நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்
(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி)
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை!
பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2
11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா?
வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல், பொழுதுபோக்குக்காகக் கற்கிறார்கள். இதன் காரணமாக, நல்ல படைப்பாளிகள், கவிஞர்கள், தங்களுடைய படைப்புகளைச் சந்தைப்படுத்த இயலாமற் போகிறது. எங்களைப்போன்ற திறனாய்வு அறிஞர்கள் ஊன்றிக் கற்க வேண்டிய நூல்கள் இல்லாமற் போகிறது. இத்தகைய நிலையால் திறனாய்வாளர் என்னும் நிலைக்குட்பட்டோர், புறரக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. உலக அரங்கில் திறனாய்வாளர்களுக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தமிழில் திறனாய்வு செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அதைவிட மோசமாக நிலைமை இன்றைய தமிழகத்தில் உண்டாகிவிட்டது; இன்று பொழுதுபோக்குக்காக பேசுபவர்கள் திறனாய்வாளர்களாகக் காட்டப்படுகிறார்கள், போற்றப் படுகிறார்கள். இது மிகப்பெரிய பிழைமை. இதன் போக்கில், நாளைய சமுதாயம், உண்மையான திறனாய்வு என்பது என்ன என்பதையே உணரவிடாத நிலைக்குத்தள்ளப்படும்.
12) ? ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கியக் கூட்டங்களை மாதம் தோறும் ஒய்,எம்,சி.ஏ, வில் நடத்தி வருகிறீர்கள். இதற்கான வரவேற்பு எப்படியுள்ளது?
நான் பாரதிதாசன் மரபுவழியில் ஆர்வமுள்ள ஆர்வலர்களுக்காக நடத்திக்கொண்டிருக்கிறேன். இக்கூட்டங்களில், ஏறக்குறைய 70 ஆர்வலர்கள் எப்போதும் வருபவர்கள். பேசப்படும் கருத்தையொட்டி வரும் மற்ற ஆர்வலர்கள் ஒரு 20-25 எண்ணிக்கையில் இருக்கலாம். வரையறுக்கப்பட்ட ஒரு வட்டத்துக்குள்தான் இந்த அவையினர் உள்ளனர். இலக்கியக்கூட்டங்களுக்கு வரும் ஆர்வலர்களின் நிலையை 1967-க்கு முன்னர் அதற்குப்பின்னர் என இரு நிலைப்படுத்தலாம். 67-க்கு முன்னர் 23 % கூட கற்றவர்கள் இல்லை என்பது உண்மை நிலையாயினும், இலக்கியக்கூட்டங்களுக்குத் திரளான மக்கள் கூட்டங்களைக் காணலாம். அப்போது நடந்த கவியரங்கங்கள் மிகவும் நேர்த்தியாக அமைந்தன. இன்று தமிழ் நாட்டில் படித்தவர்களின் விழுக்காடு 100 ஐத்தொடும் என்றாலும், இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வோர் மிகவும் குறைந்தவர்களே. இன்றைய நிலையில் பல மன்றங்களில், ஆழமே இல்லாத, எந்த வகையான இலக்கியத் தூண்டுதலையும் ஏற்படுத்தாத பொழிவுகளே முதன்மையாக உள்ளன. கவிதைகளில், இரட்டுற மொழிதல், நகைச்சுவை தவிர்த்து சீரிய, விழுமிய கவிதைகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது.
13) ? நிலைகளை நீங்கள் குறிக்கும்போது 1967 ஆம் ஆண்டை அளவீடாகக்கொள்ளக் காரணம் என்ன?
1967-க்கு முன்னர்க் கட்சி சார்பில்லாத தமிழார்வம் அனைவரிடமும் இருந்தது. தமிழே பொதுமக்களைக் கவர உதவும் பெருஞ்சாதனமாக அக்காலக்கட்டத்தில் விளங்கியது. 1967 –க்குப்பின்னர், தமிழை அறவே மறந்துவிட்டார்கள். 1967-க்கு முன்னர்ப் பிறந்தவர்கள், இவ்வெவ்வேறு காலக்கட்ட நிலைமைகளைத் தெளிவாக உணரவியலும்.
14) ? நீங்கள் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றிய பணியறிவு உடையவர்கள்.. அந்தப் பணியறிவு மூலம், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், ஆய்வுகளின் நோக்கும், தரமும் எவ்வாறு வேறுபடுகிறது என அறிகிறீர்கள்?
அங்கு உயர்கல்வி என்பது கிடைத்தற்கரிய பொருளாகவே இன்றளவிலும் உள்ளது. வாய்ப்புகளையும் பொருளுதவிகளையும் அவரவரே உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற நிலை யுள்ளது. கல்விக்கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், திறமையுள்ள, விருப்பமுள்ளவர்களே உயர்கல்விக்கு வருகிறார்கள். கல்விமேலான அருமை பாராட்டல் அங்கு அதிகமாகவே உள்ளதாக உணர்கிறேன். கல்வியை முழுக்க உள்வாங்கிக்கொள்ளல் வேண்டும் என்ற தேட்டல், தேடல் அங்கு அதிகம். இந்தியாவில், கல்வி என்பது பலவிதமான உதவித்தொகைகள், பலவிதமான உதவிகளுடன் கொடுக்கப்படுகிறது. இங்கு உயர்கல்வி என்பது ஓர் அரிய செயலே அன்று. யாராலும் செய்யக்கூடியது. அதனால் அது மலிவாகிவிட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்குகிறது. இங்குள்ள பல ஆய்வு மாணவர்களுக்கு முதிர்ச்சியே இல்லை. இதற்கான காரணம் தொடக்கக்கல்வியை ஊன்றிக்கற்கவில்லை. கிளிப்பிள்ளைபோல் எதையோ சொல்லிச்சேர்த்த கல்வி மட்டுமே அவர்களிடம் உள்ளது. புதிய கருத்துகளைத் தேடும் ஆர்வமும், ஆய்வு மனப்பான்மையும் இல்லாதவர்களாகவே பெரும்பான்மையினர் உள்ளனர். இதை மாணவர்களின் குறை என்று நான் கட்டாயம் கூற மாட்டேன்; குமுகாயம்(சமுதாயம்) அறிவுக்கான மரியாதையைக் கொடுக்க மறந்துவிட்டது. இன்றைய தமிழகத்தில், தனிப்பட்டவர்களின் விளம்பர நிலையே அவர்களைப் பெரிதாக்கிக்காட்டுகிறது. பல இடங்களில் இதுகுறித்து நான் கூறியுள்ளேன்; “In our country, popularity is always mistaken as scholarship“. இத்தகு நிலையால், இன்றைய மாணவர்களும், விளம்பரம் தேடிக்கொள்வதில் தான் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், உயர்கல்வி மிகவும் பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஆராய்ச்சிக்கூடங்கள், நூல்கள், என்று தேவைப்படும் அத்தனைக் கருவிகளும் இருக்கும் நிலையிலும் இத்தகு நிலையைத்தான் நாம் பார்க்கிறோம். உயர்கல்வியில் ஒரு விழுமிய இடத்தைப் பெறல்வேண்டும் என்ற நாட்டம் இல்லை. தொழில் நுட்பத்துறையிலும், மருத்துவத்துறையிலும் வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. உலகளாவிய நிலையில் தமிழர்கள் இவ்விருதுறைகளிலும் தங்கள் திறமையை நிலைநாட்டி வருகிறார்கள்; அருவினை(சாதனை) படைத்துவருகிறார்கள். இதற்குக் காரணம், இத்துறைகளுக்கான விளம்பரங்களும், வருவாயும் அதிகம். மானுடவியல் துறைகளில் அத்தகைய நிலை இல்லை. சமூக அமைப்பு முறையில் இத்தகைய ஓரவஞ்சனை உள்ளது.
15)? பொதுவாக தமிழகத்தில் மொழிகுறித்த ஆய்வுகள் ஒரு குறுகிய நோக்கத்திலேயே நடக்கின்றன என்னும் கோணம் நிலவுகிறது. இது குறித்த உங்கள் கருத்துகள் ஏதேனும் உண்டா?
தமிழ் மொழி என்றால், எத்தனை நூல்களைக் கற்றாக வேண்டும் என்ற கடப்பாடோ, உழைப்போ, ஆர்வமோ இப்போது குறைந்தே காணப்படுகிறது. பாரதிதாசன் தன்னுடைய பதினாறாவது அகவைக்குள், தமிழின் இலக்கண நூல்கள், காப்பியங்கள் என அத்தனை நூல்களையும் கற்றுத்தேர்ந்துவிட்டார். மறைமலை அடிகள் கல்லூரிக்குப்போகாமலேயே, பதினான்கு வயதுக்குள், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள் என அனைத்தையும் கற்றுத்தேர்ந்தவர். ஆங்கிலமும், சமற்கிருதமும் பயின்றவர். அன்றைக்கு இருந்த அத்தகைய உழைப்பும் முயற்சியும் அரிதாகவே உள்ளது. இன்றைய இணையத்தில் எதைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இருந்தாலும், ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாகத் தமிழ்த்துறையில் இத்தகைய ஏனோதானோ மனப்பான்மை பெருகியுள்ளது. ஆய்வாளர்களுக்கு வெளியுலகில் பெருத்த வரவேற்பு இல்லை. புதிய இடதுசாரி கண்ணோட்டம் உடையோர்களுக்குச் சற்று ஆதரவு கிடைக்கிறது. விளம்பரமும் கிடைக்கிறது. அவர்கள்தாம் கற்பதில் சற்று ஆர்வம் காட்டுபவர்களாக இன்று உள்ளனர். இத்தகைய நிலையும் ஒரு குறிப்பிட்ட குமுகத்தின் கொள்கைகளுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக்கொள்ளும் நிலையே. இருந்தாலும் குழுவாகச் செயல்படுவதால், ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளும் தன்மை உள்ளது.
,
16) ?சொற்பொழிவாளராகத் தற்போது, பல கல்லூரிகளிலும், கல்வி நிலையங்களிலும் உரையாற்றி வருகிறீர்கள். தமிழ் இலக்கியம், மொழியியல் என்னும் நிலைகளில் இன்றைய இளைஞர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது?
நான் முப்பதாண்டு காலமாக மாநிலக்கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். தமிழ் படிக்கும் மாணவர்களில் வெறும் 20 விழுக்காடே சற்று ஆர்வத்துடன் தமிழ் கற்க வருபவர்கள். ஏனையோர் அனைவரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்க எண்ணி வந்தவர்களே. உண்மையிலேயே தமிழ் கற்க விரும்பி வருபவர்களை, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறிஞ்சிப்பூப் பூப்பதைப்போன்றே காணல் இயலும்.
17) ? இந்திய அளவில் தமிழின் பயன்பாடு வருவதற்கு முன்னர், அரசியல், இதழியல், கல்வியியல், குமுக(சமுதாயவியல்) போன்ற பல துறைகளில் தமிழகத்தில் தமிழ் முழுப்பயன்பாட்டில் வரவில்லை. இதற்கான காரணம் என்று நீங்கள் எதைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?
தமிழர்கள் எப்போதுமே இரட்டை மனநிலை கொண்டவர்கள். 1956 ஆம் ஆண்டு, திசம்பர் 26 ஆம் நாள் சட்டசபையில் தமிழ் ஆட்சி மொழியாக ஆணை நிறைவேற்றப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அன்று அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேறி இன்று அறுபதாண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் ஒரு துறையில் கூட தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அரசின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இன்றைய நிலையில் அதிகமாக இருந்தாலும், பயன்பாட்டில் உள்ள படிவங்கள் முழுதும் தமிழில் இருந்தால் எண்ணம் நிறைவேறும். நம்மிடம் உண்மை இல்லை என்பதே உண்மை. சமூக உளவியல்படி, தமிழர்களிடையே ஏதோ குறைபாடு உள்ளது. தனிப்பட்ட எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும், நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை.
18)? உங்கள் பங்களிப்பில் மற்றுமொரு சிறப்பு, மொழியாக்கம். தமிழ்க்கவிஞர்களின் பல கவிதைகளை நீங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இத்தகைய செயலில் ஆர்வம் வரக்காரணம் என்ன?
தமிழ்ப்படைப்புகள் பல, ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் தமிழ்ப்படைப்புகள் குறித்துப் பேசப்படுவதுமில்லை. அதற்குக் காரணம் மொழியாக்கத் திறமையின்மையே. இந்த நோக்கத்தில் நான் சிந்தித்த போது, நாமும் மொழியாக்கம் செய்தல் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒரு நாளில் ஐந்து தமிழ்க்கவிதைகளை மொழியாக்கம் செய்துவந்தேன். “associated content” என்ற அமெரிக்க வலைத்தளத்தில் என் மொழியாக்கக் கவிதைகளை இட்டுவந்தேன். நான் இட்ட பல கவிதைகளைப் பல அமெரிக்கர்கள் சிலாகித்துப் பாராட்டி எனக்கு மடல்கள் அனுப்பலானார்கள். தாராபாரதியின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு இளைஞர் ஒருவர், அதைப்படித்ததும், தான் புத்துணர்வு பெற்றதாக எனக்கு மடலனுப்பியுள்ளார். அறுபத்தேழாயிரம் வாசகர்களைக் கொண்ட வட்டத்தில் தமிழ்க்கவிதைகள் போற்றப்படுகின்றன என்பதைக் கண்டு வியந்தேன். அப்போது சென்னையிலிருந்து வெளிவந்த ‘டெக்கான் கிரானிக்கல்’ என்னும் ஆங்கிலச் செய்தித்தாள், என் கவிதைகளைக் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அப்போது என்னுடைய சொந்த ஆங்கிலக்கவிதைகளையும் அந்த வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். பின்னர் அந்த வலைத்தளம் விற்கப்பட்டுவிட்டதால், அனைத்துப் படைப்புகளும் கிடைக்காமற் போயின. அவற்றில் சேர்த்துவைத்த சில கவிதைகள் என்னிடம் உள்ளன. அவை மின்புத்தகமாக வெளிவந்துள்ளன.
19)? உங்களுடைய மொழியாக்கப்படைப்புகள் வரவேற்கப்படுகின்றனவா? உலக அளவில் அவை உரிய அங்கீகாரம் பெறுகின்றனவா?
முன்னர்க் குறிப்பிட்டபடி, வாசகர்களின் ஏற்பு/அங்கீகாரம் எனது மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு இருந்தது. பின்னர் சிங்கப்பூர் தலைமையர்(பிரதமர்) இலீ-குவான்-யூ-வின் 90ஆவது பிறந்த நாளில் 90 வெவ்வேறு தமிழ்க் கவிஞர்களால் பாடப்பெற்ற கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி எனக்குக் கிடைத்தது. ஆயினும் ஒரு மாதத்திற்குள் அத்தனைக் கவிதைகளையும் மொழிபெயர்த்தல் வேண்டும். பகுதி பகுதியாக எனக்கனுப்பப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து உரிய காலத்தில் செய்துமுடித்தேன். இலீ-குவான்-யூ என்னுடைய மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, அவர் கைப்படக் கையெழுத்திட்டுப் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். அது எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.
20) ? உங்கள் எண்ணத்துள் கருவாக உதித்து, இன்னும் உரிய வடிவம் பெறாமல், நிறைவேற்றப்படாத திட்டங்கள் எவையேனும் உளவா?
சாகித்திய அகாதமி மூலம் எனது தந்தையாரின் வாழ்க்கை வரலாறு சிறு நூலாக வெளிவந்து இரண்டு மூன்று பதிப்புகளைக் கடந்துவிட்டது. ஆயினும் என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளியிடும் ஆசை உள்ளது. குறிப்புக்கட்டுரைகள் உள்ளன. பல இதழ்களில் வந்த செய்தி நறுக்குகள் உள்ளன. அவற்றைத் தொகுத்து நூலாக்கும் ஆசை உள்ளது.
21) ? உங்களுடைய தமிழ்ப்பணி மேலும் சிறக்க வேண்டும் என்று என் சார்பிலும், இலக்கியவேல் சார்பிலும் வாழ்த்துகள். மிக்க நன்றி.
மிக்க நன்றி. இலக்கியவேலின் இலக்கை அடைய உங்களுக்கு வாழ்த்துகள்.
திருவிக விருதாளர் பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை
– இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல் – ஏப்பிரல் 2017
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply