்ற பலருடைய வாழ்க்கை யில் உணர்ச்சி ஊட்டிய தலையாய உந்து ஆற்றலாம்.

ஒரு சிறுகாலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம் வாய்ந்த, வீரம் வாய்ந்த மறவர். வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர்கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும். களிறு என்ற சொல்லும், வலிமை தரும் குடிவகைகளாகிய மதுவைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும்) பாலை வளமிலா நிலமாதலாலும், ஆண்டு வாழ் மக்கள் படைக்கலம் ஏந்துவதில் சிறந்து விளங்கினமையாலும், மற்றவர்களும் கள்வர்களும், பிற்காலத் தில் படைவீரர் தொழிலையும், அண்டை நிலங்களில் வாழும் உடலுரம் இல்லாத, ஆனால் செல்வத்தில் சிறந்திருந்தவர்களைக் கொள்ளையடித்து உண்ணும் கொடுந்தொழிலையும் மேற்கொண்டுவிடவே மறம் என்ற சொல், கொடுமை எனும் பொருள் குறிப்பதாகவும், கள்வர் என்ற சொல், திருடர் எனும் பொருள் குறிப்பதாகவும் மாறி விட்டன. ஆனால் தொடக்க நிலையில் மனிதர், வீரச் செயல் புரிவதில் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவே பாலைநில வாழ்வை மேற்கொண்டனர். ஆடவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து வாழ்க்கை, பழங்குடி மக்கள் வாழ்வில், குடும்பத் தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது.