(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

11/ 69  இன் தொடர்ச்சி)

 

சங்கச்சான்றோர் முதல்

சிற்பி வரை(2003)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 12/ 69

காலங்கள் தோறுமான தமிழ்ச்சான்றோர்கள் சிலரின் இலக்கியச் செழுமையை விளக்குகிறார். இத் தொகுதியில் மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் உள்ளன.

மார்த்தின் செய்மர் சுமித்து என்னும் அறிஞர் A guide to Twentieth Century World Literature என்னும் நூலில் தமிழ்க்கவிதையியல் சமற்கிருதக் கவிதையியலிருந்து வேறுபட்டது என்றும் தமிழ்க் கவிதையியல் அறியும் பேறு மேனாட்டார்க்கு இன்ப அதிர்ச்சிப்புதையல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத், ‘தமிழரின் அழகியல்: கவிதையே வாழ்வு’ என்னும் முதல் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அதனை எடுத்தாண்டு தமிழின் சிறப்பறியாப் பேதைகளின் அறிவுக்கண்களைத் திறந்திருப்பார்.

சமற்கிருத நூலான குமாரசம்பவத்தையும் சங்கக் கவிதைகளையும் ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியத்திற்குச் சமற்கிருதம் கடன்பட்டிருப்பதை நன்கு விளக்கியுள்ளார். சங்க இலக்கியங்களை வீரயுகப்பாடல்கள் என்றும் வாய்மொழி இலக்கியமென்றும் அறிஞர் கைலாசபதி கூறுவதனை நடுநிலையுடன் ஆராய்ந்து மறுத்துள்ளார். சங்கக்கவிஞர் யாரும் தெருப்பாடகர் அல்லர், அம்சொல் நுண்தேர்ச்சிப்புலவர்கள் என்று ஆழங்கால்பட்ட அறிவினால் மெய்ப்பித்துள்ளார்.

பாிபாடல் காலம் குறித்த கட்டுரை எழுதும்போது, சார்லசு கோவர்(Charles E.Gover) 1871 இல், தமது தென்னிந்தியாவின் நாட்டுப்புறப் பாடல்கள்(The Folk Songs of Southern India) என்னும் ஆங்கில நூலில் சொல்லியிருந்த கருத்துகளால் பேரதிர்ச்சி யுற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டுக் கெடுக்கப்படாத, சிதைக்கப்படாத எந்த வொரு அச்சிடப்பெற்ற தமிழ்ப்படியும் கிடைக்காத அளவிற்குப் பிராமணர்களால் சிதைக்கப்பட்டதைக் கூறுகிறார்.பிராமணர்களால்,  இந்நிலத்திற்குரிய கவிதை தகாத முறையில் இழிவுபடுத்தப்பட்டதையும், அதற்கு இயலாத பொழுது, சற்றும் நேர்மையற்ற முறையில் வஞ்சக எண்ணத்தோடு பாழ்படுத்தப்பட்டதையும்  பிராமணப் பழங்கதைகள் ஏற்றமளிக்கப்பட்டுத் தொன்மையான தமிழ்ப்பனுவல்கள் புறக்கணிக்கப்பட்டதையும் அழிக்க முடியாதவற்றின் தூய்மையை இடைச்செருகல்கள், பிற பாடங்கள்மூலமாகக் கெடுத்ததையும் கோவர் விவரித்துள்ளதை எடுத்துரைக்கிறார்.

கபில்சுவெலபில் தமிழ் இலக்கியம்(Tamil Literature) என்னும் நூலிலும் இக் கருத்தைச் சொல்லியுள்ளார். வேறு பல அறிஞர்களும் இவ்வாறு கூறியுள்ளனர்; இவை உண்மைதான் எனக் கூறும் வில்லியம் தெய்லர் தமது தமிழ் மொழியில் கீழை வரலாற்றுக் கையெழுத்துப்படிகள்(Oriental Historical Manuscripts in Tamil Language) என்னும் நூலில் சித்தர் பாடல்கள் எவ்வாறு திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டன என எடுத்துரைக்கிறார்; நூலை முற்றுமாக

அழிக்க முடியாதபோது அதில் இடைச்செருகல்களைப் புகுத்தி மாற்றங்கள் செய்து அதன் தூய்மையைக் கெடுத்து நூலாசிரியரின் கருத்துகளுக்கு நேர்மாறானவற்றைச் சேர்த்து அஃதே ஆசிரியனின் உண்மையான நூலென்று அச்சிட்டுத் தந்தனர். இவ்வாறான உண்மைச்செய்திகளையும் தெரிவிக்கிறார்.

பிராமணர்களால் தமிழ்நூல்கள் அழிக்கப்பட்ட, கெடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட அவற்றின் மூலம் தமிழ் வரலாறு, பண்பாடு முதலியவை மறைக்கப்பட்ட கொடுமைகளை அறிந்த பேரா.ப.ம.நா., உறக்கமின்றி  மனங்கலங்கி பழந்தமிழ் மன்பதை, பண்பாடு குறித்த உண்மைகளை நம்மவர்க்கும் வெளிஉலகினருக்கும் அறிவிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்னும் உந்துதலைப் பெற்றார். அதன் பின்னர் அவர் எழுதிய கட்டுரைகளிலும் நூல்களிலும்  இயன்ற இடங்களில் எல்லாம்  இவ்வுண்மையைத் தெரிவித்து வந்துள்ளார். இவ்வுண்மைகளை வெளிப்படுத்தாமல் இவை உண்மையல்ல என்றோ பிற மதத்தார் சதி என்றோ திராவிடர்கள் சூழ்ச்சி என்றோ கூறியிருந்தால் இவரைச் செல்வ மழையில் குளிப்பாட்டியிருப்பார்கள்.

‘எல்லீசின் பார்வையில் தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்னும் கட்டுரையில் எல்லீசன், எவ்வாறு மொழியியல் ஆய்வில் கால்டுவெல்லுக்கு முன்னோடியாகவும் தமிழ் இலக்கியத் துய்ப்பில் போப்பு அடிகளாருக்கும் பிற மேலை அறிஞர்களுக்கும் முன்மாதிரியாகவும் தமிழ்நூல்களின் மதிப்பீட்டில் நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும் மொழிபெயர்ப்புத் துறையில் பின்னைய தலைமுறையினருக் கெல்லாம் அறைகூவலாகவும் செயல்பட்டார் என்பதை விளக்கியுள்ளார்.

‘என்றுமுள தென்றமிழ்: பாவாணரின் முதற்றாய்மொழி’ என்னும் கட்டுரையில் தேவநேயப்பாவாணரின் தமிழ் மொழியின் தோற்றம், தனித்தன்மைகள்பற்றிய கருத்துகளை விளக்கி அவற்றை மேலை மொழியியல் விற்பன்னர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.

‘நெடும்பழி பூண்ட நங்கை: வேதம் முதல் சிற்பி வரை’ என்னும் கட்டுரை அகலிகைபற்றிய தொன்மத்தை மீட்டுருவாக்கம் செய்த கவிதைகளையும் கதைகளையும் நுட்பமாக  நோக்கி விளக்குகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்