தமிழ்ப்புலவர் சரிதம்

முகவுரையும் முன்னுரையும்

ஆசிரியர் ஒரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய நீ.வி.கு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்‘ எனப் பெயர் தந்து இந்நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை முதலிய சில விடயங்களுக்கும், அவர் காலத்தின் பின்னர் வெளிப்பட்ட பல சாசன முதலியவற்றின் துணையானெழுந்த ஆராய்ச்சிகளினாற் போந்த விவரங்களுக்கும் மாறுபாடுகள் காணப்படுதல் வியப்பன்று. இப்பொழுது ஏற்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் முடிவுகளும், இனிப் புதிய சான்றுகள் கிடைக்கப்பெறின், அவற்றானெழும் ஆராய்ச்சிகளால் மாறவேண்டி வரும். இவ்வுண்மையானே, முன்னாராய்ச்சிகளைப் பின்னாராய்ச்சிகளின் முடிவுகள் மறுப்பினும் அதனால் அவற்றுக்கு உளதாவதோர் இழுக் கொருசிறிதுமின்று. மேலும், முன்னாராய்ச்சி முடிவுகளே பின்ன ரொரு ஞான்று தக்க வாதாரம் பெற்று வலியுற்று நிற்றலும் கூடும். ஆகவே முன்னர் எழுந்த ஆராய்ச்சிகளே இனிப் பின்னர் எழும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருங் துணைக்கருவியாக நிற்றல் ஒருதலையாம்.

 இன்னோரன்ன காரணங்களால், இந் நூலினையும் உவப்புடன் தமிழுலகம் ஏற்கும் எனக் கருதியே இது வெளியிடப்பட்டது. இதுவேயுமன்றி, ஆசிரியர்தம் செவ்விய தமிழ் நடை யாவர்க்கும் இன்பமளிக்குமாதலின் இந்நூல் தமிழ் பயிலு மாணவர்க்குச் சிறந்ததொரு வசன நூலாக அமைதலும் பொருந்துவ தொன்றாம்.

ஆசிரியர், தமிழிற்கு முறைப்படவரைந்த தமிழ்ப் புலவர் சரிதமொன்று இல்லாதது பெருங்குறை வென்பதை நன்குணர்ந்தவராதலின், அக்குறை வினை நீக்குவதெங்ஙனமென்று பல்லாற்றானுஞ் சிந்திதிருந்த தொருதலை. அதுபற்றியே, அவர் தமது ஞானபோதினிப் பத்திரிகையில், தமிழ்ப் புலவர் சரிதம் என்ற தலைப்பின் கீழ் இத்தகைய நூலொன்றின் இன்றியமையாமையைக் குறித்தோர் வியாசமெழுதியுள்ளனர். அவ்வியாசமும், ஈண்டு வரையப் பெற்றுள்ள ஒரு சில புலவர்தஞ் சரிதங்கட்கு முன் பாயிரமாக நிற்றல் எவ் வாற்றானு மேற்புடைத்தென்று கருதி, இம் முகவுரையின் பின்னர் அச்சிடப் பட்டுள்ளது. அதன்கட் கூறியாங்குச் செந்தமிழ்ப் புலவர்தஞ் சீரிய சரித மெழுதும் ஆற்றல் படைத்த பெரியார், பண்டுதொட்டு இன்றளவுந் தோன்றிய தலை  சிறந்த தமிழ்ப் புலவர்தம் புலமையெல்லாந் திரண்டோ ருருவெடுத் தாற்போல விளங்கும் செந்தமிழ்ப் பேராசிரியர் மகாமகோபாத்தியாய முனைவர்(டாக்டர்) உ. வே. சாமிநாத(ஐய)ர் அவர்களே யென்பது தேற்றம். இவ்வுண்மையைப் பலவாண்டுகளுக்கு முன்னரே ஆசிரியர் கண்டறிந்தெழுதியது பெரிதும் பாராட்டற்பாலது. செந்தமிழை முன்னேற்றக் கருதி அரும்பெரும் பாடுபடும் செல்வர்கள் பலரும், புலவர் சிந்தாமணியாகிய சிரீமகாமகோபாத்தியாய(ஐய)ர் அவர்கட்கு உதவித்துணையாக வேறு சில தக்க புலவரை யமைத்துக் கொடுத்து, அன்னார் தம் மனக்குகையுட் பொதிந்துகிடக்கும் பெறலரும் மணிக்குவைகளாகிய தமிழ்ப் புலவர் வரலாறுகளை வெளிப்படுத்த முயல்வாராயின், அது தமிழகஞ் செய்த பெருந் தவப் பயனாம்.

 ஆசிரியர்தம் நால்கள் பலவற்றையும் தனித் தனியாயும் ஒரு சேரத் தொகுத்தும் குறிப்புரை முதலியவற்றோடு வெளியிடக் கருதி, அன்னர்தங் குமார் சிரஞ்சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட நன் முயற்சி பலவும் இடையூறின்றி இனிது கிறைவேற எல்லாம் வல்ல இறை வன் திருவருள் புரிவாராக.

அண்ணாமலை நகர், l   ;    7–10–1983.

                                                                                                                                       இங்ஙனம்,

                                                 ந. பலராம(ஐய)ர்

முன்னுரை*

உலகின்கணுள்ள நாகரிக நாடுகளில் வழங்கும்  மொழிகளெல்லாம் நன்னிலையிலிருக்கின்றன. அவ்வந் நாடுகளின் நாகரிக விருத்திக்கேற்றவாறு ஆங்காங்குப் பயிலுறூஉம் மொழிகளும் விருத்தியடைந்து ஒளி சிறந்து விளங்குகின்றன. அவ்வம்மொழிகளின் மகிமையுஞ் சிறப்பும் அவ்வம் மொழிகள்  வல்ல புலவர்களானும் அன்னாரியற்றிய நூற்றொகைகளாலும் புலனாம். ஆகவே ஒவ்வொரு மொழியின் சிறப்பையும் விளக்குங் கருவிகளுள் தலை நின்றது அம்மொழியின் புலவர் சரிதமென்பது துணியப்படும். படவே ஒவ்வொரு மொழிக்கும் புலவர் சரிதம் வகுக்கப் படுதல் இன்றியமையாத தொன்றாம்; எனவே புலவர் சரிதமில்லாமை மொழிக்கே யொரு குறைவாக மதிக்கப்படுதன் மட்டில் கில்லாமல் அம்மொழி பயின்ரறோர்க்கும் பயில் வோர்க்கும் உற்றதோர் பெருங் குறையாகவும் மதிக்கப்படுகின்றது.

 இத்தகைய குறைபாடு நமது தமிழ்மொழிக்கண்ணு முண்டுகொல்? இது விசயமாக ஆராய்ச்சி செய்தவழித் தோன்றுவனயாவை? ஓராற்றால் உற்று நோக்கு மிடத்து இக்குறைபாடு முன்னொரு காலத்திருந்து பின்னர்ச் சிறிது சிறிதாக நீங்கத் தலைப்பட்டு வாரா நின்றது. சில நூற்றாண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டதாகத் தோன்றுகின்ற ‘தமிழ் நாவலர் சரிதை‘ என்ற தோர் நூலுளது. அந்நூல் தமிழ் காவலர்களுட் சிலருடைய சரித்திரங்களைக் கூறுமுகத்தால் அவ்வந் நாவலர்கள் பற்பல வமயங்களிற் பாடிய செய்யுட் களையும் இடையே யெடுத்துரைக்கின்றது. அஃது ஒருவாறு உய்த்தறியு மிடத்துத் தற்காலத்து வெளிப்பட்டுலவும் ‘தனிப்பாடற்றிரட்டு‘ என்னும் நூலையும் போலா நின்றது. இன்னின்ன பாடல்கள் இன்னின்ன சந்தர்ப் பங்களிற் பாடப்பெற்றனவென்பது குறிக்கப்பட்டிருத்தலின், தனிப்பாடற் றிரட்டிலுந் தமிழ் நாவலர் சரிதை மேதக்கதென்பது தேற்றம். தனிப்பாடற் றிரட்டு இத்தமிழ் நாவலர் சரிதையினுதவி கொண்டே தொகுக்கப்பட்டு மிருக்கலாமென்பது தோன்றுகின்றது.

இது நிற்க. யாழ்ப்பாணத்திற் காசி(செட்டி) யென்பா ரொருவர் தமிழ்ப் புலவர் சரிதத்தைத் தொகுத்து ஆங்கில மொழியிலெழுதிப் பல்லாண்டுகட்கு முன்னர் வெளியிட்டனர். அது நூலாராய்ச்சி முறையைத் தழுவி ஒருவாறு எழுதப்பட்டுளது; அது காலக்கிரமப்படி யெழுதப்படாமை காலவரையறை காண்டலரிதாகின்றமைபற்றியே போலும். அதன்கண் நல்லிசைப்புலவர் பல ருடைய சரிதங் காணப்படாமையாற் குன்றக் கூறவென்லுங் குற்றங் தங்குவ தாயிற்று. அதன் பின்னர் யாழ்ப்பாணத்து ஆ. சதாசிவம்(பிள்ளை) யென்பார் ‘பாவலர் சரித்திர தீபகம்’ என்றதோர் நூலியற்றிப் பிரசுரித்தனர். அது தமிழ்ப்புலவர் பெயர்களை அகராதிக்கிரமப்படுத்தியெழுதியதோர் தமிழ்வசன நூலாம்; இடையிடையே அவ்வப் புலவருடைய பாடல்களும் உதாரணமாகக் காட்டப்பட்டுள. கால நிருணய விசயத்தில் இந்நூல் அதிக திருப்திகரமான தாயிருக்கவில்லை. இதன்கட் சில அருமையான விசயங்களும் கூறப்படாமற் போயின.

இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப் பதிகாரத்தினும்  மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப்பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புகளும் அப்புலவர்களே யாதரித்தாரைப் புற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் நாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங்களையுங் கூட்டித் தனி நூலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி யுற்றுக் கழிபேருவகை பூக்கின்றாம். இம்முயற்சி கைகூடுமாறு நம் ஐயரவர்கட்கு இறைவன் திருவருள் புரிவாராக.

இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய விடங்களிற் பெரும்புகழ் படைத்தவரும், திருவாமத்துனரிலிருந்து காலங் கழித்தவருமாகிய ‘திருப்புகழ்ச் சுவாமிகள்’ என்ற முருகதாச சாமியார் இயற்றிய ‘புலவர் புராணம்+ என்றதோர் நூல் வெளிப்போந்துளது. இந் நூல் முழுதுஞ் செய்யுளானியன்றுளது. சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விசயங்களெல்லாம் ஒருவாறு தொகுத்து இந்நூலின்கட் கூறப்பட்டுள. காலவரையறை, நூலாராய்ச்சி முதலியன இந் நூலின்கட் கண்டிலேம். இதனையொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈண்டு. எடுத்த விசயமன்று. தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஓராற்றாற் பயன்படுவதாகும்.

 இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விசயமாக வெளிப்பட்ட நூல்களைப்பற்றி யுரைத்தாம். இனிச் சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வந்நூலின் பதிப்புரைக்கண் நூலாசிரியர் வரலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் கூறியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப்படும் தமிழ்ப் பத்திரிகைகளில் விசயங்களாகத் தமிழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டுகட்கு முன்னர் அட்டாவதானி  வீராசாமி(செட்டியார்) என்பார் “வினோத ரசமஞ்சரி‘ என்பதோர் நூலியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பெயர்ப் பொருளின்படி விநோதார்த்தமாக எழுதப்பட்டதோர் கதைத் தொகுதியெனக் கொள்ளற்பாலதே யன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்றியதோர் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படுவ தன்று. எனவே குறைபாடுகளினத்தும் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள்ளத் தக்கதாய் தமிழ்ப் புலவராவாரனைவரையும்பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னாரியற்றிய நூல்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவு பெற நியாயவாயிலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் இவளிப்பட்டிலது.  அத்தகைய தொன்று என்று வெளிப்படுமோ? அறியோம்.  இந்த விசயத்தைத் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் நன்கு கவனித்து நடப்பாராக.

 வி.கோ. சூ.

அது கணம் பொருக்திய திவான் பகதூர் வ.கிருட்டிணமாசாரியாரவர்களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாயிற்று. பன்னிரண்டு பாகங்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றோம். இதன் முதற் பாகத்திற் சில பகுதிகள் சமது சர்வ கலாசாலையின் பிரதம கலா பரீட்சைக்கும், கலா வித்தியார்த்திபட்ட பரீட்சைக்கும், கலாநாயகபட்ட பரீட்சைக்கும், பாடமாக எற்படுத்தப்பட்டுள. (இப் பொழுது இந் நூல் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.)

ஆசிரியர் ஞானபோதினிப் பத்திரிகையில் வரைந்தது.

பரிதிமாற்கலைஞர் 

-தமிழ்ப்புலவர் சரிதம்