திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை
முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில்
திருத்துறைக் கிழார் கட்டுரைகள்
அணிந்துரை
வை.மு.கும்பலிங்கன்
திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின் உரிமையாளராக, பாதுகாவலராக, குத்தகைக்காரராக இவ்வம்மையாரே விளங்குகின்றார். நான் அவரின் பழகிய பழைய நண்பனாக, தற்போது உங்களை எல்லாம் அந்தப் பூந்தோப்புக்கு, அந்தக் காய் – கனித் தோப்புக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்துச் சொல்லி மகிழ்விக்க முனைகின்றேன். அனைவரும் கேட்டும், பார்த்தும், அறிந்தும், சுவைத்தும் மகிழ வேண்டுகின்றேன்.
தமிழ் என்ற இப்பகுதி கீழ்க்காணும் புன்னகையுடன் தொடங்குகின்றது. தமிழ்வளர்ச்சிக்கு அரசு செய்ய வேண்டிய உயர் கடமைகளைப் பட்டியலிட்டு, உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வளர்ப்போம் என்று அறைகூவல் விடுத்து நம்மை அழைக்கின்றார்.
நாம் நடைமுறையில் பேசும் கொச்சைத் தமிழைப் பட்டியலிட்டு நேர் சரியான நல்ல தமிழில் பேச வேண்டும் என்று புகல்கின்றார். பெண் – பொண்ணு> பிள்ளை – புள்ள, போயிற்று – போச்சு, ஆயிற்று – ஆச்சு (பக்கம்-5). பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்மையை ஆதரித்து அதற்கான உடனடி காரணங்களை வரிசைப்படுத்தி ஆதரவு தெரிவிக்கிறார். மொழி மரபுக்கும் பகுத்தறிவுக்கும் ஆய்வுக்கும் ஏற்றவகையில் எழுத்துச் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்பது இவரின் ஆழ்ந்த நுண்ணிய கருத்தாகும் (பக்கம்-8).
தமிழ்ச் சொல்லில் சொல்லுதலைப் பலுக்கல் (உச்சரித்தல்) என அறிமுகப்படுத்துகின்றார். காரணம் அந்தச் சொல் பல்லால் பலுக்கப்படுவதால் அதாவது சொல்லப்படுவதால் பலுக்கல் ஆனது. நாம் நடைமுறை வழக்கில் காணும் சில சிக்கல்கள் நம்மைத் துன்பப்படுத்துவதாகவும் இருக்கின்றன. அதாவது நம் கண்களை அரம்பம் போட்டு அறுப்பதாக இருக்கும். இதனை நாம் கண்ணராவி என்றே நல்ல பொருள் பொதிந்த தமிழில் சொல்லவேண்டும். ஏனோ அதனைப் பொருளற்ற வகையில் கண்றாவி எனத் தவறாக வழங்குகிறோம் என ஆசிரியர் கவலுகின்றார். (பக்கம்-17).
ஆசிரியர் என்பவரைப் பின்காணுமாறு பிரிக்க வேண்டும். ஆசு + இரியர் = ஆசிரியர். ஆசு = குற்றம், இரியர் = நீக்குபவர். ஆம். குற்றம் நீக்குபவர் ஆசிரியர் ஆனார். இந்த நல்ல பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லை விடுத்து வாத்தியார் என்கிறோம். இதன் பொருள் என்ன தெரியுமா? வாயில் தீ உள்ளவர், அதாவது ‘சிகரெட்’ பிடிப்பவர் என்பது பொருள் (பக்கம்-19).
அரிய புதிய சொல்லாகத் தமிழ் வளர்ச்சிக்காக இவர் சொல்லும் ஆய்வு இதுதான். கலைச்சொல் ஆக்கம் ஆகும். மற்ற மொழிபெயர்ப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு கிழமை இதழ் நடத்த வேண்டும் என்பது இவரது மிகுந்த ஆவலாக அமைந்துள்ளது (பக்கம்- 26). நாம் கிட்டே – அருகில் என்னும் சொல்லை விளக்கப்படுத்த அருகாமை (அருகு+ஆகாமை) என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். இதன் பொருள் எட்டி – தூர – தள்ளி என்பனவாகும். இதனை அருகமை என்ற சொல்லால் விளக்கப்படுத்துகின்றார் (பக்கம்-51)
‘தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று கவலையுறுகின்ற பாரதிதாசனுக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடுவதில் என்ன பொருள் உள்ளது? என்று வினா எழுப்பி ஆதங்கப்படுகின்றார் (பக்கம்-58).
தமிழர் என்ற பகுதியில் தமிழ்நாட்டுச் செல்வங்கள், பொருள்கள் விலையுயர்ந்த சாமான்கள் பெரும்பாலும் பக்தியின் பெயரால் கடவுளின் பெயரால் ஆலயக் கோயில்களில் முடக்கப்பட்டிருப்பது கண்டு நெஞ்சம் மிகவே விம்முகிறார் (பக்கம்-78).
இந்துமதக்காரன் உ என்னும் பிள்ளையார் சுழி போடுவதையும் கிறித்தவன் சிலுவைக்குறி இடுவதையும் இசுலாமியன் 786 எண்ணோடு பிறை சூடுவதையும் நக்கலாகவும் நையாண்டி செய்தும் அறிவுச் சுடர் கொளுத்துகிறார் (பக்கம்-82).
இன்றையத் தமிழருக்குப் “பாடுக” என்றதும் பாடும் வண்மை இல்லை. தமிழைப் பிழை இன்றிப் பேசவும் எழுதவும் கூட சிலருக்குத் தெரியவில்லை. வேற்றுமொழி கலவாது பேசவும் எழுதவும் பலருக்குத் தெரியவில்லை. தமிழால் பிழைத்து வயிறு வளர்க்கும் தமிழ்ப் புலவர்களுக்குத் தமிழ்ப்பற்று கிடையாது. அவர்களுக்குப் பணப்பற்றும் சோற்றுப்பற்றுமே மிகுதி. இதை அங்கலாய்த்துக் கவலுகின்றார் (பக்கம்-93).
முத்தமிழ்க்கழகம் கண்டு உலகம் ஆண்டவர்கள் பாண்டிய மன்னர்கள் – ஆனால் அவர்கள் குடிமக்கள் ஆடிப்பதினெட்டு என்ற பெயரில் பழையன கழிப்பதாகச் சொல்லி பழம்பெரும் ஓலைச் சுவடிகளையும் பொத்தகங்களையும் பழைய குப்பை எனக் கருதி ஆற்றில் விட்ட கொடுமையை எண்ணி எண்ணி மிகமிகத் துயரப்படுகின்றார் (பக்கம்-98).
நானும் தஞ்சை நண்பர் இலண்டன் வீரசிங்கம் அவர்களும் வெளியிட்ட திரு.வி.க. நூற்றாண்டு விழா சிறப்பு மலரில் “ஆகட்டு 38 ஆம் ஆண்டுத் தொடங்கி இன்றுவரை நீடித்து வரும் இந்தி எதிர்ப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை – தீமைகள்” என்ற விளக்கக் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றவர் நம் வி.பொ.ப. அவர்கள் ஆவார். இக்கட்டுரை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (பக்கம்-113)
பிழையான பல சொற்களுக்குத் திருத்தமான – சரியான – தெளிவான – திட்டமான – திடமான சொற்களைப் பட்;டியலிட்டுக் காண்பிக்கிறார் (பக்கம்-127)
தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டு, மக்களவை, மாநிலங்களவைக்குச் செல்லும் நம் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழிலேயே பேசி தம் கருத்துகளை, கொள்கை கோரிக்கை விளக்கங்களை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வாதிடுகின்றார். தமிழ் தெரிந்த அவர்கள் ஏனோ ஆங்கிலத்தில் வலிந்து பேசுகின்றனர் (பக்கம்-154).
தமிழ்நாடு என்ற பகுதியில் தமிழ்நாட்டுச் செல்வ வளங்கள் அனைத்தும் திருக்கோயில்களில் அடக்கப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்தும் இவர் அதை நாம் மீட்கவும் மீளவும் செய்ய வேண்டும் என்று விதந்தோதிப் போராட்ட முனைப்பை சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த முந்துகின்றார் (பக்கம்-154). இந்திய விடுதலை இயக்கமான பேராயம் என்னும் காங்கிரசு கட்சியை முதன்முதலில் தோற்றுவித்தவர் ஃகயூம்(Allan Octavian Hume) என்னும் ஆங்கிலேயர் என்பதே வரலாற்று உண்மை. இந்தியரால் புழங்கப்பட்ட இயக்கம் அதுவன்று என்கிறார்(பக்கம்-168-169).
தமிழக மக்கள் உணவு உடை உறைவிடம் இன்றித் தொல்லைப்படுகையில் அவற்றைப் போக்காது ஆண்டவன் என்ற பெயரால் ஒரு சிறு குழவிக்கல்லை நட்டுவைத்து ஊரை அடைத்துக் கோவில்கள் கட்டுவது எவ்வகையில் நியாயம் என்று பெரியாரியப் பகுத்தறிவு நாத்திக வினாவை எழுப்புகிறார் (பக்கம்-175).
தமிழ்நாடு வடவர்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அடிமைமுறி ஆவண அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்தவர் யார் என வினா எழுப்பி அதனை நாம் முறித்து எறிவோம்! ஒழித்து எறிவோம்! முறித்துத் தொலைப்போம்! என்று விடுதலை வீரமுழக்கம் இடுகிறார் (பக்கம்-190).
தமிழ்ப்பற்று இருந்தால்தானே தமிழர்கள் அனைவரும் தம் பெயர்களைத் தமிழில் வைத்துக் கொள்வார்கள் என்று சொல்வதோடு தம் கடைகள் வியாபார நிலைய பொதுநிறுவனங்கள் அனைத்தும் தமிழ்ப்பெயர்கள் தாங்கி நிற்க வேண்டும் என்றும் வேதனைப்பட்டு விம்மிக் குமுறுகிறார் (பக்கம்-194).
தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமப் பொருள்களை வடநாட்டவரே அதாவது மத்திய அரசினரே கொண்டு செல்லுகின்றனர். மேலும், வருவாய் மிகுந்த அஞ்சல் துறை இருப்புப்பாதைத் துறை வருமானவரித்துறை சுங்கத் துறை முதலியவற்றை வடவரே ஆக்கிரமித்து விட்டனர் (பக்கம்-208).
நூலாசிரியர் பல வகைகளில் நெஞ்சம் குலைந்து குமுறி ஆதங்கப்பட்டு, ஆற்றாமையின் வெளிப்பாடாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நாம் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை வழியிலும் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் கொள்கை வழியிலும் பாவாணரின் மொழிக்கொள்கை வழியிலும் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கை வழியிலும் ஒருங்கிணைந்து தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் காக்க முனைப்போடு முனைவோம்; பெரும் முயற்சிகளை முன்னெடுப்போம்.
இந்நூலின் தொகுப்பாசிரியர் – இத்தோட்டத்தின் பயிர்க்காவலராக – குத்தகைக்காரராக இருந்து செழித்து வளர்த்துக் காப்பாராக!
கும்பகோணம் தமிழன்புடன்
12.08.2024 வய்.மு.கும்பலிங்கன்
பேசி:9442932699
Leave a Reply