1

தமிழின் தனிப்பெருந் தன்மைகள்

    மூவாயிரத்திற்கு மேற்பட்ட உலக மொழிகளுள், இன்றும் பல்வேறு வகையில் முதன்மையாகவுள்ளது, பொன்னினும் மணியினுஞ் சிறந்ததாக வும், உணவினும் மருந்தினும் இன்றியமையாததாகவும், தெய்வமும் திருமறையுமெனக் கண்ணியமாகவும் நம் முன்னோர் போற்றி வளர்த்த செந்தமிழே யென்பது, முகடேறி நின்று முரசறைந்து விளம்பத்தக்க முழு வுண்மையாகும். அதற்கேதுவான தமிழின் தனிப்பெருந் தன்மைகள் வருமாறு:

  1. முன்மை

    இஞ் ஞாலத்தில் மிகப் பழைமையான நிலப்பகுதி யென்று தமிழ் வரலாற்றால் அறியப்பட்டதும், நிலநூல், கடல்நூல், உயிர்நூல் ஆராய்ச்சி யாளரால் உய்த்துணரப்பட்டதும், மாந்தன் பிறந்தகமென்று மாந்தனூலாராற் கண்டுபிடிக்கப்பட்டதும், தெற்கே இந்து மாவாரியில் மூழ்கிப் போன குமரிக்கண்டம் (Lemuria) ஆகும்.

    “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
’’  

(சிலப். 11 : 19-20)

என்று ஆயிரத்தெண்ணூறாண்டுகட்கு முன்பே, முற்றத் துறந்த முழு முனிவரும் நடுநிலைக்குத் தலைசிறந்தவரும் பல்கலைப் பெரும்புலவரு மாகிய இளங்கோவடிகள் கூறியிருப்பது, கடுகளவுங் கட்டுச் செய்தியன்று. அத் தொன்னிலத்தில் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகத் தோன்றியதனாலேயே.

    ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்’’   

(தண்டியலங்கார வுரைமேற்கோள்)

என்று பண்டைச் சான்றோரால் தமிழ் சிறப்பித்துப் பாடப்பட்டது மென்க.

இனி, மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணியப் பிள்ளை, துடிசைகிழார் முதலிய பேரறிஞர் குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தைப்பற்றித் தெளிவாகக் கூறியிருப்பவும், என் அரை நூற்றாண்டு மொழியாராய்ச்சியால் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும், அது கட்டுக் கதையென்று கூறிவரும் வையாபுரிகளும் ஆராய்ச்சியிலிகளும்,

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்”
 

(குறள். 850)

என்னும் குறட்கே சிறந்த இலக்கியமாவர். மேலும், பல்கலைத் தெளிவும் நடுநிலை பிறழா வாய்மையுங் கொண்ட தலைசிறந்த உரையாசிரியருள் ஒருவரான அடியார்க்குநல்லார், தம் சிலப்பதிகார வேனிற் காதை யுரைத் தொடக்கத்தில், “அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால், குமரியாகிய பௌவ மென்றார் என்றுணர்க.” என்று தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம் பாண்டி நாட்டைப் பல்வேறு சிறு நாடுகளாகப் பகுத்துக் கூறியிருப்பது, பழைய ஏட்டினின்று பெயர்த்தெழுதிய மரபுவழி வரலாற்றுச் செய்தியாகவன்றி, புதுவது புனைந்ததாகவோ சேரநாட்டுப் பஃறுளியாற்றைப் பிறழவுணர்ந்த தாகவோ இருக்க முடியாதென்று கூறிவிடுக்க.

(தொடரும்)

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :   செந்தமிழ்ச் சிறப்பு