thiruppuvanam_romansymbols

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள்

தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு 

கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. முதன் முறையாக மத்திய அரசு தொல்லியல்துறைக்கு ஒருவருட ஆய்வு மேற்கொள்ள  இசைவு  அளித்துப் பணிகள் நடந்து வருகின்றன.

  தற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.  இராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்டவற்றைத் தேடும் பணி நடைபெறுகிறது.
மதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12  புதுக்கல்(கி.மீ.) தொலைவில் தூரத்திற்குள் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுகிறது.

இராமேசுவரம் துறைமுகத்தில் இறங்கிய வணிகர்கள், வைகை ஆறு வழியாக வந்து கரையோரத்தில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதனை மையமாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரோமானியக் குறியீடுகள்: தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரிபூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுகிறது. தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணியில் உரோமானியக் குறியீடுகளுடன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்காலத்தில் பயன்படுத்திய அகலமான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறைகள், தொட்டிகள் ஆகியவற்றையும் தற்போது கண்டறிந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடிப் பள்ளிச்சந்தை திடல் என்றழைக்கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் சபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5 பேரடி (மீட்டர்) ஆழம், 5பேரடி (மீட்டர்) அகலம் கொண்ட குழிகள் வெட்டப்பட்டு அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறுகிறது.

தொல்லியல்துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத்து இராமகிருட்டிணன் கூறுகையில், “தென் தமிழகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகையாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண்மையா என ஆராய இந்தப் பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப்பாக நடந்தது என்பதற்கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.

உரோமானியக் குறியீடுகளுடன் கூடிய மண் பானைத் துண்டுகள், பாண்டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர்கள் தங்குமிடம்  முதலான  பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு  ஆகிய இரண்டு வண்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்றப்
பயன்படும் ‘குவளை’ போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமையாக உள்ளது. பள்ளிச்சந்தைத் திடல் என்பது வணிகர்கள் திடல் என்பதால் இங்குப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச்சு முதல் அடுத்த ஆண்டு மார்ச்சு வரை அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறும். இதுவரை 19 இடங்களில் பணிகள் மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம்,” என்றார்.

– தினமலர்மே 22, 2015