நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
1.

முகப்புரை

பூவெலாம் புகழும் நாவலம்பொழிற்கண் அமிழ்தினு மினிய தமிழ்பயில் தென்னாட்டின் பண்டை அறிவுவளர்ச்சி, அரசியன்மேம்பாடு, இல்லற வாழ்க்கை கலம், கொடைவீரம், படைவீரம், கடவுள்வழிபாடு இவற்றைச் செவியும் உள்ளமும்களிகூரக் கவர்ந்துண்ணும்வண்ணம் இயற்றும் விழுமிய செய்யுட்டிறன் முதலிய நாகரிகப் பெருமைகள் எத்துணையோ அறிந்துகொள்ளற்கு வாயிலாக ஒப்புயர்வற்று விளங்குவன, சங்கக்காலத்து வழங்கிய இலக்கண இலக்கிய நூல்கள். அவ்வரியபெரிய நூல்களாற் றெளியக் கிடக்குந் தமிழர் சிறப்பியல்புகள் பலவற்றுள் அறிவுவளர்ச்சியில் ஆண்மக்க ளொப்பப் பெண்பா லாரும் தலைசிறந்து நிலவிய பேரியல்பு, நல்லோர் பலரானும் மிகவும் பாராட்டப்படுவது ஒன்று. இக்காலத்துப் பலபல நாடுகளிற் காணப்படும் பெண்கல்வி. முயற்சி சற்றேறக்குறைய ஈராயிரம் வருடங்கட்கு முன்னரே இத் தென்னட்டாரால் இனிதாளப்பட்டுப் பயன்பெற்றுச் சிறந்ததென்று துணியப்படுமாயின், அஃது ஒருவர்க்கு எவ்வளவோ வியப்பும் இன்பமும் விளக்குமென்பதில் ஐயமில்லை.

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்ப தறிவு.” (திருக்குறள், அறிவுடைமை. உ)

என்பதனால், குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன். போல மனத்தைப் புலமறிந்து தீயதி னீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு என்று கண்டு, அவ்வறிவால் நிரம்பினராதல் இருபாலார்க்கும் இன்றியமையாததென்று துணிந்து அவ் விருபாலாரையும் அவ் வறிவின்கண் ஒப்ப வளர்வித்த பெருநாகரிகம், முன்னைத்தமிழர் நன்புகழ் முடியில் நடுநாயக மணிபோல் ஒளிவிட்டு விளங்குவதாகும். இவ்வருமையைப் பலருந்தெரிந்தின்புற வெண்ணியே, இன்றைக்கு 29 வருடங்கட்குமுந்தி மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திரிகைக்கண் இவ்வுரைகடை என்னால் எழுதப்பட்டது. இதனைக் கற்ற தமிழறிஞர் பலர் தமிழின்கணுள்ள ஆர்வ மிகுதியால் இதனைப் புத்தகவடிவாக்கித் தரும்வண்ணம் வேண்டுதலான், இஃது இப்போது அச்சிடலாயிற்று. என்மீதுள்ள அன்புகாரணமாகவே இதனை அச்சிடுதற்கு மனமுவந்து ஏற்றுக்கொண்டு, இதனைச் சிறிதுங் காலதாமதமின்றி வெளியிட்டுதவிய என்னருமை நண்பர் (Chairman, Tamil Board of Studies, University of Madras) சிரீமான் சி.ஆர். நமச்சிவாய(முதலியா)ரவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். அவர்கள் நெடுங்காலம் இனிதுவாழ உள்ளுவதல்லது அவர்கள் கொள்ள நல்குவதோர் கைம்மாறு காண்கிலேன்.

இங்ஙனம்

இரா. இராகவையங்கார்

(தொடரும்)