election-symbols01

அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம்.

1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும்.

 இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழில் வேரறுக்கப்பட்டு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை. நினைத்தது நிகழ்ந்துள்ளது.

2.) பன்னூறாயிரவர் படுகொலைகளுக்குக் காரணமாகும் வகையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராமுகமாகவும் செயல்பட்டவர் யாராயினும், வீட்டு மக்கள் நலன்களுக்காக நாட்டுமக்கள் நலன்களைக் காவு கொடுத்தவர்கள் எவராயினும் அவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். . . .திமுக … தோற்கடிக்கப்பட வேண்டியதே!

 தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. தி.மு.க.தலைமையின் இரண்டக வேலைக்குத் தண்டனை கிடைத்து விட்டது. நினைத்தது நிகழ்ந்துள்ளது.

3.) பிற மாநிலங்களில் பா.ச.க. வந்து விட்டுப் போகட்டும்! அதன் மூக்கணாங் கயிறு தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் அதற்கு இடம் தரக்கூடாது. ….செயற்கையாக உருவாக்கப்படும் அலைமாயையால்,  தமிழ் மக்களின் வரவேற்பிற்கும் ஆளானதுபோல் காட்டப்படும் பாசகவும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படவேண்டியதே!

பா.ச.க., பிற மாநிலங்களில் 281 இடங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே ஓர் இடத்தில்மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஓரிடம் என்பதை ஆறுதல் வெற்றியாகக் கொள்ளலாம். எனவே, நினைத்தது நிகழ்ந்துள்ளது.

4.) பாசக கூட்டணியில் உள்ள கட்சிகளும் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் தமிழ், தமிழர் நலன் நாடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்!  . . . . வைகோவை …. வெற்றி பெறச் செய்வது விருதுநகர் தொகுதி வாக்காளர்கள் கடமையாகும்.

வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் கட்சிக்கே வாக்களிக்கும் மனப்பான்மை தமிழக வாக்காளர்களுக்கு உண்டு. எனவே,  பிற கட்சிகளில் தமிழ்நல வேட்பாளர்கள் யாவருமிலர் எனக் கருதினார்களா? அல்லது இவர்களுக்கு அளிப்பதால்  ஈழத்தமிழர்  ஆதரவு நடவடிக்கையைப் பலவகையில் எடுத்து வரும் அஇஅதிமுக வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கக் கூடாது என எண்ணினார்களா எனத் தெரியவில்லை. பா.ம.க. அன்புமணி தவிர வேறு யாருகம் வெற்றி பெறவில்லை. வைகோ.வின் தோல்வி பெரும்பாலோர்க்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

“வைகோ வெற்றி வாய்ப்பை இழப்பதற்கான வாய்ப்பு மிகுதியாக உள்ளது … எப்படியும் வென்றாக வேண்டும் அவர். இல்லையேல், மாநிலங்களவை உறுப்பினராகித் தம் கடமையை ஆற்ற வேண்டும்.”

என முகநூலில் குறிப்பிட்டிருந்தேன்.  அவரது தொகுதி மறு  சிரமைக்கப்பட்ட பின்பு அவர் தொகுதி  மாறியிருக்கலாம்.  கடந்த தேர்தல் பாடத்தைக் கருத்தில் கொள்ளாமல்,   தன் மனித நேயச் செயல்பாடுகளையும் தொகுதி்யில் செய்த சிறப்பான தொண்டுகளையும்,  தாம் நடத்திய தமிழுணர்வுப் போராட்டங்களையும்  நம்பி, விருதுநகரில் போட்டியிட்டுவிட்டார். அவருக்கு வாக்காளிப்பார்கள் எனக் கருதிய வகுப்பாரைவிடவும் அஇஅதிமுகவிற்கு வாக்களிப்பதில் உறுதியாக உள்ள வகுப்பார் பெரும்பான்மை பெற்றுள்ளமையால் தோல்வியைத் தழுவி விட்டார்.

5.) பொதுவுடைமைக் கட்சிகளும் ஓரங்கட்டப்படவேண்டியவையே.

18 இடங்களில் போட்டியிட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டுத் தமிழகத்தில் மண்ணைக் கவ்வின. நினைத்தது நிகழ்ந்துள்ளது.

  5.) அஇஅதிமுக-வின் பழைய நிலைப்பாடு நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது வரவேற்கத்தக்கது ….அக்கட்சியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும். . . …  அஇஅதிமுக வெற்றி பெற்றால் மத்திய அரசில் முதன்மைப் பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பது நடந்தாலும் நல்லதுதான். ஆனால், மூன்றாவது அணி வெற்றி பெற்றால்மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளது.

அஇஅதிமுக 39 தொகுதிகளில் 37 இடங்களைக் கைப்பற்றி இதுவரை நிகழாத அருவினை  ஆற்றி உள்ளது. jayalalitha-meeting-helicopter03எனினும் இதனால், மத்திய அரசில் குறிப்பிடத்தகுந்த முதன்மைப்பங்கு வகிப்பது என்பது இயலாது எனக் கருதியது நடந்துள்ளது. ஏனெனில், பாசக அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் இதன் தயவு அதற்குத் தேவையில்லை. எனினும் மாநிலங்களவையில் இதன் ஒத்துழைப்பு தேவை. அந்த அளவில் இதன் முதன்மை ஓரளவு இருக்கத்தான் செய்யும். நினைத்தது நிகழ்ந்துள்ளது.

 

6.)  ஏழை மக்கள் கட்சியில் உதயகுமார் ஒருவர்தான் வெற்றிக்கனியைச் சுவைக்க வேண்டியவராக உள்ளார். வடநாட்டுக்கட்சியில் தமிழர் ஆதரவுப் போக்கை உண்டாக்குவார் என்ற நம்பிக்கையில் அவரை வெற்றி பெறச்  செய்வது அவரது இடிந்த கரைப் போராட்டங்களுக்கான பரிசாக அமையும். அவர் இன்னும் முனைப்பாகப் பாடுபட்டால்தான் வெற்றி பெறுவார்.

உதயகுமார், தன்னம்பிக்கையுடன் இருந்ததால், நாம் கருதியவாறு முனைப்பாகப் பாடுபடாததால் வெற்றி பெறவில்லை. நினைத்தது நிகழ்ந்துள்ளது.

7.)   தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை கிடைக்கும் வகையில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பெருகும்வரை யாருக்கேனும் நாம் வாக்களித்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ்ப்பகைவர் ஆட்சியேறவே உதவும்.

 தமிழ்நாட்டில் 72.83% வாக்கு பதிவாகியுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு என்பது இல்லை.

 

   நாம் நினைத்தவாறு தேர்தல் முடிவுகள் அமைந்தமை மகிழ்ச்சிதான். என்றாலும் மத்தியில் பாசக ஆட்சி அமைக்கும் இச்சூழலில் அஇஅதிமுக என்ன செய்ய வேண்டும்? உலகில் இதுவரை இல்லாத அளவில் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும் தமிழ் ஈழம் தொடர்பான சட்ட மன்றத் தீர்மானங்கள், பிற thamizhnaatu01நடவடிக்கைகளையும் வடக்கே உள்ளவர்கள் புரிந்து கொள்ளவும் உலகம் நம் பக்கம் இருக்கவும்  நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, தமிழீழ ஏற்பு விளக்கக்குழு என ஒன்றை அமைக்க வேண்டும். ஒத்த உணர்வுடைய பிற அமைப்பினர், கட்சியினரையும் இதில் சேர்க்கலாம். இதன் மூலம், மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலையை மாற்றி, தமிழினப் படுகொலையாளிகள் தண்டனை பெறவம் ஈழத்தமிழர்கள் நீதி பெறவும் தமிழ்ஈழம் உலக நாடுகளால் ஏற்கப்படவும் பாடுபட வேண்டும்.

 தொகுதி அடிப்படையிலான தமிழ்நாட்டின் மேம்பாடு குறித்து ஆராய்ந்து தேவைப்படும் திட்டங்களை விரைந்து முடிக்க தொகுதி மேம்பாட்டுக் குழு அமைத்து, அக்குழு மூலம் தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பெருக்க ஆவன செய்ய வேண்டும்.

 அயல்நாட்டு மாநிலங்களால் ஏற்படும் சிக்கல்களில் நம் பக்கம் உள்ள நயன்மையை – நீதியை – விளக்கி, வெற்றிக்கான சூழலை உருவாக்கவும் மாநிலங்களிடைச் சிக்கல் தீர்வுக் குழுவொன்றை அமைக்க வேண்டும்.

  தமிழ்நாட்டு எல்லைச் சீரமைப்பின் தேவை குறித்து விளக்கவும் எல்லைச் சீரமைப்புக் குழு  நிறுவ வேண்டும்.

உலகின் முதன் மொழியான தமிழின் பெருமையை உணர்த்தவும் இந்தியா முழுமையும் தமிழ் கற்றுத் தரவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள்   தமிழ் கற்கவும், பிறர் தமிழ் அறியவும் வாய்ப்பு ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த தமிழ் பரப்புக் குழு அமைக்க வேண்டும்.

 thamizh04

   நாடாளுமன்றம் என்பது கட்சி அரசியலுக்கான முன்னேற்றம் அல்லது பதவி நலன்களுக்கான வாயில் என எண்ணாமல், நம் மொழி, நம் இனம், நம் நாடு வளரவும் மலரவும் வாய்ப்பான களம்  என எண்ணிச் செயல்பட வேண்டும்.

  இவை போன்ற செயற்பாடுகளில் கட்சிக் கண்ணோட்டம் இன்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டிற்கு ஒரு சிக்கல் எனில், ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இதற்குப் பிற  கட்சிகளும் போலி மதிப்பில்  மூழ்காமல் துணை நிற்க வேண்டும்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு!

வாழிய இந்தியா! வாழிய ஈழம்!

வாழிய ஆசியா! வாழிய வையம்!

Tamilnadu_Map_inTamil01