தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்!

   திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.

  பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச் சிறப்பாக அமைத்தல் முதலான பல பொறுப்புகள் அவர் முன் காத்திருக்கின்றன. எனினும்,

 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.     (திருவள்ளுவர், குறள் 624)

என்பதற்கேற்ப அவற்றை வெல்லுமாறு வாழ்த்துகிறோம்.

(சி இலக்குவனார் உரை: தடை ஏற்படும் இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன் அடையும் துன்பங்கள் துன்பம் அடையும்.)

   திமுகவில் ஏற்பட்ட பெரும்பிளவு என்றால் வைகோ விலகியதால் ஏற்பட்டதைத்தான் சொல்ல வேண்டும். தாலின் முன்நிறுத்தப்படுவதற்காக வைகோ மீது தலைவர் கருணாநிதியைக் கொல்ல முயன்றதாகப் பழி சுமத்தி நீக்கப்பட்டார். அப்பொழுது அவருடன் மாவட்டச் செயலர்கள் ஒன்பதின்மரும் பொதுக்குழு உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவரும் இணைந்தனர். செங்குத்துப்பிளவு  எனப்படும் இப்பிளவு வேறு கட்சிகளில் ஏற்படவில்லை. இருப்பினும் வைகோ, தலைவர்  என்னும் நிலையில் இருந்து இறங்கி மூத்த தலைவர்களுக்கு மதிப்பு அளித்ததால் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்னும் நிலை ஏற்பட்டது. இதனால் ‘தன்னை முந்து நிறுத்தும் போக்கு’ பிற தலைவர்களிடம் ஏற்பட அதுவே மதிமுக சரிவிற்குக் காரணமாயிற்று. இதனைத் தாலின் பாடமாகக் கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை மதித்து அவர்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும். ஆனால், எச்சூழலிலும் தலைமைப் பொறுப்பிலிருப்பதை மறவாமலும் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணாமலும் தொடக்கத்திலிருந்தே முழுமையான தலைவனாகச் செயல்பட வேண்டும். தாலின் வல்லமையாளர் என்பதால் பிறரைக் கட்டுக்குள் வைத்திருப்பார் என எதிர்பார்க்கிறோம்.

  தாலினால், தான் விரட்டப்படுவதாக அன்று குமுறிய வைகோதான், இன்று தாலினை முதல்வராக்கியே தீருவேன் என முழங்கி வருகிறார். உலக அளவில் செல்வாக்கு கொண்ட தலைவர் வைகோவையே மாற்றிய பொழுது தமையனான அழகிரியை மாற்ற இயலாதா? இன்றைக்கு அழகிரி திமுகவில் இல்லை. “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்பதற்கேற்ப, அவரைச் சேர்ப்பதால் அணி உருவாகிக் குழப்பம் ஏற்படலாம் எனத் தாலின் கருதுவது சரிதான். ஆனால், வெளியே இருந்து திமுகவிற்கு எதிராகச் செயல்பட்டால் ஏற்படும் வாக்கு இழப்பால் திமுக தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படக் கூடாது. இவரும் இவர் மகனும் பதவி வேண்டா என்று சொன்னாலும் கட்சியில் நுழைந்த பின்னர் இதே நிலைப்பாடு தொடரும் என்றும் சொல்ல இயலாது. எனினும் ஏதேனும் வகையில் அவரைச் சரிக்கட்டுவது நல்லது.

  அழகிரி வெளியே இருக்கும் பொழுது திமுகவிலிருந்து கணிசமானோர் அவர் பின் செல்ல வாய்ப்பே இல்லை. இப்பொழுது அவர் பின் சென்றுவிட்டு அவர் திமுகவில் இணையும் பொழுது இணைவதால் மற்றொரு பன்னீர் அணியாகத்தான இருக்க வேண்டும். அதற்கு நேரடியாக தாலினை ஏற்றுத் திமுகவில் இணைவதே சிறந்தது என்பதே திமுகவில் விலகி இருப்போர் எண்ணம். எனவேதான், முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைந்தனர். எனவே, அழகிரியும் தன் திறமையும் ஆற்றலும் திமுகவிற்குப் பயன்படும் வகையில்  இருக்க வேண்டும் எனச் செயல்பட வேண்டும்.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.(திருவள்ளுவர், குறள் 529)

நம்மை விட்டுப் பிரிந்த சுற்றத்தார், பிரிந்ததற்கான காரணம் நீங்கினால் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வர். எனவே, அழகிரி பிரிந்ததற்கான காரணத்தை அறிந்து நீக்குக!

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.(திருவள்ளுவர், குறள் 633)

 எதிராக இருப்பவரைப் பிரித்தலும் நம்மிடம் இருப்பவரைப் பேணிக் காத்தலும் நம்மிடம்இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளலுமே தலை மைப் பண்பின் இலக்கணமாகும். இதன்படியே இப்பொழுது தாலின் செயல்படுகிறார். எனவே, முழு அளவில் வள்ளுவர் நெறியைப் பின்பற்றித் திமுகவையும் அதன்மூலம் நாட்டையும் நலம்பெறச் செய்வாராக!

 தாலினை அவர் தந்தையுடன் ஒப்பிடுவது தவறு. தாலின் தாலினாகத்தான் செயல்படவேண்டும். 50 ஆண்டுகள் தலைவராகச் செயல்பட்ட அவரிடமிருந்த நிறைகளை ஈர்த்துக்கொள்ள வேண்டும். அவர் பணிகளில் ஏற்பட்ட குறைகளைக் களைய வேண்டும்.

  பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், கலைஞர் மு.கருணாநிதி முதலான திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படிக்க வேண்டும். கலைஞர் குடும்பத்தில் ஆழமான தமிழியல் சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சாளர் இல்லை என்னும் குறையைப் போக்க வேண்டும்.

  உறுப்பினர், இளைஞர் திமுக அமைப்பாளர், வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், இளைஞர் அணி அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், துணைப்பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் எனப் பல வேறு நிலைகளில் பட்டறிவு பெற்றுள்ள தாலின் தலைமைப்பதவியிலும் திறம்படச் செயலாற்றுவார். சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சித்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், துணை முதல்வர் என அரசு நிலையில் அவர் பெற்றுள்ள பட்டறிவும் அவருக்குக் கை கொடுக்கும். எனவே, தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டினருக்கும் தொண்டாற்றித் தலைவர் மு.க.தாலின் வாழ்க என  வாழ்த்துகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல