தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு!

தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல!

முழு உரிமையே!

  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பையோ,  உணர்ச்சியூட்டி வழி நடத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலான தலைவர்கள், தொண்டர்கள் பங்களிப்பையோ யாரும் குறைக்கவோ மறைக்கவோ முடியாது. எனினும் ஆட்சி இருக்கையில் அமர்ந்த பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கும் போக்கில் கலைஞர்  கருணாநிதி மாறியது தமிழுக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்காய் அமைந்தது.

 இந்தி  எதிர்ப்பு என்று சொன்னவுடன் எதிர்த்தரப்பார் என்ன சொல்கின்றார்கள்? “இந்தி தெரிந்ததால் மாறனை அமைச்சராக்கினேன்! இந்தி அறிந்ததால் தயாநிதி மாறனை அமைச்சராக்கினேன்” என்று அவர் சொன்னவற்றைத்தான். அப்படிச் சொல்கிறவர்களும் கலைஞர் கருணாநிதியும் அறிந்த உண்மை நாமறிவோம்!. அவர்களுக்கு இந்தி தெரிந்திராவிடினும் அமைச்சர்களாக ஆக்கியதற்கு வேறு காரணம் சொல்லியிருப்பார் அவர். தம்குடும்பத்தவர் அமைச்சராக வேண்டும் என்ற நிலைப்பாடுதான் உண்மையே தவிர, வேறல்ல. ஆனால்,  அவ்வாறு சொன்னவை இன்றைக்கும் அவருக்கு எதிராகச் சொல்லப்படும் பொழுது நம்மால் ஒன்றும் கூற இயலவில்லை.

  இதன் தொடர்ச்சிதான்,  கல்லக்குடி, தால்மியாபுரமாக மாறுவதை எதிர்த்துத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர், ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசின் உதவியிலான குடியிருப்புகள் முதலானவற்றில் இந்தி குடி புகுந்தபோது அவற்றை உணர்ந்தும் உணரா நிலைக்கு மாறியது.

  மத்தியில் வெவ்வறு கட்சி ஆட்சிகளில் மத்திய அரசில் பங்கேற்றும் தி.மு.க.வின் மொழிக்கொள்கையை நிறைவேற்றும்  எண்ணமும் இல்லாமல் போனதுதான் கொடுமை. இதனால் தி.மு.க.வினர் அமைச்சராக இருந்த துறைகளில் கூட இந்தி அங்கிங்கெனாதவடி எங்கும் ஊடுருவியது. அவற்றில் ஒன்றுதான் எல்லைக்கற்களில் இந்தித்திணிப்பு.

  இப்பொழுது எல்லைக்கற்களில் இந்தித்திணிக்கப்பட்டபொழுது  பா.ச.க.வினர் அன்றைக்குப்பேராய(காங்.) ஆட்சியில் தி.மு.க. அமைச்சர் த.இரா.பாலு(T.R.Balu)  செயற்படுத்தியதைத்தான் தொடருகிறோம் என்றனர். உண்மைதான் இது.

  இதற்கு மறுப்பு விளக்கம் கொடுத்த மேனாள் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் த.இரா.பாலு(T.R.Balu)    பூசி மெழுகினாலும் உண்மை வெளிவந்து விட்டது.

அவர் என்ன சொல்லியிருக்கிறார்?

   “நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்குப் பேராபத்து ஏற்படும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  எல்லைக் கற்களில் திடீரென இந்தியில் எழுதத் தொடங்கியுள்ளனர்.” என அப்போதைய முதல்வர் செயலலிதா குற்றம் சாட்டினாராம்.  மேலும் “தலைமையமைச்சர் தலையிட்டுத் தமிழ் நாட்டில்   மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தை  நீக்கிட வேண்டும்’’ என கூக்குரலிட்டது மட்டுமின்றி, “இதற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அமைச்சர்தான் (டி.ஆர்.பாலுதான்) பொறுப்பு’’ எனவும்  குற்றம் சாட்டினாராம்.

  இதில் முதன்மையானது இந்தித் திணிப்பு என்பது நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதுதான். ஆனால், மேனாள்அமைச்சர் த.இரா.பாலு(T.R.Balu)  என்ன ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.?  அப்பொழுது அளித்ததாக இப்பொழுதும் நினைவூட்டி உறுதிப்படுத்தும் வரிகள் பின்வருமாறு ;-

“அதற்கு மறுமொழி யளிக்கிற வகையில் 24.12.2004 அன்று மத்திய அரசின்  நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக  ஓர் அறிக்கையினை  நான் வெளியிட்டேன்.  அவ்வறிக்கை அன்றைக்கு  எல்லா செய்தித்தாள்களிலும் வெளிவந்தது.

 அந்த அறிவிப்பின்படிஎல்லா  எல்லைக்(மைல்) கற்களிலும் மாநில மொழிகளில் ஊர்களின் பெயர்கள்  கட்டாயம்  இடம் பெற வேண்டும் எனவும் (தமிழகத்தில் தமிழில்)   ஊர் ஆரம்பிக்கும் இடத்தில், ஊரின் பெயரை மாநில மொழியிலும் – அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வருகின்ற கற்களில் ஆங்கிலம், இதர மொழிகள் இருக்க  வேண்டும் எனவும், எப்படியும் மைல் கற்களில் மாநில  மொழிகளுக்கு முன்னுரிமை   தரப்பட வேண்டும் எனவும்  அன்றைக்கு   மிகவும் தெளிவாக மத்திய அரசின்  சார்பில் விளக்க அறிக்கை  வெளியிடப்பட்டது. இது  எல்லோருக்கும் நினைவிருக்கும்.”

  இவ்வாறு கூறியதுடன் இதைத் துணிச்சலான நடவடிக்கை என்றும் (ஆசிரியர் கி.வீரமணி  கூறியதாகத்)தன்னைத்தானே பாராட்டிக் கொண்டுள்ளார்.

  இவர் அறிக்கையின் படி, முதல்  எல்லைக்கல்லில் தமிழ் (அல்லது உரிய மாநில மொழி); அடுத்து அமையும் கல்லில் ஆங்கிலம்; அடுத்த கல்லில் இதர மொழிகளாம். இதே  சுழற்சி முறையில் 1,4,7, …. என அமையும் கற்களில் தமிழ் அல்லது மாநில மொழியும் 2,5,8, … என அமையும் கற்களில் ஆங்கிலமும் 3,6,9,… என அமையும் கற்களில் இதர மொழிகளும் இருக்குமாறு மாற்றி அமைத்தாராம்.

  இதர மொழிகள் என்று இந்தி என்று சொல்லாமல் மறைக்கப் பார்க்கின்றார். மேலும் இதன்படி பிற மொழிகள் எழுதப்பட்ட கற்களில் தமிழ்எழுதப்படா மாட்டாது.

  அப்படி என்றால் தமிழ்நாட்டுக்கற்களில் மூன்றில் இரு பங்கு கற்களில் தமிழ்  இருக்காது. மொத்தம் மும்மொழிகள் எல்லைக் கற்களில் இருக்கும். அப்படியானால் இஃது எப்படி இருமொழிக்கொள்கையாகும்? மும்மொழிக் கொள்கைதானே!

 அந்த மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொண்டது எப்படி  துணிவாகும்? முதலில் போட்ட ஆணை இவருக்குத்  தெரியாது என்றால் அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர் ஆவார். பல்வேறு நிறுவனங்களை நடத்துபவருக்குத் துறையை எப்படி நடத்த வேண்டும் என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கும். ஒரு வேளை சுழற்சிமுறையில்  தமிழைக் கொண்டுவந்ததைத்தான் துணிச்சல் எனக் கூறுகிறார் போலும். அல்லது அமைச்சர் என்ற முறையில் விளக்கம் அளிக்க  வழிவகையின்றித் துறையின் அறிக்கையை வாசித்தாரே அதைத்தான் துணிச்சலாக் கருதிக் கொள்கிறார்போலும்!

  இங்கே ஒன்றை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். பேரறிஞர் அண்ணா, “அடுத்த நூற்றாண்டில் வேண்டுமென்றால் இந்தியைக் கொண்டு வரட்டும்” எனக் கூறியதற்குத் தமிழ்ப்போராளி இலக்குவனார், “அடுத்து நூற்றாண்டு மக்களிடம் இந்தியைத்திணிப்பதற்கு ஒப்புக்கொள்வதற்குப் பேரறிஞர் அண்ணாவிற்கு யார் உரிமை கொடுத்தார்கள்?” என்றார்.  உடனே பேரறிஞர் அண்ணா, “ஒரு பேச்சுக்கு அவ்வாறு சொன்னேன். இந்தி இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் இப்பக்கம் வந்திடக் கூடாது” என்றார்.  ஆனால், இப்பொழுது பா.ச.க.வின் இந்தித்திணிப்பிற்கேற்பத்தான் தி.மு.க.விளக்கம் இருக்கிறது என்பது வேதனையல்லவா?

  இன்றைக்குப் பேராயக்கட்சியும் (காங்.), “நாங்கள் ஆங்கிலமும் வேண்டும் என்றுதான் கூறுகிறோம்” என்று சொல்கிறார்களே தவிர, இந்தி வேண்டா என்று சொல்லவில்லை. அக்கட்சியின் நிலைப்பாடுதான் அதனுடன் பின்னிப்பிணைந்த உறவு வைத்துள்ள தி.மு.க.விற்கும்! இந்தி மட்டுமல்ல, இந்தியும் இருக்கட்டும் என்பதுபோல் இரு கட்சியினரும் சொல்கிறார்கள்.

  இவ்விருகட்சிகளின் இத்தகைய நிலைப்பாடு தமிழர்க்கு என்றும் தீங்கிழைப்பன.

  எனவே, தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.தாலின் கண்டனக்குரல் எழுப்பி “இந்தியை எதிர்த்துக் களம் புகத்தயார்” எனக் கூறுவதை விட மத்தியில் தி.மு.க. ஆட்சிகளில் இருந்த பொழுது கையாலாகாத் தனத்துடன் செயல்பட்டதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு  தமிழுக்குத் தேவை  முன்னுரிமையல்ல! முழு உரிமையே! என்பதை அறிவித்துத் தம் கட்சியினரையும் ஒட்டி உறவு கொண்டாடும்  பேராயக்கட்சியினரையும்(காங்.) அந்த இலட்சியப்பாதையில் திருப்ப வேண்டும்.

    கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

    பெருமையின் பீடுடையது இல் (திருவள்ளுவர், திருக்குறள் 1021)

சோர்வின்றி முயன்று தமிழ்காக்கும் கடமையாற்றிப் பெருமை கொள்வோமாக!

இலக்குவனார் திருவள்ளுவன்