‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்
‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்
புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி
எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ் நாட்டை அடையும் புடையுமாகக் கிடந்த பன்னிரு நிலத்தார் தம் குறிப்பினையே இலக்கணமாக உடைய திசைச் சொற்கிளவிகள்” என்று கூறுகின்றார். ஏனைய உரையாசிரியர்களான சேனாவரையர், நச்சினார்க்கினயர் ஆகிய இருவரும் செந்தமிழ்நாடு, கொடுந்தமிழ்நாடுகள் பன்னிரண்டு இரண்டிலும் இளம்பூரணரின் கருத்தையே ஏற்கின்றனர்.
ஆனால் தெய்வச்சிலையார் வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுமையும் செந்தமிழ் நாடாகவும், பன்னிரு நிலங்கள் என்பவற்றைத் தமிழகத்தின் பன்னிரண்டு பகுதிகளாகவும் கொள்கிறார். தற்போது கூறப்படும் வட்டார வழக்கு அல்லது கிளை மொழி என்பதையே தெய்வச்சிலையார் திசைச்சொல் எனக் கருதுகிறார்.
ஆக உரையாசிரியர்களின் வாதங்களின் ஊடாக வெளிப்படும் கருத்துகள் ஐந்து வகையாகின்றன.
- திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்
- வேங்கடம் – குமரி இடைப்பட்ட பரப்பில் ஒரு பகுதி மட்டுமே செந்தமிழ்ப்பகுதி, ஏனையவை கொடுந்தமிழ்ப் பகுதிகள்.
- வேங்கடம் – குமரிக்கு அப்பாலும் கொடுந்தமிழ் உண்டு.
- வேங்கடம் – குமரி இடைப்பட்ட பகுதி முழுவதும் செந்தமிழ்ப்பகுதி, அதன் உட்பிரிவுகளே திசைச்சொற்கள்.
- வேங்கடம் – குமரி இடைப்பட்ட பகுதி செந்தமிழ்ப் பகுதி. அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் கொடுந்தமிழ்ப் பகுதிகள்.
இவ்வாறு எடுத்துக்காட்டுகிற நூலாசிரியர் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறார்.
- திசைச்சொல் என்பது தமிழ் அல்லாத பிறமொழிச் சொற்களா?
- திசைச்சொல் என்பது தமிழகம் சூழ்ந்த பிற பகுதிகளில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களா?
- திசைச்சொல் என்பது கொடுந்தமிழா?
இக் கேள்விகளுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலங்களாவன : தமிழகம் சூழ்ந்த பன்னிருநாடுகள் எனவும் அவை தமிழ் திரிந்து கொடுந்தமிழான தமிழின் கிளை மொழிகள் எனவும் அளித்துள்ள விளக்கத்திலிருந்து இந்நூலாசிரியர் மாறுபடுகிறார்.
தன் வாதத்திற்கு வலிவு சேர்க்கும் முறையில் கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம் ஆகியவற்றிலிருந்தும் புறநானூற்றில் வெள்ளைக்குடிநாகனார் பாடிய பாடலிலிருந்தும் எடுத்துக்காட்டுகளை மேற்காட்டுகிறார்.
பிற்காலத்தில் மாதவச் சிவஞான முனிவர் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு” என்பதில் “செந்தமிழ் இயற்கை சிவணிய” என்பதை ஒரு தொடராக்கி, ‘சிவணிய’ என்பதைச் ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, அத்தொடருக்குச் ‘செந்தமிழின் உண்மையைப் பொருந்தி உணரும் பொருட்டு’ எனவும், ‘நிலத்தொடு முந்துநூல் கண்டு’ என்பதை ஒரு தொடராக்கி, “நிலத்து மொழியொடு முற்பட்டுத் தோன்றிய அகத்தியம் என்னும் முதல் நூலை ஆராய்ந்து” எனவும் பொருள் கொண்டு செல்கின்றார். “தமிழ் என்னும் மொழி எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலேயே அதனுடன் ஒரு சேரத் தோன்றியதாம் அகத்தியம் என்னும் இலக்கண நூல். அதன் வழி நூலாகத்தான் தொல்காப்பியம் தோன்றியதாம்” எனக் கூறுகிறார் முனிவர்.
‘சிவணுதல்’ என்னுஞ் சொல்லைத் தொல்காப்பியர் 24 இடங்களில் பயன்படுத்துவதையும் அங்கெல்லாம் பொருந்துதல், இயைதல் என்பனவன்றி, சூழ்தல் என்னும் பொருள் பொருந்துமாறில்லை எனவும் ஆசிரியர் எடுத்துக்காட்டுவது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.
சிலப்பதிகாரம் நூற்கட்டுரையில்,
குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கின் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
என்னும் பகுதி தொல்காப்பியர் உரையாளரின் கொடுந்தமிழ்க் கோட்பாட்டிற்கு மூலமாகத் திகழ்கிறது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சங்கப் பாடல்களிலும் கொடுந்தமிழ் என்னும் சொல்லாட்சி இல்லை, என்பதையும் நயம்பட ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். எனவே கிளைமொழி எனவும் வட்டார வழக்கு எனவும் இன்று சுட்டிக்காட்டப்படுவதையே அன்று தொல்காப்பியர் திசைமொழி எனக் கூறினார் என ஆசிரியர் எடுத்துக்கூறுவது எல்லா வகையிலும் ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
தமிழ்மொழியில் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் வேறுபட்ட வகையாகும் நிலையை மாற்றிப் பேச்சு மொழியையே எழுத்துமொழியாக்கி இலக்கியம் உண்டாக்கி, இலக்கண நெறிப்படுத்தி விடலாம் என்ற தவறான கருத்தைத் ‘தமிழ், தமிழாக நிலை பெறுக’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை ஆராய்கிறது.
தமிழ்மொழியின் வழிமரபை ஆராயின் மொழி நடை மூவகைப்பட்டது என்பது தெளிவாகும் என்கிறார் ஆசிரியர்.
- திருத்தமற்ற பேச்சுமொழி
- திருத்தமுறு பேச்சும் எழுத்துமாகிய மொழி
- செய்யுள் எனப்படும் இலக்கிய மொழி
தொல்காப்பியருக்கு முன்பிருந்தே பேச்சு மொழியும் செய்யுள் மொழியுமல்லாத எழுத்து மொழி ஒன்று உண்டு என்பதற்கு தொல்காப்பியத்திலேயே சான்றுகள் பல உண்டு என ஆசிரியர் எடுத்துக்காட்டும் விதம் சிறப்பாக உள்ளது.
தொல்காப்பியருக்கு முன்பிருந்து சங்கக் காலம் வரையும் யாப்பு வழிப்பட்டதே உரை என்பது உறுதி. அக்காலத்திய பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒன்றெனக் கொள்ள வழியில்லை. அக்காலத்திய பேச்சுமொழி எத்தகையது என்பதற்கு எழுத்துச்சான்று இல்லை. ஆனால், பல்லவர் காலம் தொடங்கிப் பேச்சு மொழி, எழுத்து மொழி, செய்யுள் மொழி ஆகிய மூன்றிற்கும் எழுத்துச் சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர் காலம் உட்பட இன்று வரையிலும் யாப்பு வழிப்படும் செய்யுள் இலக்கியங்கள், செய்யுள் மொழிக்குச் சான்றாகின்றன. இலக்கண, இலக்கிய உரைகள் பேச்சும், செய்யுளும் அல்லாத எழுத்து மொழிக்குச் சான்றாகின்றன. பல்லவர் காலம் முதல் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் அந்தந்தக் காலத்திய பேச்சு மொழிக்குச் சான்றாகின்றன.
கல்வெட்டுகளில் பேச்சுமொழித் தாக்கமும் உண்டு; கல்வெட்டாளரின் குறைக்கல்வித் தாக்கமும் உண்டு. கல்வெட்டுத் தமிழின் பெரும்பகுதி பேச்சு மொழிக்கு சான்றாக இருப்பதை மறுப்பதற்கில்லை என்று கூறும் ஆசிரியர் வட்டார வழக்கு இலக்கியங்கள் போன்றவற்றிலிருந்து ஏராளமான சான்றுகளை எடுத்துக் காட்டுகிறார்.
காலந்தோறும் பகுதி தோறும் பேசுகிறபடியே எழுதுதல் என்ற பழக்கத்தைப் பின்பற்றினால் இன்றைய தமிழர்கள் அடுத்த நூற்றாண்டில் வெவ்வேறு மொழியின மக்களாகப் பிளவுபட்டுச் சிதறிப்போவார்கள் என ஆசிரியர் எச்சரிக்கிறார்.
தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு உயர்திணை, அஃறிணை, அகத்திணை –புறத்திணை என்னும் பகுப்பு முறையாகும்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி திணைப்பகுப்பு குறித்து மார்க்சிய நோக்கில் கூறியுள்ள கருத்தினை மறுக்கும் வகையில் ‘தமிழ்த்திணை வகுப்பும்-மார்க்சிய நோக்கும்‘ என்னும் கட்டுரை அமைந்துள்ளது.
தமிழ்கூறும் நல்லுலகு நன்கு அறிந்த தமிழறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான சிவத்தம்பி அவர்கள் திணையாவது ஒழுக்கமெனக் கொள்வதற்கும் இப்பாகுபாடு பகுத்தறிவு நெறிபட்டதென கருதுவதற்குமான தடைகள் பலவற்றை ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’ என்னும் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இதற்கு விரிவாக மறுப்பு எழுதியுள்ள ஆசிரியர், ஆறாவது அறிவாக மனன் என்பதை இனங்கண்டு அதன்வழி மனிதரை மட்டும் ஆறறிவு உயிரினமாகப் பிரித்துப் பேசும் கருத்தியலுக்குப் பின்னணி தமிழர் அல்லாத பிறரிடமிருந்து வந்திருக்க முடியாது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்திலேயே ஆறாவது அறிவு குறித்த கருத்து தமிழரிடம் இருந்து வந்துள்ளது. எனவே இது தமிழ்ச் சமூகத்திற்கே உரிய ஆய்வுக் கோளாகவே கொள்ள வேண்டும் என்று கூறுதல் பாராட்டத்தக்கது.
திணைப் பகுப்பில் மானிட சமத்துவம் மட்டுமின்றி ஆண்-பெண் சமத்துவமும் அதன் உள்ளடக்கமாக உள்ளது.
கண வாழ்க்கையிலிருந்து நிலமானிய அமைப்பிற்கு மாறிய நிலையினைத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டுவதாகப் பேராசிரியர் சிவத்தம்பி கூறுகிறார். இக்கருத்திலிருந்து நூலாசிரியர் பின்வருமாறு மாறுபடுகிறார்.
இலக்கண ஆசிரியர் இயம்பும் மொழி மரபுகள் அனைத்தும் மக்களின் வழி மரபுகளன்றி வேறு அல்ல. எனவே இலக்கணச் செய்திகளைச் சமூகவியல் நோக்கில் ஆராய்தல் மிகு பயனுடையது எனலாம். குறிப்பாக அவற்றைப் பொருள்முதல்வாத பகுப்பாய்வு நெறிப்படி ஆராய்தல் பயன்மிகு செயலாம் என்பதிலும் மறுப்பில்லை. அதே போது இலக்கிய ஆசிரியரினும் இலக்கண ஆசிரியர் சொல்லின் சுருக்கமும், பொருளில் திட்பமும், கடைப்பிடிப்பதில் விடாப்பிடியாகும் இயல்பினர் என்பதையும் உளம் கொள்ள வேண்டும். எனவே இலக்கண வழி நாம் உய்த்து உணரும் செய்திகளை அவ்விலக்கண நெறிப்படி தெளிவுபடுத்திக் கொள்வதே முறையான ஆய்வுக்கு அடிப்படையாகும். அதுவே நிறைவான முடிவுக்கு வழித்துணையாகும் என்கிறார்.
தமிழின் வழிமரபை ஒட்டித், தமிழில் தன்வினை – பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன என்பவற்றைத் தமிழில் தன்வினை-பிறவினை என்ற கட்டுரை கூறுகிறது. 45 துணைத் தலைப்புகளில் ஏராளமான எடுத்துக்காட்டுகளை மேற்கோள்களாகக் காட்டி ஆசிரியர் விளக்கும் முறை அவரது இலக்கணப் புலமைக்குச் சான்று கூறுகிறது.
வடமொழிச் சொற்களை, வடமொழி ஒலிப்புக்கு ஏற்றவாறு தமிழிலும் எழுதுவதற்கான வரிவடிவங்களே கிரந்த எழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக இவ்வெழுத்துகள் தமிழர்களின் பயன்பாட்டில் உள்ளனவாயினும், தமிழ் நெடுங்கணக்கில் இவை சேர்க்கப்படவில்லை.
பிறமொழிச் சொற்களின் ஒலிக்கூறுகளை நமது மொழிக்குரிய ஒலிக்கூறுகளாக மாற்றி வழங்குவதே முறையாகும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். தொல்காப்பியர் காலம்வரை தமிழில் வடமொழிக் கலப்பு மட்டுமே இருந்தது. ஆனால், அவர் காலத்திற்குப் பின் பல்வேறு மொழிகளின் கலப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதை விளக்குவதற்காக, ‘தமிழ், கலப்பு மொழியாக வேண்டாம்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரை ஆழமானதாகும்.
பல்லவர், பிற்கால சோழர், பிற்கால பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் காலங்களில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் எந்தெந்த வகையில் எல்லாம் பிறமொழிக் கலப்புகள் ஏற்பட்டன என்பதை ஆசிரியர் விரிவாகக் கூறியுள்ளார்.
இலக்கியத் தமிழிலும் எவ்வாறு பிறமொழிச் சொற்கள் கலந்தன என்பதை நூலாசிரியர் சங்க இலக்கியங்கள், சிலம்பு, மேகலை, பக்தி இலக்கியம் சேக்கிழார், கம்பர் போன்றவர்களின் படைப்புகள் 13-ஆம் நூற்றாண்டில் உரையாசிரியர்கள், அதற்குப் பின்னர் தோன்றிய சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றிலும் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுந்தரனார், வள்ளலார், 20ஆம் நூற்றாண்டில் பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் படைப்புகளிலும் புகுந்துள்ள வடசொற்கள் பட்டியலை ஆசிரியர் விரிவாகத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
வடமொழியில் கல்வெட்டுப் பொறிப்பதற்காக உருவாக்கப் பட்டவையே கிரந்த எழுத்துக்கள் ஆகும். வடமொழியைத் தமிழில் கலப்பதற்காக அவை உருவாக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகவும் துணிவாகவும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் இடைக்காலத்தமிழ்ப் புலவர்களில் சிலர் வடமொழி தெய்வமொழி என்ற மயக்கத்திற்கு ஆளானதால் கிரந்த வடிவங்கள் மெல்ல மெல்லத் தமிழ் இலக்கியங்களிலும் இடம்பெற்றுவிட்டன என ஆசிரியர் கூறுகிறார்.
இதே கட்டுரையில் ஒருங்குகுறி என்பது பற்றியும் ஆசிரியர் ஆய்ந்து தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
‘நாணமும் அச்சமும் நாய்க்குணங்களா?’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரை பழமைவாதத்திற்கும் புதுமைவாதத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைப் போக்கும் நோக்குக்கொண்டாகும்.
வள்ளுவர் அளித்த திருக்குறள் அறத்துப்பாலின் ஒரு பகுதியாக துறவறவியலில் கொல்லாமை, வாய்மை, என்னும் இரண்டனுள் ஒன்றை மேலாகவும், மற்றொன்றைக் கீழாகவும் கொண்டுரைத்தார் என்று கூறப்படும் கருத்தைப் ‘பொய்யாமை பொய்யல்ல’ என்னும் கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
திருக்குறளில் உள்ள ‘ஊழ்’ அதிகாரத்திற்கு ஒரு புத்துரையாக ‘ஊழுக்கு ஊழல் செய்யற்க’ என்னும் கட்டுரை அமைந்துள்ளது. பல்வேறு குறட்பாக்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் சிறப்புகளை ஆசிரியர் விளக்கும் விதம் குறள் கருத்துக்களில் அவர் எவ்வளவு ஆழமாகத் தோய்ந்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறட்பாவில் உண்மை விளக்கம் யாது என்பதை வள்ளுவர் வழியில் ஆசிரியர் ஆராயும் கட்டுரையே ‘தோட்டியும் தொண்டமானும்’ என்பதாகும்.
பரிமேலழகரில் தொடங்கித் தற்காலத் தமிழறிஞர்கள் வரை இக்குறளுக்கு வெவ்வேறு வகையான பொருள் கூறுவதை அலசி ஆராய்ந்து வள்ளுவரின் உண்மைக் கருத்து என்ன என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தலைப்பில் கணியன் பூங்குன்றனார் எழுதியுள்ள புறநானூற்றுப் பாடல் யாரை, எதைக்கூற எழுந்தது என்பதை ‘உலகளாவுதலா – உள்ளுர் முயங்குதலா?’ என்ற கட்டுரை விரிவாகக் கூறுகறிது.
கணியன் பூங்குன்றனாரின் இந்தக் கருத்து “மனிதக் குலம் முழுவதையும் ஒன்றெனக் கொள்ளும் மானுட ஒற்றுமையைப் பற்றியதல்ல. சேரர், சோழர், பாண்டியர் மற்றும் குறுநில மன்னர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர்களை ஒன்றுபடுத்துவதற்காக இப்பாடல் எழுந்தது” என்ற தவறான கருத்தோட்டமும் ஒரு சாராரிடம் உள்ளது.
சங்கப் பாடல்கள் எழுந்த காலக்கட்டத்தில் தமிழகம் மேற்கே உரோமாபுரி, கிரேக்கம் போன்ற நாடுகள் வரையிலும், கிழக்கே சீனம் வரையிலும் தமிழ் வணிகர்கள் சென்று வாணிபம் நடத்தினர். பிறநாட்டு வணிகர்கள் தமிழகம் வந்து சென்றனர். எனவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி பேசும் மக்களைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். நெருங்கி உறவாடினர். எனவே தமிழர்களின் உலகளாவிய சிந்தனையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது என இந்நூலாசிரியர் கூறும்போது நாம் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழ் இலக்கண – இலக்கியங்களில் முற்றிலுமாகத் தோய்ந்து, ஆய்ந்து தெளிந்தவர் இந்நூலாசிரியர் புலவா சா.பன்னீர்செல்வம் என்பதற்கு இந்நூல் சான்று பகருகிறது. மிகச் சிறந்த ஆய்வுக் கருத்துகளை மிக எளிமையான முறையிலும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இந்நூலாசிரியர் வழங்கியிருப்பதின் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும் இணையற்றத் தொண்டாற்றியிருக்கிறார். இந்நூலினை குறிப்பாக இளைய சமுதாயத்தினர் படித்துப் பயன்பெற வேண்டும். தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலினை வரவேற்றுப் பாராட்டுமாக.
பழ.நெடுமாறன்
தலைவர்
உலகத் தமிழர் பேரமைப்பு
ஐயா அவர்கள் கூறுவதிலிருந்து இஃது எவ்வளவு சிறந்து நூல், எழுதியவர் எந்தளவுக்குத் தமிழில் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர் என்பது நமக்குப் புரிகிறது. இந்த நூலைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கே எனக்கு அறிவு போதுமா என்பது ஐயம்தான். அப்படியிருக்க, நூலாசிரியரின் கருத்தில் மாறுபாடு கொள்வது என்பது பற்றி எண்ணுவதற்கும் இடமில்லை. இருந்தாலும், எனக்குத் தோன்றுகிற ஓர் ஐயத்தை எழுப்ப விரும்புகிறேன்.
“தமிழ் என்னும் மொழி எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலேயே அதனுடன் ஒரு சேரத் தோன்றியதாம் அகத்தியம் என்னும் இலக்கண நூல்” என்று நூலாசிரியர் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளதாகப் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தெரிவிக்கிறார். ஒரு பகுதியில் வாழும் மக்கள், முதலில் செய்கையில் பேசத் தொடங்கி, பின்னர் தத்துப் பித்தென்று குதலை மொழி பேசி, பிறகு அஃது ஒரு மொழியாக மாறி, அதன் பின் எழுத்து வடிவம் பெறப் பற்பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பது அறிந்ததே. இவற்றுக்கெல்லாம் பிறகுதான் இலக்கணம் என்று ஒன்று தோன்ற முடியும். அப்படியிருக்க, தமிழ் மொழி தோன்றியபொழுதே ‘அகத்திய’மும் தோன்றி விட்டது என்பது பகுத்தறிவுக்கு முரணாகத் தென்படுகிறதே!
திரு.ஞானப்பிரகாசன் சரியாக புரிந்துகொள்ளவில்லை.தமிழோடு சேர்ந்து அகத்தியமும் தோன்றியது என்று நூலாசிரியர் சொல்லவில்லை.மாதவ சிவஞான முனிவர் கூறியிருக்கிறார் என்றே மேலே உள்ளது.