(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி)

துவாலு தெரியுமா உங்களுக்கு?

துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர்.

நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை  எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது. துவாலு!

இந்தியாவின் மனிதவுரிமைச் செயல்பாடு குறித்துப் பேச துவாலு சார்பில் அங்கு யாரும் இருந்தாகத் தெரியவில்லை.

பசிபிக்கு கடலில் அவாய்க்கும்(Hawaii) ஆத்திரேலியாவுக்கும் நடுவில் இருக்கும் இந்தத் தீவு நாட்டின் மக்கள்தொகை 2021 கணக்கெடுப்பின் படி 12,000 தான். இந்த நாட்டிற்கு இப்போது வந்துள்ள ஆபத்து நமக்கும் கவலையளிக்கக் கூடிய, எச்சரிக்கை தரக்கூடிய ஒன்று.

காலநிலை மாற்றமும் கடற்கோளும்:

துவாலு ஒரு சிவப்பு விளக்கு!

அவாசு (avaaz@avaaz.org) என்றொரு உலகளாவிய பரப்பியக்க வலைத்தளம் உள்ளது. கவலைக்குரிய பொதுச் சிக்கல்களில் அனைவரதும் கவனத்தை ஈர்த்து, இணைய வழியிலேயே கோரிக்கை விண்ணப்பங்களில் ஆதரவுக் கையொப்பங்கள் திரட்டும் பணியை அவாசு தொடர்ந்து செய்து வருகிறது.

அவாசிடமிருந்து அண்மையில் வந்த ஒரு மின்னஞ்சலில் துவாலு நாட்டின் தலைமையமைச்சர் திரு கௌசியா நதானோ ஓர் அவசரச் செய்தி விடுத்திருந்தார். அதில் “எமது தாயகம் உலக வரைபடத்திலிருந்து மறையப் போகிறது, எங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுங்கள்” என்று அபயக் குரல் கொடுத்திருந்தார்.

ஏன்? எப்படி? காலநிலை மாற்றத்தால் துவாலு நாட்டைக் கடல் விழுங்கப் போகிறது! ஆனாலும் நாங்கள் கைகழுவப் போவதில்லை! தொடர்ந்து போராடுவோம்! என்கிறார். போராடுவோம் என்றால் என்ன போராட்டம்?

புவி வெப்பமாவதால் கடல் மட்டம் உயர்ந்து நிலத்தை விழுங்கி வருகிறது. புவி வெப்பமாவதற்கு என்ன காரணம்? பெற்றோல், எரிவாயு, நிலக்கரி ஆகிய புதைபடிவ எரிபொருள்களை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துவது மென்மேலும் பெருகிவருவதால் கரியிருவளி(Carbon dioxide) போன்ற பசுங்குடில் வாயுக்கள் உமிழப்பட்டுப் புவி வெப்பமாகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது. இது அளவுமீறிப் போனால் கடல் கரையேறி, நிலத்தை விழுங்கி விடும். 

ஆகவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் என்பது புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டம் ஆகிறது.

எகித்தில் காலநிலை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன் கௌசியா நதானோ விடுத்ததே மேற்கண்ட அவசரச் செய்தி. இந்த மாநாட்டின் நோக்கம் புதைபடிவ எரிபொருள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதற்குப் புதிய உலக ஒப்பந்தம் வரைவதாகும்.

காலநிலை மாற்றத்தால் பெரும் பேரழிவு ஏற்படும் என்று கிரெடா துன்பெர்க்கு உலகத் தலைவர்களின் முகத்துக்கு நேரே எச்சரித்தது நினைவிருக்கலாம். உண்மையில் அவர்கள் யாருக்கும் அது உரைக்கவே இல்லை.

துவாலுதானே மூழ்கப் போகிறது! ஆத்திரேலியா அல்லவே! அமெரிக்கா அல்லவே! காலநிலை மாற்றச் சீரழிவால் முதலில் தாக்குறும் நலிந்த நாடுகள் பற்றி வல்லரசுகளுக்குக் கவலை இல்லை.

நலிந்த நாடுகளில் ஒன்றாகத்தான் துவாலு குரல் கொடுக்கிறது. காலநிலை மாற்றக் கேட்டினால் அங்குலம் அங்குலமாக மூழ்கிக் கொண்டிருக்கும் பசிபிக்கு தீவுகள் சார்பில் அஃது உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுகிறது.

அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இறுதியில்  இல்லாமற்செய்திட இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக இருக்க வேண்டும்.

உலகத் தலைவர்கள் ஒத்துழைப்பார்களா? உண்மையாக ஒத்துழைக்க மாட்டார்கள். அந்தந்த நாட்டு மக்களும் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க வேண்டும்.

நூறு நோபல் பரிசாளர்களும், உலகெங்கும் ஆயிரக்கணக்கான அறிவியலர்களும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுப் பரவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்பதை கௌசியா நதானோ சுட்டிக் காட்டுகிறார்.

இன்று நான்! நாளை நீ! இதுதான் துவாலு உலகிற்குத் தரும் எச்சரிக்கை! இன்று துவாலுவைக் காப்பதில் நாம் வெற்றி பெற்றால் அது உலகைக் காக்கும் போராட்டத்துக்கு உந்தம் தரும்.

துவாலு ஓர் எச்சரிக்கை விளக்கு! விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!

காலநிலை மாற்றம் குறித்து அறியவும் உணரவும் வேண்டிய பலவும் உண்டு. அடுத்தடுத்துப் பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 5 & 6