தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – தொடர்ச்சி)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை)
பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:
பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட நற்றமிழர்களாக மாற்றி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் அறியவில்லை போலும். ஊட்ட வேண்டிய தமிழ் உணர்ச்சியை ஊட்ட வேண்டிய அளவுக்கு ஊட்டிய பிறகு, தட்டி எழுப்ப வேண்டிய அளவுத் தமிழர்களைத் தட்டி எழுப்பிய பிறகு, தமிழ்மொழி தரணிபுகழ்பெற்றுச் சிறந்தோங்க வேண்டும்; தமிழகத்தில் தமிழில் ஆட்சி அலுவல் புரிய வேண்டும்; தமிழிலே அனைத்தும் கற்பிக்கப் பெற வேண்டும்; என்ற கருத்துகளை மக்களிடையே பரப்பிய பிறகு, புலி வெளியே கிளம்பிய பின்னால், குகையைப் பூட்டுவதைப்போலப்பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தி உள்ளார்கள்.
பேராசிரியரை (இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதனால், வேலையைப் பறித்துத் துன்பத்திற்கு உள்ளாக்குவதனால், அரசினர்க்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை. பேராசிரியரின் (இலக்குவனாரின்) தொண்டால், நூறாயிரக்கணக்கான தமிழ் உள்ளங்கள், எரிமலையோ புயற்காற்றோ என்று வியக்குமளவிற்கு உணர்ச்சியூட்டப் பெற்றிருக்கின்றன என்பதை அரசினர் அறியார்போலும். பேராசிரியர்(இலக்குவனார்) ஊட்டிய தமிழ்உணர்ச்சி தமிழர் உள்ளங்களில் பெருந்தழலாகக் கொழுந்து விட்டெரிகிறது. ஆட்சியாளர்கள் சில சமயங்களில் ஏமாளித்தனமாக நடந்து கொள்வார்கள் என்பதற்குப் பேராசிரியரை(இலக்குவனாரை)க் கைது செய்து சிறைப்படுத்தியது ஓர் எடுத்துக்காட்டாகும். அவர் இந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்த தொடக்கக் காலத்திலேயே கைது செய்திருந்தால் புத்திசாலித்தனமான அரசு என்று சொல்லலாம்.
செய்ய வேண்டியனவெல்லாம் செய்தான பிறகு, அவர்தம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பெறவேண்டிய தமிழ் உணர்ச்சி அனைத்தும் பெற்றுத், தமிழ் காக்கப் புறப்படும் வேளையில், பேராசிரியரை(இலக்குவனாரை)க் கைது செய்தது மேலும் தமிழார்வத்தைக் கிளறி விடுவதாகத் தூண்டி விடுவதாக அமையுமே தவிர, தமிழ் உணர்ச்சியைத் தணிப்பதாகவோ, ஆர்வத்தைக் குறைப்பதாகவோ எப்படிக் கூற முடியும்? நாட்டில் தமிழார்வம் கொழுந்துவிட்டுத் தழலாய் எரிகின்ற போது, பேராசிரியரை(இலக்குவனாரை)க் கைது செய்வதும், பெருந்தொல்லைக்கு ஆளாக்குவதும், சமையலெல்லாம் ஆன பிறகு அடுப்பை அணைத்தது போலாகுமே தவிர, அரசினர்க்கு என்ன பயன்கிட்டப் போகிறது? சமையலான பிறகு அடுப்பை அணைத்துவிட்டால் மறுபடியும் அடுப்பை மூட்ட முடியாதா? அந்த அடுப்பை இப்போது பொது அடுப்பாக மாற்றிவிட்டார்கள். யாரும் அந்த அடுப்பில் சமைக்கலாம். இலக்குவனாரைக் கைதுசெய்து சிறைப்படுத்தியதும் வேலூர்ச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியதும் வேலையைப் பறிக்கத்தக்க சூழ்நிலையை உருவாக்கியதும் சிறையிலிருந்து வெளியே போகச் செய்து ஒற்றர்களைக் கொண்டு உளவறியச் செய்வதும் ஆதிக்கத்தில் ஈடுபாடு கொண்ட ஓர் அரசு ஈடுபடுகின்ற ஏமாளித்தனமான செயல்களில் ஒன்றுதான்.
மொழிப்போரில் முப்பதாண்டு காலமாக ஈடுபட்ட பேராசியர் வகித்த முன்னோடிப் பங்களிப்பைப் பேரறிஞர் அண்ணா அவர்களின் உரை தெள்ளிதின் விளக்குகிறது.
(தொடரும்)
–இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply