தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.
(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி)
ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.
1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
புலவரும் வள்ளுவனும் தூக்குக் கைதிகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நானும், என் வழக்குத் தோழர்கள் இலெனின் – குருமூர்த்தியும் தூக்குக் கைதிகளாக உடன் இருந்தோம்.
அப்போது 1972 அட்டோபர் 20ஆம் நாள் நாங்கள் நடத்திக் கொண்டிருந்த ஒரு போராட்டத்தை ஒட்டிச் சிறை அதிகாரிகள் எங்கள் மீது ஒரு கொடுந்தாக்குதலை நடத்தினார்கள். புலவர், நான், குரு, வள்ளுவன் உட்பட 11 பேர் இருந்தோம். அவர்கள் 100 சிறைக் காவலர்களும் 100 குற்றக் காவலர்களும் திரண்டு வந்து எங்களை அடித்து நொறுக்க முயன்றார்கள். அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்த நாங்கள் தீர்மானித்தோம்.
தாழ்வாரத்தின் இருபக்கக் கதவுகளையும் மூடி அடைத்துக் கொண்டு அவற்றைத் திறக்கவிடாமல் தடுத்தோம். ஒரு பக்கத்துக் கதவை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றவர் புலவர். தட்டு குவளைகள், கஞ்சி, மின்விளக்குகள், மோதலின் போது உடைந்த சட்டங்கள் என்று ஒவ்வொன்றையும் ஆயுதமாகப் பயன்படுத்தி நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். தாக்கியவர்களின் தடிகள் சிலவற்றையும் பிடுங்கித் திருப்பி அடித்தோம். ‘ஆயுதப் போராட்டம் வெல்க’, ‘அடித்தால் திருப்பி அடிப்போம்’, ‘புரட்சி ஓங்குக’ என்றெல்லாம் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகியும் அவர்களால் எங்களை வீழ்த்த முடியவில்லை. அப்போது அண்டா நிறைய மிளகாய்த் தண்ணீர் கரைத்து வந்து, எங்கள் மீது வீசியடிக்க ஆரம்பித்தார்கள். புலவர் கண்களை இறுக மூடிக் கொண்டார். ஆனால் அவரின் கைகள் மட்டும் கதவை உறுதியாகத் தள்ளிக் கொண்டு நின்றன. அவர் என்னிடம் “ஒரு துண்டை எடுத்து தலையில் போடுங்கள்” என்றார். அவ்வாறே செய்தேன். மிளகாய்த் தண்ணீரில் தொப்பலாக நனைந்த பிறகும் அவர் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. அவரது பிடியும் கொஞ்சங்கூடத் தளரவில்லை.
அடுத்து வந்தது கொதிக்கும் நீரிலான மிளகாய்க் கரைசல். இந்த மிளகாய்க் கொதிநீர் மேலே வந்து அடித்த பிறகுதான் புலவரின் பிடி தளர்ந்தது. அவர் கீழே சாய்ந்தார். கதவு திறந்து கொண்டது. அவர்கள் உள்ளே நுழைந்து எங்களை மூர்க்கமாய் அடித்து நொறுக்கினார்கள். நெற்றியிலிருந்து பிடரிவரை புலவரின் மண்டை பிளப்பதை நானே பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்த பிறகும் சிவதாசு, கிருட்டிணப்பிள்ளை என்ற இரு தோழர்களை மொத்தமான கம்பளிப் போர்வையில் சுருட்டி இருபுறமும் நின்று கொண்டு தடியால் அடித்து எலும்புகளை நொறுக்கினார்கள். இதற்குக் ‘கம்பளி பரேடு’ என்று பெயர்.
தாக்குதல் முடிந்து எங்கள் ஒவ்வொருவரின் கைகளையும் பின்புறமாக இறுக்கிக் கட்டித் திறந்த வெளியில் கிடத்தியிருந்தார்கள். நான், குரு, புலவர் மூவரைத் தவிர மற்றவர்கள் உணர்வற்றுக் கிடந்தார்கள். புலவருக்கு ஒரு பக்கம் வள்ளுவன், மறுபக்கம் நான். வள்ளுவனின் வாயிலிருந்து நுரை தள்ளிக் கொண்டிருந்தது. புலவர் என்னிடம் மெதுவாகச் சொன்னார்: “வள்ளுவன் பிழைக்க மாட்டான்னு நினைக்கிறேன்.” அவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இதை ஒரு செய்தியாகச் சொன்னார்.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் முடமாகிப் போனார். மற்றபடி அனைவரும் பிழைத்துக் கொண்டோம். அடுத்து வந்த காலத்தில் புலவரின் தலைமையில் நாங்கள் வெளிப்படுத்திய இந்தப் போக்குணம்தான் சிறையில் ‘நக்குசலைட்’ என்றாலே ஒரு தனி மரியாதையை ஈட்டிக் கொடுத்தது. இந்த மரியாதை இன்றுவரை நீடிக்கிறது.
புலவரை என் நீண்டகால நண்பர் என்று சொல்வது சரியாக இருக்காது. எனக்கு அவர் உடன்பட்ட நண்பராக இருந்தது போலவே முரண்பட்ட ‘பகைவராக’ இருந்த காலமும் உண்டு. இந்தப் ‘பகைமை’ கருத்தியல் வேறுபாடுகளால் மட்டுமே எழுந்த ஒன்று. இதில் இம்மியளவும் சொந்தக் காரணம் எதுவுமில்லை.
முரண்பாடுகள் முற்றி எங்களுக்குள் பேச்சுவார்த்தையே இல்லாத ஒரு காலத்தில்தான் 1974 மே மாதத்தில் திருச்சி மத்திய சிறையில் தோழர் ஏ.சி.கே. (அ.கோ. கத்தூரிரங்கன்) தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் வகித்த பங்கிற்காக என்னைச் சிறைக் கண்காணிப்பாளரின் அறைக்குக் கொண்டுசென்று அடித்து நொறுக்கி இழுத்து வந்து கொட்டடியில் போட்ட போது புலவர்தாம் எனக்காக முதல் குரல் கொடுத்தார். சிறை அதிகாரிகளை அவர் கடுமையாக எச்சரித்தார். “உங்களைச் சும்மா விட மாட்டோம்!” என்றார். அவர்கள் எங்களுக்கிடையிலான முரண்பாட்டை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய போது…
“அது வேறு, இது வேறு. நாங்கள் வேறுபட்டு இருப்பதால் அவரை அடிக்கும் போது வேடிக்கை பார்ப்பேன் என்று நினைத்துவிட வேண்டா” என்றார்.
என்னைத் தொடர்ந்து மற்றத் தோழர்களையும் அடித்து நொறுக்கப் போட்டிருந்த திட்டத்தைப் புலவரின் எச்சரிக்கைக்குப் பிறகு சிறை அதிகாரிகள் கைவிட்டார்கள்.
எங்களைப் போன்ற புரட்சிக் கைதிகளுக்காகவும் போராட்டக் கைதிகளுக்காகவும் மட்டுமல்ல, சாதாரணக் கைதிகளுக்காகவும் கூடப் புலவர் பல முறை போராடியிருக்கிறார்.
புலவரின் மூத்த மகள் தமிழரசி “அப்பா முன்னிலையில்தான் திருமணம்” என்று உறுதியாகக் கூறிவிட்ட பின், திருச்சி மத்திய சிறையில் பழைய கண்டத்தில் புலவரும் நாங்களும் அந்தத் திருமணத்தை நடத்தி வைக்க சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். அவர்கள் முதலில் அனுமதிப்பதாகச் சொல்லி பிறகு ஏமாற்ற முற்பட்டனர். அப்படி இருந்தும் தமிழரசி – அமிர்தலிங்கத்தை உறுதிமொழி எடுக்கச் செய்தார் புலவர். சிறை அலுவலர் மாதவையா அதைத் தடுக்க முயன்ற போது, அவரது சட்டையைப் பிடித்து இழுத்துக் கடுமையாக எச்சரித்தார். நாங்கள் தனிக்கொட்டடிகளில் இருந்தபடி மணமக்களை வாழ்த்தினோம். நான் எழுதிய ‘சிறையிலேயே திருமணம்’ என்ற பாடலை குருமூர்த்தி பாடினார்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 152
Leave a Reply