தலைப்பு-கருணாவின் இரண்டகம் : thalaippu_karunaavinirandakam

தயாமோகன்

தயாமோகன்

  விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகனின் மனம் திறந்த பேட்டி..

  விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கியை உடன் கொண்டுசெல்ல இசைவளிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன்; விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர்.

  2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து சூன் மாதம் இசுலாமிய நண்பர் ஒருவர் மூலமாகக் கடவுச்சீட்டு எடுத்து வெளிநாட்டுக்கு சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அந்த நாட்டு அரசின் அரவணைப்பில் வாழ்ந்து வருபவர். அவரைத் தப்பிக்க வைத்ததற்காக அந்த இசுலாமிய நண்பருக்குச் சிறைவாசம் கிடைத்தது. இரண்டகனாக – துரோகியாக – மாறிப்போன கருணாவுக்கும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நின்று இருவரிடமும் பேசிய வாழும் சான்றாளரில் தயாமோகனும் ஒருவர். மாவீரர் நாளை ஒட்டி மனம் திறக்கிறார் தயாமோகன்.

கேள்வி : கருணாவின் அருகிலும், பிரபாகரனின் நேரடித் தொடர்பிலும் இருந்தவர் நீங்கள். நேரடியாகக் கேள்விக்குள் செல்வோம். சமஃச்டி என்று சொல்லக் கூடிய கூட்டாட்சி முறைமைக்குப் பிரபாகரன் ஒப்புக்கொள்ளாத காரணத்தால்தான் கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதாகச் சொல்லி இருந்தது பற்றி?

தயா மோகன் : அது முற்றிலும் பொய். இதுபற்றிச் சற்று விவரமாகச் சொல்லவேண்டி உள்ளது. கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு முன்பே கருணா மீது பலவிதக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவற்றில் சிலபற்றி வெளிப்படையாக நான் சொன்னால் எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியதாக ஆகிவிடும். அது மட்டுமல்ல அது போன்ற கருணாவின் செய்திகளை வெளிப்படுத்த வேண்டா என்று எம் அண்ணையே(அண்ணலே-பிரபாகரன்) எம்மிடம் சொல்லி இருப்பதால் அது பற்றி வேண்டா.

 ஆனால் மிக முதன்மையான தவறு கருணா இயக்கப் பணத்தை விரயம் செய்தார் என்பதுதான். அதாவது தனது மனைவி, குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அதன் மூலமாக இயக்கக் காசை  விரயமாக்கினார் என்பது தான் அவர் செய்த மிகமுக்கியமான தவறு. இது பற்றி அவரின் சொந்தச் சாரதி (கார் ஓட்டுநர்) ஒருவர் கிழக்கு மாகாண இயக்கத்தின் நிதியை கையாளும் இன்னொரு போராளியிடம் இதுபற்றிக் கதைக்க அந்த நபர் கம்சன் என்ற இன்னொரு போராளியிடம் கதைக்க அந்தப் போராளி அதை அண்ணையிடம் (பிரபாகரனிடம்) நேரில் வந்து புகாராகத் தெரிவிக்கிறார். உடனே அண்ணை கருணாவுக்குச் சங்கேத பாசையில் தகவல் அனுப்புகிறார். அவர் “கருணா இப்படி ஒரு புகார் வந்து இருக்கிறது. நேரில் வந்து சிக்கலைப் பேசி முடிக்கவும்” என்று. அதற்கு கருணா…”கம்சனை எம்மிடம் ஒப்படையுங்கள்” என்று அண்ணைக்கு மறுமொழி அனுப்புகிறார்.

  அப்போதும் கூட அண்ணை மறுபடியும் மறுமொழி அனுப்புகிறார் “கருணா வீண் பேச்சுகள் வேண்டா. நேரில் வந்து சிக்கலை முடி” என்று. அதற்கு மறுமொழி அளித்த கருணா “வர மாட்டேன்” என்று சொல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கம்சனுக்குத் தகவல் சொன்ன கருணாவின் சாரதி கொல்லப்படுகிறார். அதற்குப் பிறகு கருணா தனது சொந்த ஊரைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் உட்பட மூன்று பேரை அடுத்து அடுத்துக் கொல்கிறார்.

  இதற்கு முன்னதாக நான் உட்பட 600 படை அணி வீரர்களை கருணா ஏற்கெனவே அண்ணையின் பாதுகாப்புக்காக வடக்கிற்கு அனுப்பி இருந்தார்.

  கருணாவுக்கும் அண்ணைக்கும் நடக்கும் இந்தச் சொல் பரிமாற்றங்களின் போது நான் உட்பட கிழக்கு மாகாண 600 படை அணியினரும் அண்ணை உடன் தான் நிற்கிறோம். கருணாவுக்கு அளித்த தகவலையும், கருணா தனக்கு அளித்த மறுமொழியையும் அண்ணை எங்களிடம் காண்பித்தார்.

  இப்படிப்பட்ட நிலையில்தான் கருணா நேரில் வராமல், எங்கே தன்னைக் காட்டி கொடுத்து விடுவார்களோ என்று அச்சத்தின் பேரில் தன் சொந்த பந்தங்களை – போராளிகளை -க் கொல்லத் தொடங்குகிறார். இதற்குப் பிறகுதான் அண்ணை சொன்னார்: “இனி விட்டால் கருணா சொந்தப் படை அணியினரைக் கொன்று சிதைத்து விடுவார். எனவே கிழக்கில் சென்று புலிகள் இயக்கத்தை மீட்டு எடுங்கள்” என்று கட்டளை இட்டார்.

  இப்படி நடந்து கொண்டு இருக்கக் கூடிய நிலையில்தான் கருணா எம்மைத் தொடர்பு கொண்டு, “600 படை வீரர்களோடு வடக்கில் அங்குள்ளவர்களை அடித்துவிட்டாவது கிழக்குக்கு வந்து விடுங்கள்” என்று சொல்கிறார். நாங்கள் சொன்னோம் “அது எப்படி முடியும்” என்று. அதற்குக் கருணா சொன்னார்..

  ஒன்றும் இல்லை நீங்கள் அங்கிருந்து வந்து இலங்கை இராணுவத்திடம் வந்துவிடுங்கள் அவர்கள் உங்களைப் பத்திரமாக மீட்டுக் கப்பல் மூலமாக அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று. எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

  இலங்கை இராணுவம் வழியாக வாருங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து கருணா இலங்கை இராணுவத்தோடு கை கோத்து விட்டார்..நிலைமை எல்லை மீறிப் போய்விட்டது என்பதை அறிந்து நடந்தவற்றை எல்லாம், -கருணா பேசியதை எல்லாம் – அண்ணையிடம் காண்பித்தோம். கருணா பேசியதை நாங்கள் பதிவு செய்திருந்தோம்.

இதற்கு பிறகுதான் அண்ணை கிழக்கை மீட்டு எடுப்பதில் தீவிரம் காண்பித்தார். அப்போதும் அவர் சொன்னார்…நீங்கள் துப்பாக்கியை நீட்டுவது உங்கள் உடன்பிறப்புகளுக்கு எதிராக. முடிந்தவரை துப்பாக்கிப் பயன்பாடு வேண்டா. அவர்களை அச்சுறுத்தி கைப்பற்றுங்கள் என்றார். ஆனால்.. அந்தச் சண்டையில் கிழக்கு மாகாணத்தின் 23 புலிகள் இறந்து போனார்கள். அவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை, அவர்கள் போராளிகள்தான் என்று உறுதியானால் அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொன்னார் எமது அண்ணை.

  காலச்சூழல் காரணமாகக் கருணாவின் பிடியில் சிக்கிய அவர்கள் நமது உடன்பிறப்புகள். எனவே அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொல்லி அவர்களைச் சேர்த்தார் எமது அண்ணை.

 ஆகக் கருணா பிரிந்ததன் உண்மையான பின்னணி இதுதான். இதில் சமஃச்டிக் கோரிக்கை எங்கே வந்தது? கருணா பிரிவதாக அறிவித்த காலத்திற்கு ஓர் ஆண்டுக்கும் முன்னரே கருணா இலங்கை இராணுவத்தின் ஆளாக ஆகியிருந்து இருக்கிறார்.

  இதுபற்றி என்னைப் போலவே நன்கு அறிந்த கருணாவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த இன்னொரு தளபதியும் உயிரோடு இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் அவர் தற்போது இருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் பெயரை நான் இப்போது குறிப்பிடவில்லை. அவரும் பாதுகாப்பாக அமர்ந்தபின் நாங்கள் இருவரும் கூட்டாகப் பேட்டி அளிப்போம்.

கேள்வி : இறுதிப் போரின் போது புலிகள் இயக்கம் தவறான போர் முறைகளைக் கையாண்டதுதான் தோல்விக்குக் காரணம் என்று கருணா சொல்லி இருக்கிறாரே ?

தயா மோகன் : புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் எம்மீது பொறாமைப்பட்டது என்பது நீங்கள் அறியாதது அல்ல. புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர்த் தந்திர முறைகளும் எவராலும் கணிக்க பட முடியாதது.

  ஆனால் எம்மைக் காட்டிக் கொடுக்கத் தொடங்கிய பின்னர் எமக்கு அதிலும் குறிப்பாகக் கருணா பிரிந்து சென்றதற்குப் பிறகு எமக்கு வெடி பொருட்கள் வரும் அத்தனை வழிகளும் இலங்கை இராணுவத்திற்குத் தெரிந்து போனது. எங்களிடம் ஆயுதங்கள் இருந்தும் அதற்கான வெடி மருந்துகள், தோட்டாக்கள் இல்லை. அந்த வழிகளை அனைத்தும் இலங்கை இராணுவத்திற்குக் காட்டி கொடுத்து அடைக்கப்பட்டன.

  புலிகளின் உயர் மட்டப் பொறுப்பாளர்களுக்கு மட்டும் தெரிந்த போர் முறைகள் இலங்கை இராணுவத்திற்குத் தெரிய வந்து அதே முறையில் எமது போராளிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். அந்த முறைகளைக் கருணாவை தவிர வேறு யாராலும் இராணுவத்திற்குச் சொல்லி இருக்க முடியாது. நாங்கள் கமுக்கமாக வைத்து இருந்த அத்தனைச் செய்திகளும் இலங்கை இராணுவத்திற்குத் தெரிந்து போனது.

  இலங்கை இராணுவத்தோடு இணைந்து இந்தியா முதலான பல்வேறு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணின. அந்த வகையில் அந்தப் போரில் மட்டும் நாங்கள் தோற்றுப்போனோம். ஆக…எமது தனித்துவமான போர் முறைகளை இலங்கை இராணுவத்திற்குக் காட்டி கொடுத்த கருணா இப்படிச் சொல்வது முற்றிலும் முரணானது.

கேள்வி : புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் கா ட்டியது நான்தான் என்று சொல்லி இருக்கிறாரே கருணா .

தயா மோகன் : ஆம். எமது அண்ணையின் காலில் ஒரு கறுப்புத் தழும்பு உள்ளதாகவும் அது தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற போது ஏற்பட்ட காயம் என்றும் கருணா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறி இருந்ததை நானும் பார்த்தேன். அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. காரணம்…எமது அண்ணைக்கு இன்னொரு பெயர் உண்டு. கரிகாலன் என்று. காரணம் இலங்கையில் ஒரு போரின் போது ஏற்பட்ட காயம் அது. கருப்பாகத் தழும்பு இருந்ததால் அவருக்குக் கரிகாலன் என்று பெயர். இது இயக்கத்தில் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இதில் இருந்தே கருணா பொய் சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரியும்.

கேள்வி : கருணா எதற்குப் பொய் சொல்ல வேண்டும்..?

(குறுக்கிட்டு )

தயாமோகன் : அதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் பொறுப்பாளராக இருந்தவன்தான். ஆனால் இனி எந்த அரசியலுக்கும் நான் செல்லப்போவது இல்லை. ஆனால்,  கருணா அண்மைக் காலமாகக் கொடுத்து வரும் பேட்டிகளில் புலிகள் தலைவர் பற்றியும், இயக்கம் குறித்தும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். அவற்றை எமது மக்கள் கேட்டு குழப்பமடைகிறார்கள். எனவே அந்தக் காலக்கட்டங்களில் உடன் நின்றவர்களில் நானும் ஒருவன் என்பதால் எமது மக்களுக்குத் தெளிவு படுத்தவே நான் முன்வந்து இந்தப் பேட்டியை அளிக்கிறேன். கருணா அவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பதற்கான காரணம் இந்தப் பேட்டி மக்களிடம் சென்று சேரும்போது புரியும் என்று எண்ணுகிறேன்.

கேள்வி : சரி..நானே கேட்கிறேன் பிரபாகரன் எங்கே ?

தயா மோகன் : (பலமாகச் சிரித்து விட்டு) அவர் எங்கே என்ன என்றெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம் எம் அண்ணை சொன்னது இதுதான்: “நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன்.” நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்வி : மறுபடியும் புள்ளி வைத்துப் பேசுகிறீர்கள். சரி உங்கள் போராட்டம் முள்ளி வாய்க்காலோடு நின்று விட்டது என்பது சரியா ?

தயா மோகன் : ஆயுதப் போராட்டம் மட்டுமே ஈழ தமிழர்களின் போராட்டம் என்று எண்ணுவதின் வெளிப்பாடே உங்கள் கேள்வி. அறப்போராட்டம்தான் செய்தோம். ஆயுதம் ஏந்த வேண்டி வந்தபோது ஆயுதம் ஏந்தினோம்.

பன்னாட்டு அரசியலைக் கண்ணுற்று பார்த்து எமது ஆயுதங்களை மௌனித்து வைத்து இருக்கிறோம் அவ்வளவே! இப்போது அரசுமுறையிலான போராட்டதை நடத்திகொண்டு இருக்கிறோம். போர்கள் ஓய்ந்து இருக்கலாம் அறவழியிலான போராட்டம் ஓயாது.

dinacheydhi-egakaivaninterview

  • செவ்விகண்ட ஊடகவியலாளர் பா.ஏகலைவன்
  • பா.ஏகலைவன் : paa.ekalaivan