தலைப்பு-பெயர் வைத்தவர் யார் : thalaippu_peyarvaithavaryaar02
ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம்.

எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை. இதை விட்டுவிட்டு, “ஊரில் உள்ளவர்கள் இவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் வீட்டில் வழங்குகிறார்கள்” என்று சொன்னால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை.

“தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?” என்றால், “தமிழர்கள்” என்றுதானே சொல்லவேண்டும்? “இல்லை இல்லை, வெளியார்கள் வைத்த பேர் மாறி அப்படி ஆகிவிட்டது” என்று சில ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். திராவிடம் என்ற பேரே மாறித் தமிழ் என்று ஆயிற்றாம்!

வடமொழி நூல்களிலும் வேறுமொழி நூல்களிலும் தமிழைத் திராவிடமென்று குறித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு ஆராய்ச்சிக்காரர்கள் யோசித்தார்கள். இந்த ஆராய்ச்சியிலே முதலில் ஈடுபட்டவர்கள் வெள்ளைக்காரர்கள். அநேகமாக இத்தகைய ஆராய்ச்சியில், மரபு தெரியாமல் அவர்கள் சொல்லி வைத்த சில விசயங்களைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டு அதன்மேல் கட்டடங்களைக் கட்டி நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் பலர். திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்று ஆகியிருக்க வேண்டுமென்று முன்னால் தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழியில் சில இடங்க்ளில் ‘ள’ என்ற எழுத்தும் ‘ட’ என்ற எழுத்தும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரும். ‘த்ராவிடம்’ என்பது ‘த்ராவிளம்’ என்று மாறிற்றாம். ‘வ’ என்பது ‘ம’ ஆக மாறுவதும் உண்டு. த்ராவிளம், த்ரவிளம் ஆகிப் பிறகு ‘த்ரமிளம்’ ஆகி, அதன் பிறகு ‘தமிளம்’ ஆகிவிட்டது; அது பிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்!

இங்கிலீசுகாரன் ‘ஒற்றைக் கல் மன்று’ என்ற பெயர் வாயில் நுழையாமல் ‘ஊட்டக்கமந்த்’ என்று பேசினான். அப்படியே வழங்கினான். அது பின்னும் மாறி ‘உதகமண்டலம்’ ஆகிவிட்டது. இது எப்படி வந்தது என்று வெறும் வார்த்தையைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப் புகுந்தார் ஒருவர். “மேகங்கள் தவழ்ந்து நீர் நிறைந்த பரப்பு ஆகையால் உதகமண்டலம் என்ற பெயர் வந்தது” என்று முடிவு கட்டினார். இதற்கும் ஒற்றைக்கல் மன்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையுணர்ந்தோருக்குத் தெரியும். இதுமாதிரித்தான் இருக்கிறது தமிழென்னும் பெயராராய்ச்சியும்.

பெரும் புலவர் கி.வா.சகந்நாதன்:

கன்னித்தமிழ்