(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. தொடர்ச்சி)

 

 

 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3

மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.

இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு

‘பெண்ணி னாகிய பேரஞர் பூமியு
ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.’ 

‘புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.’

‘பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.’

‘அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.’

‘நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.’

என இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு? அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.

 

ஆச லம்புரி யைம்பொறி வாளியுங்
காச லம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
என்றார் கல்வியிற்பெரியாரும்.

நடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்
குடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை
யிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்
கடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.

என்றார் வாமன முநிவரும்.

ஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.

காமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. ‘நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே’ என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் ‘பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக. இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,

கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே‘ என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம்! பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். ‘இல்லதெ னில்லவண் மாண்பானால்’ என்பதனையும் நோக்கிக்கொள்க.

இனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, ‘கலைமலிகாரிகை‘ எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், ‘கலைவலார்’ என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.

வீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. ‘நன்மக்களெங்கே பிறந்தாலுமென்’ என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரும் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. ‘எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக‘ என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,

ஆதிமந்தியார்,      குறமகள் இளவெயினி,   

வெள்ளிவீதியார்,    பேய்மகள் இளவெயினி,  

ஔவையார், காவற்பெண்டு,     

பாரிமகளிர்,  காரைக்காற்பேயம்மையார்,

பூதப்பாண்டியன்றேவியார், வில்லிபுத்தூர்க்கோதையார்,

காக்கைபாடினியார்,  நச்செள்ளையார்   

எனப் பலராவர்.

 

(தொடரும்)

இரா. இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்