(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை – தொடர்ச்சி)

2. மாணவரும் தமிழும்


(15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)


தமிழ்த் தோழர்களே!


இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் மாணவ மணிகளை என்னுடைய அகக் கண்களால் பார்த்து மகிழ்கிறேன். தலைவர் முன்னுரை என்று நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருக்கின்றது. என்னுடைய முன்னுரை ஒழுங்காகவோ, அல்லது தொடர்ச்சியாகவோ இராது.


இப்பொழுது என் உடல்நிலை ஒழுங்காகப் பேச இடந்தராமைக்கு வருந்துகிறேன். உங்கள் முன்னிலையில் முதுமை உடலுடன் காட்சி யளிக்கிறேன். ஏதோ இளம்பிள்ளைகள் தமிழ் மன்றத்திலே பேச என்னை அழைத்திருக்கிறார்களே என்று பேச வந்துள்ளேன்.

மன்று மன்றமானது. மன்று என்றால் மரத்தடிக்குப் பெயர். பழைய சரித்திரத்திலே மன்று என்ற பொருளை அதிகமாகக் காணலாம். மன்று என்று நான் குறிப்பிடுகின்ற மரத்தடியிலே முன்னர், தமிழ் மன்றம் கூடியது. மரத்தடிகளிலே கூடியது போய் மேல்மாடிகளிலே கூட ஆரம்பித்தார்கள். இப்பொழுது மாடிகள் மேல் மாடிகள் ஏறிக்கொண்டு இருக்கின்றன. மேல்மாடிகள் இப்பொழுது பல காட்சி யளிப்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். மேல்மாடிகள் பல உண்டாக்கிக் கொண்டே போகின்ற கட்டம் இருக்கின்றதே, அந்தக் கட்டத்தின் வளர்ச்சியைத் தடுக்க இப்பொழுது விஞ்ஞான ஆராய்ச்சி சந்திரமண்டலம், சுக்கிரமண்டலம் வரை போய் சூரியமண்டலமும் போகமுடியுமா முடியாதா என்று ஓர் ஆராய்ச்சி நடந்துகொண்டு வருகின்றது. முன்பு நடைபெற்ற மன்றங்களிலே அறிவானது ஓங்கி வளர ஆரம்பித்தது. முதல் முதலில் மரத்தடியிலே, தமிழ் மரத்தடியிலே தமிழ் வளர ஆரம்பித்தது. பலமரங்கள் கூடியுள்ள இடத்திலே பச்சையப்பன் கல்லூரியை அமைத்து இருக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி என்றால் பசுமையான கல்லூரி என்று பொருள்.

நான் நீண்டநேரம் பேச இயலாததற்குப் பெரிதும் வருந்துகிறேன். தமிழ் என்றால் இனிமை. தமிழ்ப் பிள்ளைகளாகிய உங்கட்கு முக்கியமாக வேண்டியது இனிய மனம், இனிய செயல், இனிய சொல். சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் முறையில் இதை உங்கட்குச் சொல்லுகிறேன். இனிய மனம் எப்பொழுது மலரும்? அரும்பும்? மற்ற உயிரையும் தன் உயிர்போல் பாவிக்கும் பொழுது தான் இனிமை மனம் உண்டாகும். அறிவோடு, அருளோடு யாருக்கும் தீங்கு செய்யாது இருக்க வேண்டும். உலகத்திலுள்ள உயிர்களுக்கு எக் காரணம் பற்றியும் தீங்கு செய்யாதிருக்கவேண்டும். தீங்கு செய்யாதிருக்கும் நிலைமை தமிழ் நாட்டிலே இன்னும் உண்டாகவில்லை.

தமிழ் நாட்டிலே இன்று எங்கும் பொறாமை தலைவிரித்தாடுகின்றது என்று பேராசிரியரால் சொல்லப்பெற்றது. மக்கள் அனைவரையும் உலகத்திலே ஒருமைப்பாடாக எப்பொழுது பார்க்கப் போகிறோமோ? உலகத்திலே இப்பொழுது எத்தனை சாதிப் பூசல்கள், வகுப்புப் பூசல்கள் மலிந்து கிடக்கின்றன? இந்த நூற்றாண்டிலேகூட நாட்டிலே ஒருமைப்பாடு ஏற்படுமென்று எண்ண முடிய வில்லை. உலகத்திலே போராட்டங்கள் நிரம்ப இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சட்டங்கள் நிரம்ப இருக்கின்றன. எந்த நாட்டிலே சட்டங்கள் அதிகமாகின்றனவோ அந்த நாட்டிலே மக்கள் மனம் பண்படாது. நான் சொல்வதிலிருந்து மக்களுடைய மனம் பண்படவில்லை என்று உங்களுக்கு நன்கு தெரியும். அருள், அறம் அரும்ப வேண்டுமானால் முகிழ்க்க வேண்டுமானால் மக்களுடைய மனம் பண்படவேண்டும். சிறப்பாக மனிதரிடத்திலே தேவைக்கு அதிகமாகப் பொருள் சேர்க்கும் குணம் வளர்ந்து வருகின்றது. இது தவறு. மிகு பொருள் விரும்பாமை மக்களிடையே பரவ வேண்டும்.

பழைய காலத்திலே தமிழர்கள் தேவைக்கு அதிகமாக எதையும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. இனிய மனம் உங்களுக்கு வாய்க்கப் பெறவேண்டும். அதிகப் பொருளாசை இருத்தல் கூடாது. ஆனால் இன்று நாட்டிலே நடப்பதென்ன? சண்டைகள் பீரங்கிகள் பெருகிக் கொண்டே யிருக்கின்றன. நான் பழைய ஆள். ஆனால் புதுமை கண்டு ஓடுகிறவன் அல்ல; அறிவியல் கலையிலே நாட்டம் கொண்டவனே.


மிகு பொருள் விரும்புதல் அமைதியை உண்டாக்குமா? உண்டாக்காது. பொருளாதாரம் படித்த ஆசிரியர்களை, பெரிய கலைஞர்களை எல்லாம் மிகுபொருள் விரும்பல் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள்? இதனால் உலகத்திலே பெரிய போராட்டம். அந்தப் போராட்டத்திடை நாம் வாழ்கின்றோம். உற்பத்திகள் பெருகவேண்டும். மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப உற்பத்திகள் பெருகவேண்டும். உணவு, உடை, உறையுள் இன்றி மக்கள் பல்லோர் அல்லலுறு கிறார்கள்.


அமைதி வேண்டுமென்று கிராமத்திற்குச் சென்ற அன்பர் ஒருவர் “அமைதியோடு அருட்பா படிக்க வேண்டுமென்று கிராமத்திற்கு வந்தேன். ஆனால் கிராமத்திலேகூட போராட்டம் நடந்துகொண்டே யிருக்கின்றது” என்றார். முன்பிருந்த அமைதி கிராமங்களிலும் இல்லை. பாட்டாளிகள் துன்பத்தோடு வாழ்கின்ற கொடுமை நன்றாகத் தெரிகின்றது. இதற்கு அறிவு என்ன செய்யவேண் டும்? Physics, Chemistry, Geology & Zoology படித்த மாணவர்களே நீங்கள் என்ன செய்யவேண்டும்? நீங்கள் வக்கீலாகவோ அன்றி கணக்குத் தலைவர் அலுவலகத்தில் ஓர் எழுத்தராகவோ  ஒரு காவல் உத்தியோகத்திலிருந்து பிறகு கா.து.க.( D.S.P.) ஆகி அதன் பின்னர்க் காவல் ஆணையராக ஆகவோ எண்ணுகின்றீர்களா? நீங்கள் விஞ்ஞானத்தைப் படித்ததைப் படித்து என்ன பயன்? நீங்கள் படிக்கும் விஞ்ஞானம் மக்களுக்குப் பயன்படும் துறை யிலே நீங்கள் கல்வி அறிவினைப் பெறல்வேண்டும். ‘காசுபியன் கடல்’ அதற்குப் பக்கத்திலே, (நில நூற் படத்தைப் புரட்டிப் பாருங்கள்) கடற்கரைக்கருகே நரி, ஓநாய் ஓடிக்கொண்டிருந்தன.  இரசியா தேசத்திலே படித்த ‘புவியியலாளர்’ ஒருவர் இதைப் பார்த்தார்.

இருபத்தைந்துபேர் முப்பதுபேர் சேர்ந்துகொண்டு ‘ காசுபியன்’ கடலில் நுழைந்தார்கள். அதிலே கொஞ்சம் உப்பிருந்தது. அந்த உப்பினை எடுத்து விட்டார்கள். பின்னர் அந்தத் தண்ணீரைப் பாய்ச்சி பழங்கள், கோதுமை முதலியவற்றை விளைக்க ஆரம்பித்தார்கள். விஞ்ஞானம் படித்தவர்கள் தங்கள் அறிவை இவ்வாறு பயன் படுத்தவேண்டும். பட்டிக்காட்டிலே வாழ்கின்றவர்கள் பெரும்பாலும் எலும்பும் தோலுமாகக் காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் புளியங்கொட்டையையும், கிழங்கையும் சாப்பிடுகிறார்கள். சிலர் அகப்பட்ட புல்லையும் தின்று வாழ்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் என்னை? தலையாய காரணம் என்னை?

கிராமங்களுக்கு ஏற்றாற்போல நகரங்களிலே உற்பத்தி அதிகமில்லை. முன்பு பால கங்காதர திலகர் பேசும் பொழுது குறிப்பிட்டார் : “நாளுக்கு நாள் கிராமங்கள் நகரங்களாக மாறிக்கொண்டே வருகி ன்றன என்றார்.”

மழையை வரவழைக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. மழையை உண்டாக்கச் செயற்கை முறையைக் கண்டிபிடித்திருக்கிறார்கள். தாதுப் பொருள்களை ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். பல இடங்களில் பழச்சோலைகளை உண்டாக்க வேண்டும். கல்வி அறிவை மக்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்.

நான் இதுகாறும் ஆற்றிய சொற்பொழிவில் குற்றம் குறை இருக்கலாம். நான் மனிதன். குறை பாடுடையவனே. குற்றம் குறை இருந்தால் மன்னிக்க. நீண்டநேரம் பேச இயலாததால் இந்த அளவோடு முடித்துக்கொள்ளுகிறேன்.

உலகம் வாழ்க! உலகம் வாழ்க! உலகம் வாழ்க!
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்