(தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது

இனிய அன்பர்களே!

இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையை (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) தாழி மடல் 153இல் வெளியிட்டிருந்தேன். உங்களில் சிலராவது சற்றே நீண்ட அந்த உரையைப் படித்திருக்கக் கூடும்.

 அந்த உரையில் காணப்படும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் தாழிக்கு எழுதியுள்ளார். அவர் சுட்டியுள்ள படி என் உரையில் காணப்படும் அந்தப் பிழையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சிக்கல் குறித்து நமக்குத் தெளிவு தரும் அவரது மடலை ஈண்டு தாழியில் பகிர்கிறேன் –    

முதல் திருத்தத்திற்கு வந்த திருத்தம் –

அதன் பொருள் என்ன?

அன்பர் அரி பரந்தாமன் எழுதுகிறார்.

தோழரே,

தாழி 153இல் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றிய விவரம் சற்றுப் பிழையானது.

 நேரு தலைமையமைச்சராகவும் அம்பேத்துகர் சட்ட அமைச்சராகவும் இருந்த நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் காரணமாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

செண்பகம் துரைராசன் வழக்கில், அரசமைப்புச் சட்டத்தில் கல்விக்கான இட ஒதுக்கீடு இல்லை என்று வாதிடப்பட்டது.  அந்த வழக்கை செண்பகம் துரைராசனுக்காக நடத்தியவர் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருட்டிணசாமி ஐயர்.

அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்திற்குக் கல்வியில் இட ஒதுக்கீடு  அளிப்பது சம்பந்தமாக உறுப்பு 15(4) சேர்க்கப்பட்டது. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்ற பதத்தை அரசமைப்புச் சட்டம் 340இல் இருந்து எடுத்துக்  கையாள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு கொண்டுவந்த திருத்தத்திற்கு ஏழு உறுப்பினர்கள் திருத்தம் கொண்டு வந்தார்கள். அதில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று இருந்தது.  அஃதாவது பின்தங்கிய சமூகத்தில் உள்ள பொருளாதார ரீதியில் வசதி படைத்தோருக்கு – creamy layer – இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பது இந்த எழுவரின் திருத்தம்.  இந்த எழுவர் முன்னேறிய பார்ப்பனர்கள் உள்ளிட்ட சாதிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறவில்லை.  இப்போது மோதி அரசு 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு (பணக்காரர்களுக்கு)  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற திருத்தத்தை முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது அவர்கள் கூறவில்லை. அந்த  எழுவரில் ஒருவர் இந்து மகாசபையைச் சார்ந்தவரும்  நேரு அமைச்சரவையில் இடம் பெற்றவருமான சியாம் பிரசாத்து முகர்சி ஆவார்.  அவர்தான் பின்னாளில் சன சங்கத்தைத் தோற்றுவித்தவர்.

பாராளுமன்றம் மறுத்தொதுக்கிய creamy layer கோட்பாட்டை நீதியற்ற முறையில் இந்திரா சகானி வழக்கில் ( மண்டல் வழக்கில்) 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்படுத்தியது.  இதனை ஏற்றுக் கொள்ளாமல் தீர்ப்பளித்த ஒரே நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் மட்டுமே. இடதுசாரி நீதிபதியான  சாவந்து கூட creamy layer-ஐ ஆதரித்துத் தீர்ப்பளித்தார்.

தாழி குறிப்பு:

என் பிழையை மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், தெருமுனைக் கூட்ட உரையில் –

“அந்தத் திருத்தம் [அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்] கொண்டுவருகிற போது ஐந்து ஆறு பேர் தனியாக ஒரு தீர்மானம் கொடுத்தார்கள். என்ன தீர்மானம் தெரியுமா?  இந்த கம்யூனல் அரசாணையில் சாதி பார்க்கிறீர்கள், மதம் பார்க்கிறீர்கள், என்ன சமூகம் என்று பார்க்கிறீர்கள்,  கம்யூனிட்டி பார்க்கிறீர்கள்; அப்படிப் பார்க்காமல் பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரரா என்று பார்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 250 பேரில் ஆறு பேர் கொண்டுவந்த திருத்தத்தை 244 பேர் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்தார்கள். அன்றைக்குத் தோற்றுப் போன அந்தத் திருத்தத்தைதான் இப்போது  மோடியும் அமித்துசாவும் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று பேசியிருந்தேன்.

அவர்கள் ஐந்து ஆறு பேர் அல்ல, சரியாக ஏழு பேர். அந்த எழுவரில் ஒருவர் சியாம் பிரசாத் முகர்சி. அரசு முன்மொழிந்த சட்டத் திருத்தத்துக்கு இந்த எழுவரும் ஒரு திருத்தம் முன்மொழிந்தார்கள். அரசின் முன்மொழிவில் “சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்ட சமூகங்கள்” என்று இருந்தது. எழுவரின் முன்மொழிவில் “சமூக வழியிலும் கல்வி வழியிலும் பொருளியல் வழியிலும் பிற்பட்ட சமூகங்கள்” என்று இருந்தது. இரண்டுக்கும் வேறுபாடு என்ன? புரிகிறதா? சமூக வழியிலும் கல்வி வழியிலும் என்கிறது அரசின் திருத்தம். சமூக வழியிலும் கல்வி வழியிலும் பொருளியல் வழியிலும் என்கிறது எழுவரின் திருத்தம். முடிவில் அரசின் திருத்தம் ஏற்கப்பெற்று, எழுவர் திருத்தம் மறுதலிக்கப்பட்டது. எழுவரின் திருத்தம் ஏற்கப் பெற்றிருந்தால் சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்டவர்கள்   பொருளியல் வழியிலும் பிற்பட்டிருந்தால்தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். இல்லையேல் பொருளியல் வழியில் உயர்ந்து விட்டார்கள் என்று காரணம் காட்டி இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.

சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்டவர்களில் ஒரு பிரிவினர் பொருளியலில் மேலே வந்து விட்டால் அவர்கள் ‘கிரீமி லேயர்’ (creamy layer) எனப்படுகின்றனர். [கிரீமி லேயர் என்பதைக் கடந்த காலத்தில் ‘பசையடுக்கு’ என்று தமிழாக்கியுள்ளேன். வேறு சொல் பொருத்தமாக இருந்தால் முன்மொழிக!] சமூகம், கல்வி இவற்றோடு பொருளியல் அடிப்படையை நுழைக்கும் இந்த ‘கிரீமி லேயர்’ கருத்தை – முதல் திருத்தத்தின் போது நாடாளுமன்றம் மறுதலித்த இந்தக் கருத்தை – மண்டல் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது.

தனியொரு நீதியராக அதனை எதிர்த்தவர் இரத்தினவேல் பாண்டியன் மட்டுமே என்று அரி பரந்தாமன் சுட்டிக் காட்டுகின்றார்.

முதல் திருத்தத்தின் போது திருத்தத்துக்குத் திருத்தமாக முன்மொழியப்பட்ட பொருளியல் அளவுகோலைக் கூடுதலாகச் சேர்ப்பதும், இப்போது மோதி அரசு கொண்டுவந்துள்ள பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றல்ல என்பதை அரி பரந்தாமன் விளக்கியுள்ளார்.

இரண்டுமே சமூகநீதிக்கு எதிரானவை என்பதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

•        > கிரீமி லேயர் (creamy layer) – இதற்குச் சமனாய் ஒரு தமிழ்ச் சொல் வேண்டும். பசையடுக்கு என் முன்மொழிவு. இலக்குவனார் திருவள்ளுவன் என்ன சொல்கிறார்? சிபி? இரவி? யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.  

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடரும்

தோழர் தியாகு

தாழி மடல் 156