(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி)

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்

[1.முன்னுரை  – முற்பகுதி

  நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார். தத்தம் பகுதி அளவில் சிந்தனையாளராகத் திகழ்ந்து இலக்கியவாதிகளாக மிளிர்ந்து புரட்சியாளராக ஒளிர்ந்தவர்களையும் உலக  அளவில் மதித்துப் போற்றுவதே உலக வழக்கு. தமிழ்நாட்டின் அறிஞர்களையும் புரட்சியாளர்களையும்  மன்னர்களையும் தலைவர்களையும் நாம் சுருங்கியக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம். அவ்வாறில்லாமல் உலக அளவிலேயே பார்க்க வேண்டும். அத்தகைய உலக ஆன்றோர்கள் தமிழ் நாட்டில் எண்ணற்றோர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்படத்தகுந்த கடந்த நூற்றாண்டுப் புரட்சிப் போராளியே பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார்.

என் வாழ்க்கையே தமிழ்நலம் நாடிய போராட்டக் களம்தான்” எனப் பேராசிரியரே ‘என் வாழ்க்கைப்போர்’ என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பட்டுள்ளார். புகழ் வாய்ந்த தமிழறிஞர்களையும் நாட்டுத் தலைவர்களையும் கண்டுள்ள தமிழ் உலகில் மொழிகாக்கும் போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்தாம். கட்டுக்கடங்காத் தமிழார்வமும் பொங்கி எழும் பைந்தமிழ் எழுச்சியும் பேராசிரியரின் மாணவ வாழ்க்கையையே போர்க்களமாக அமைத்தது.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பேராசிரியரைப்பற்றிப் பன்வருமாறு தெரிவித்துள்ளார் (வீ.முத்துச்சாமி : இலக்குவனார் ஆய்வுப்பண்பு):

“மொழியில் தமிழின் தூய்மையையும் தலைமையையும் கடுமையாய்ப் பேணுபவர். குலவியலில், வெளிப்படையாகவேனும் மறைவாகவேனும் வெறியற்றவர். மதவியலில் நடுநிலையானவர், சமநிலையுணர்வினர்.

அன்பு, அடக்கமுடைமை, செருக்காமை, ஆரவாரமின்மை, அழுக்காறின்மை, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, கொள்கையுறைப்பு, அஞ்சாமை, ஊக்கமுடைமை, பணத்தினும் பண்பாட்டைப் பெரிதாகக் கொள்கை, தலைசிறந்த தமிழ்ப்பற்று, ஆகியன அவரிடம் நான் கண்ட பண்புகள்.”

  தலைவனுக்கும் போராளிக்கும் இருக்கவேண்டிய இப்பண்புகள் பேராசிரியரிடம்  குடிகொண்டிருந்தமையால்  அவரால் பிறரை வழிநடத்திச் செல்லும் போராளியாகத் திகழ முடிந்தது.

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் மேற்குறித்த நூல் வழியாகப் பின்வருமாறு பேராசிரியரின் புலமைச் சிறப்பையும் நாடு தழுவித் தனித்தமிழ் இயக்கம் நடத்திய மேன்மையையும் குறிப்பட்டுள்ளார்:

“ஆங்கிலக்கடல் நீந்தித், தமிழ்க்கரை ஏறிய அறிஞர் பெருமக்களில் ஒருவர். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் இலக்கண நூல்களில் நுணுகிய ஆராய்ச்சியும் உடையவர்.

உள்ளத்தில் கபடம் இன்றி, எதையும் வெளிப்படையாகவும் துணிவாகவும் கூறும் ஆற்றல் படைத்தவர்.

தமிழ் வளரவும் தமிழகம் செழிக்கவும் தமிழ்மக்கள் நல்வாழ்வு வாழவும் தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமின்றிப் பெரிதும் உழைத்து வந்தார்… தமிழ்க்காப்புக் கழகத்தை அவர்  தோற்றுவித்து மாவட்டங்களிலும் சிற்றூர்களிலும் அதன் கிளைகளை நிறுவிப்பெருந்தொண்டு புரிந்தவர். அவ்வியக்கத்தின் நோக்கம் பிற மொழிகள் கலப்பின்றித் தனித்தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பது. இது பெரும்பாலும் மறைமலை அடிகளின் வழியைப் பின்பற்றியது. இது தமிழகத்தில் ஓரளவு வெற்றிபெற்று வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.”

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்,

“ஆரவாரமும் சார்பும் அற்ற அவரது திறனாய்வுரைகள் நாம் விரும்பும் இடத்திலும் சீரியது, நாம் விரும்பாத இடத்தில்கூடச் சீரியதேயாகும். நான் அவரிடம் கருத்து வேற்றுமை அற்ற நிலையில்கூட, கருத்து வேறுபாடுடையவர்கள்  நலக்கூறுகளை அவர் உணர்ந்து பாராட்டுமிடங்களில் இவ்வுண்மை கண்டு வியந்துள்ளேன்.

 பெரியாரிடம் அசைக்கமுடியாத உறுதியான பற்றுடையவர். அவர் குறிக்கோள் வழியைத் தம் ஆராய்ச்சியால் கண்டு உறுதி கொண்டு விளக்குபவர்.

  எவ்வளவு பெரியவரையும், எவ்வளவு நண்பரையும், குற்றங்காணின் மழுப்பாது இடித்துரைத்துக் கண்டனக் குரல் எழுப்பும் நக்கீர மரபினர். இதனால் பலதடவை பதவிக்கே ஊறு நேர்ந்ததுண்டு.”   

என்று பேராசிரியரின் நடுநிலைத் திறனாய்வையும் குற்றம் கண்டவிடத்து இடித்துரைக்கும் துணிவையும் பாராட்டி உள்ளார்.

(தொடரும்) 

   இலக்குவனார் திருவள்ளுவன்