(தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 தொடர்ச்சி)

தலைப்பு-தொல்காப்பியர்காட்டும்பண்பாட்டு நெறிகள் : thalaippu_tholkappiyam_panbaattunerikal_thi.ve.visayalatchumi

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள்  2/2

தொல்காப்பியர் கூறும் இல்லறப்பயன்

    

காமஞ்சான்ற கடைக் கோட் காலை
ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
(தொல்கற்பியல் – 1138)

  

     காமம்  நிறைந்த உறுதியான காலத்தில் நலம்சிறந்த மக்களோடு சுற்றமொடு கூடி இல்லறம் புரிந்து சுற்றமொடு தலைவனும் தலைவியும் விருந்தோம்பலை இடையறாது செய்து வாழ்தலே கற்பின் பயன்  என்று முனைவர் வ.சுப. மாணிக்கம் விளக்கம் கூறுவார்.

     சிறந்தது பயிற்றல் என்னும் தொல்காப்பியக் கருத்து திருக்குறள் இல்லறவியல் விருந்தோம்பல் அதிகாரத்தில் வளம் பெறுகின்றது. சிறந்த செயல்களை இடைவிடாது நினைத்தல் சிறந்தது பயிற்றல் எனப்படும்.

     வருவிருந்து வைகலும் ஒம்புவான் (குறளடி )

     வருவிருந்து பார்த்திருப்பான் (குறளடி)

ஆகிய குறட்பாக்கள்  இக்கருத்திற்கு அரண் செய்கின்றன.

     தற்காலச் சூழலில் கணவனும் மனைவியும் கருத்தொகுத்து இல்லறம் நடத்தி விருந்தோம்பி மக்களை ஈன்று வளர்த்து நன்னிலையில் நிறுத்தி முதுமையில் அவர்களுடன் இணைந்து சுற்றமொடு மகிழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி வாழ்தலே இல்லறப் பயன் எனலாம்.

மடலேறுதல்

     காதல் கைகூடாத நிலையில் தலைவன் பனங்கருக்கினால் செய்த குதிரையில் ஏறித் தன் காதலை ஊராருக்கும், தலைவியின் பெற்றோருக்கும் உணர்த்துவது மடலேறுதல் எனப்படும். இந்தப் பழக்கம் பண்டைத் தமிழரிடம் இருந்தது அன்பின் ஐந்திணையில் தலைவன் மடலேறுவதாக அச்சுறுத்துவான். ஆனால்  மடல் ஏறுவது இல்லை. பெருந்திணையில் தலைவன் மடலேறுவான் – ‘‘ஏறிய மடல் திறம்’’ என்று பெருந்திணையைக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான
’’ (தொல் – பொருள்.38 )

தலைவன் தலைவியின் களவு, கற்பாக மாறுவதற்கு மடலேறும் வழக்கம் பெருந்துணை புரிந்தது.

மணவாழ்க்கை

  1. களவு வாழ்க்கை 2. பெற்றோர் இசைவுடன் தலைமகனும், தலைமகளும் திருமணம் செய்து கொண்டு வாழும் கற்பு வாழ்க்கை. பெற்றோர் இசைவு இல்லாச் சூழலால் உடன்போக்கு நிகழும் கற்பு வாழ்வைத் தொல்காப்பியம்,

‘‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே
’’ (தொல்பொருள்– 1088)

‘‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
’ (கற். 4) (தொல் 1091)

பெற்றோர் மணம் புரிய இசையாவிட்டால் காதலர் இருவரும் உற்றார் அறியாமல் வேற்றிடம் சென்று மணம் புரிந்து கொள்வர். இதனை,

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்துடன் போகிய காலையான (தொல் கற்பியல் 1089))  என்பார் தொல்காப்பியர்.

     ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறுவதான சூழல் ஏற்பட்டபோது. அந்நெறியைக் காத்திடவே திருமண முறைகள் தோன்றின என்பதைத் தொல்காப்பியர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டால் வலியுறுத்துகிறார். கற்பு என்பது அவள் உயிரினும் மேலானது என்கிறார்.

     ‘‘உயிரினும் சிறந்தன்று நாணே
நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று
’’ (கற். 1059)

சகுனமும் நிமித்தமும்

     சகுனம் பார்க்கும் வழக்கம் அன்று இருந்ததை அறிகிறோம். பல்லி சகுனம் பார்ப்பது தமிழரிடையே மிகவும் பரவலான ஒன்றாகும். தலைவி உடன்போக்கு சென்ற காலத்தில் பல்லி மொழிதல், அக்கம் பக்கத்தினர் கூறும் நற்சொல்லையும் நிமித்தமாகப் பார்த்தாள் என்பதை,

‘‘தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெரிவது
நன்மை தீமை அஞ்ச சார்தலென்று
என்னும் நூற்பா உணர்த்துகின்றது.

பறவை குறுக்கீடு பார்க்கும் பழக்கம் நிலவியிருந்தது. என்பதை,

     ‘‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்’’ (தொல்.புற 1037) என்ற பாடலின் திணை வரி புலப்படுத்துகிறது.

  பெண்களுக்கே உரிய ஒரு செயலாக ஒப்பாரி அமைகிறது. ஒப்பாரிப் பாடல்களின் வாயிலாக இறந்தவரின் வீரம். குடிச் சிறப்பு, உறவுநிலை, உயர்ந்த குண நலம் போன்றவை வெளிப்படும் பண்டைச் சமுதாயத்தில் இத்தகைய முறைகள் இருந்தன என்பதைக் காஞ்சித் திணையின் வாயிலாகத் தொல்காப்பியர் கூறுகின்றனர்.

இதனை,

‘‘ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்’’                    (புறத்திணை 1023)

என்ற வரிகள் விளக்குகின்றன.

பிறந்த நாள் விழா

     மன்னர்கள் தமது பிறந்தநாளைக் கொண்டாடும் பழக்கத்தினை உடையவராக இருந்தனர். இதைத் தொல்காப்பியர்,

சிறந்த நாணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்
(பொருள் 88)

எனப் பிறந்தநாளைப் பெருமங்கலம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்

பெருஞ்சோறு வழங்குதல்

     மன்னர்கள் போர் முடிந்தவுடன் படைவீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கினார் இதனைத் தொல்காப்பியர்.

     ‘‘பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும் (பொருள் 65)’’

என்ற அடியின் மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

     பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.

     தலைமைச் சிறப்பும் தாய்மைப் பண்பும் கொண்ட இ்ந்நூல் இலக்கியச் சாயலைப் பொதும் பெற்றுள்ளது. தமிழ் நாகரிகத்தின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசும் ஒழுங்கு பெற்ற சிறப்புகள் கொண்ட இந்நூலை ஐயம் திரிபறக் கற்று உணர்வோமாக!

தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi

புலவர் தி.வே. விசயலட்சுமி

அலைபேசி: 9841593517