(தோழர் தியாகு எழுதுகிறார் 104 : போக்கி – தொடர்ச்சி)

 “வீழ்வது தமிழாக இருப்பினும்…?

இனிய அன்பர்களே!

ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனமான சொல்லும் செயலும் கிளறி விட்டுள்ள சிந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டரசின் இறைமைத் தகுநிலை தொடர்பானது. ஒவ்வோராண்டும் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் ஆளுநர் வாசிக்கும் உரை என்பது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக இருப்பதுதான் மரபு. இதில் ஆளுநரின் சொந்தக் கருத்துக்கு இடமில்லை. மாநில அரசு எழுதிக் கொடுக்கும் உரையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அந்த உரையை அப்படியே படிக்க விருப்பமில்லை என்றால் அவர் பதவி விலகிக் கொள்ள உரிமை உண்டு.

இதே ஆர்.என். இரவி சென்ற ஆண்டு என்ன செய்தார்? மாநில அரசு எழுதிக் கொடுத்ததைத்தான் படித்தார். காட்டாக, பொதுத்தேர்வு(நீட்டு) தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாடுதான் – அது ஆளுநரின் சொந்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறானது என்றாலும் – உரையில் இடம்பெற்றது.

எனவே இந்த முறை சிலவற்றை விட்டும் சிலவற்றைச் சேர்த்தும் அவர் படித்தமைக்குச் சொல்லப்படும் நியாயங்கள் எவையும் ஏற்புடையவை அல்ல.

ஆர்.என். இரவி ஒவ்வொன்றையும் தன்னிச்சையாகவே செய்கிறார், மோதி அமித்துசா தலைமைக்கு இதில் தொடர்பில்லை எனபதும் நம்பும் படியாக இல்லை. அவரின் நடவடிக்கைகள் யாவும் ஆர்எசுஎசு–பாசக செயல்நிரலின் படியானவையே என்பதிலும் ஐயமில்லை.

ஆர்.என். இரவியையும் அவரது அடாவடித்தனத்தையும் ஒரு கணம் மறந்து விட்டு அவர் அப்படியே வாசித்திருக்க வேண்டிய அந்த உரையை எடுத்துக் கொண்டால் அதுதான் இப்போதுள்ளவாறு மாநில அரசின் கொள்கை அறிவிப்பாகும். ஆளுநர் யார்? என்பதை மட்டுமல்ல, முதலமைச்சர் யார்? என்பதையும் மறந்து விட்டு இந்தக் கொள்கை அறிவிப்பை நாம் சீர்தூக்கிப் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் 49 பக்கம் கொண்ட இந்த ‘ஆளுநர் உரை’யின் முதல் சில பத்திகள் மாநில அரசின் பொதுவான வளர்ச்சிச் சாதனைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சரின் ஆற்றல்மிகு தலைமையைப் போற்றுகின்றன. பொங்கலுக்கு 2,429 கோடி உருவாய் செலவில் அரிசிக்கான பங்கீட்டு அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு வழங்குவதை நான்காம் பத்தி குறிப்பிடுகிறது. மாண்டூசு புயல், வடகிழக்குப் பருவமழைச் சேதங்களிலிருந்து மக்களைக் காக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்படுகின்றன.

இதற்குப் பிறகுதான் கொள்கைச் சிக்கல்களில் தமிழக அரசின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்படுகிறது. “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற கலைஞர் கருணாநிதியின் முழக்கம் நினைவுகூரப்பட்டு, தமிழ்மொழிக்கு உரிமையுள்ள இடம் கிடைக்கச் செய்ய அரசு அனைத்து முயற்சிகளும் செய்வதாக உறுதி சொல்லப்படுகிறது. மாநில மொழிகளின் நலன்களுக்கு எதிரான நடைபடிகளை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றிய செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தத் தீர்மானத்துக்கு என்ன மதிப்பு? மதிப்பில்லை என்றால் என்ன காரணம்? மாநிலச் சட்டமன்றம் இயற்றும் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கச் செய்ய மாநில அரசின் முயற்சிகள் என்ன? என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழிகளாக்கத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று மட்டும் சொல்லப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டுமானால் அரசமைப்புச் சட்டம் (பகுதி 17) திருத்தப்பட வேண்டும் என்று பொருள். வேறு எந்த வழியிலும் மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரியாவாறு திருத்த வேண்டும் என்று மாநில அரசு இதற்கு முன் கோரியுள்ளதா? இனிமேல் கோரப் போகிறதா? வலியுறுத்துதல் என்பதன் செயல்சார் பொருள் என்ன?

நடுவணரசில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக்க வலியுறுத்துவது இருக்கட்டும், தமிழ்நாட்டில் மாநில அரசில் தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாக்க இந்த அரசு எடுத்துள்ள நடைபடிகள் என்ன?

மொழிச் சிக்கல் என்பது ஆட்சிமொழிச் சிக்கல் மட்டுமன்று. கல்வி மொழி, பயிற்றுமொழி, பயில்மொழி ஆகிய வகைகளில் தமிழுக்குரிய இடம் கிடைத்துள்ளதா? இருந்த இடமும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் மெய். நடப்பது பெரிய கொடுமை. தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அளவில் கூட தமிழ்க் கல்வி மொழியைக் காக்கவும் மீட்கவும் தமிழ்நாடு அரசு எதுவும் செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு அரசு ஒன்று செய்யட்டும்; தமிழ்நாட்டுக்  கல்வித் துறையில் தமிழை அழிப்பதே எங்கள் கொள்கை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு இப்போது செய்வதையே தொடர்ந்து செய்யட்டும். தமிழை அழித்தால்தான் சமுகநீதி பிழைக்கும் என்று மு.க. தாலின் நம்புவாராயின் அதை அறிவித்து நாடுதழுவிய விவாதத்துக்கு முன்வரும் படி அறைகூவி அழைக்கிறோம்.

புலம்பெயர் உலகத் தமிழர்களுக்குத் தமிழ் கற்றுத் தரவும், தமிழ்ப் பண்பாடு காக்கவும் தமிழக அரசு “தமிழ்ப் பரப்புரைக் கழகம்” அமைத்திருப்பதாகவும், சனவரி 12ஆம் நாளை ‘வெளிநாடுவாழ் தமிழர் நாள்’ என அறிவித்திருப்பதாகவும் ‘ஆளுநர் உரை’ சொல்கிறது. நன்று, புலம்வாழ் தமிழ்க் குழந்தைகளின் தமிழ்க் கல்வியை அழித்து விட்டுப் புலம்பெயர் தமிழருக்குத் தமிழ் கற்றுத் தருவதாகச் சொல்வது கொடிய நகைச்சுவையாகத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வியைக் காயப் போட்ட பின் புலம்பெயர் தமிழர்கள் தமிழ் கற்க எங்கிருந்து ஊக்கம் வரும்? தமிழர் தாயகத்தில் தமிழ் பிழைக்காமல் புலம்பெயர் உலகத்தில் தமிழ் வாழ்வதெப்படி?

எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். அமெரிக்காவில் சிக்காகோவில் மருத்துவராக இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் தன் மகளைத் தமிழ் பேசும் படியும் தமிழ் கற்கும் படியும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அந்தப் பெண் அமெரிக்காவிலேயே பிறந்து அங்கேயே கல்வி கற்றவர். ஒரு முறை மருத்துவர் மகளைச் சென்னைக்கு அழைத்து வந்து ஊரைச் சுற்றிக் காண்பித்தார். மகள் சொன்னார்:

“இது வரை அமெரிக்காவில் தமிழ் தேவையில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன், தமிழ்நாட்டிலும் தமிழ் தேவையில்லை என்று.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் கல்வி கற்க, மருத்துவம் செய்து கொள்ள, தொழில் தொடங்க, அரசுக்கு விண்ணப்பிக்க, கொடுக்கல் வாங்கல், கொள்வினை கொடுப்பினை எதற்கும் தமிழ் தேவையில்லை என்றால் அவர்கள் தமிழ் கற்க வேண்டிய ஊக்கம் எப்படி வரும்?

இந்திய அரசில் தமிழ் ஆட்சிமொழி இல்லை, தமிழக அரசிலும் முழு ஆட்சி மொழி இல்லை, இந்திய உச்ச நீதிமன்றத்திலும், தமிழ் நாட்டில் இருக்கும் ‘மெட்ராசு உயர் நீதிமன்றத்திலும்’ தமிழுக்கு இடமில்லை என்றால், வெளிநாடு வாழ் தமிழர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?

அடிமைகள் பேசும் அடிமைத் தமிழுக்கு யார் தருவார் மதிப்பு?

‘வெளிநாடுவாழ் தமிழர் என்பது முதலீட்டாளர்களுக்கான மங்கல வழக்குதானோ? தமிழுறவு என்பது வெறும் காசுபண உறவுதானோ?

பாரதிய-பார்ப்பனிய-பாசிச ஆற்றல்களை எதிர்த்து நிற்க திமுக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க நாம் தயங்கவில்லை. இதன் பொருள் திமுக ஆட்சியானது தமிழ்க் கல்வியை அழிக்கும் போது நாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது  தலைமைக்கு  எடுத்துக்காட்ட வேண்டும். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்” என்ற நிலை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டு விடக் கூடாதே என்று கவலைப்படுகிறோம்.

திமுகவின் பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்பு நிலைப்பாடு சரியானது. நீட் ஒழிய வேண்டும் என்பதற்காக அது எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், ஆர்எஸ்எஸ் ஆளுநரும் அவருடைய ‘ரிங் மாஸ்டர்’களும் போட்டுவரும் முட்டுக்கட்டையை வெல்வது எப்படி? இவ்வகையில் மாநில அரசின் கொள்கை அறிவிப்பு என்ற முறையில் ‘ஆளுநர் உரை’ காட்டும் வழி என்ன? நாளை பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 71