நாலடியார் துறவறவியலில் தொடங்கி முதலில் செல்வ நிலையாமை, இளமை நிலையாமை குறித்துக் கூறுகிறது. மூன்றாவதாக யாக்கை நிலையாமையை உரைக்கிறது. யாக்கை என்பது உடலைக் குறிக்கிறது. யாத்தல் என்றால் கட்டல் என்று பொருள். இதிலிருந்து யாக்கை வந்தது.  எலும்பு, தசை, தசை நார், இழைகள், உள்ளுறுப்புகள் முதலியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதால் யாக்கை எனப் பெயர் பெற்றது. 

மூன்று அதிகாரத் தலைப்பு கூறும் நிலையாமை குறித்து மணிமேகலை முன்னரே

இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;

(சிறைசெய் காதை: 135-136) எனக் கூறியுள்ளது.

திருமூலர், திருமந்திரத்தில் நிலையாமையைப் பாடியுள்ளார். பாடல் எண் 187 முதல்  211 வரை யாக்கை நிலையாமை குறித்துக் கூறுகிறார். சித்தர்களும் யாக்கை நிலையாமை முதலான நிலையாமை குறித்துப் பாடியுள்ளனர்.

இனி யாக்கை நிலையாமை குறித்துப் பார்ப்போம்!

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்

துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்

எஞ்சினார் இவ்வுலகத் தில். (நாலடியார் பாடல் 21)

பொருள்:மலைமேல் தோன்றுகின்ற முழு நிலவைப்போல, யானைமீது அமர்ந்து குடைபிடிக்கச் செய்து உலா வந்த அரசர்களும் இறந்தார்கள் என்று சொல்லப்பட்டார்களே அல்லாமல் இவ்வுலகில் இறப்பிலிருந்து தப்பி உயிரோடிருந்தவர் என்று சொல்லப்பட்டவர் யாருமிலர்.

சொல் விளக்கம்: மலை=மலையின்; மிசை=மேலே; தோன்றும்= தோன்றுகிற; மதியம்போல்=திங்களைப்போல; யானை=யானையின்; தலைமிசை= தலைமேலே; கொண்ட=(கவியுமாறு)கொண்ட; குடையர்=வெண்கொற்றக் குடையை உடைய மன்னர்கள்; நிலமிசை=பூமிமேலே; துஞ்சினார் என்று=இறந்தார் என்று; எடுத்து=பிறரால் எடுத்து; தூற்றப்பட்டார்=இகழப்பட்டார்கள்; அல்லால்=அவ்வாறில்லாமல்; எஞ்சினார்=உயிரோடிருந்தார்; இ உலகத்து=இந்த உலகத்தில்; இல்=ஒருவருமில்லை.

தூற்றுதல் என்றால் பழிசொல்லல், இழிவாகச் சொல்லல் எனப் பொருள்கள். இருக்கும் வரை இன்னார் என உயர்வாகச் சொன்னவர்கள் இறந்த பின்னர் பிணம் எனச் சொல்வதை இவ்வாறு கூறுகிறார் எனலாம்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.” (திருமந்திரம் – 189)

என இதனைத் திருமூலரும் குறிப்பிடுகிறார்.

தூற்றுதல் என்றால் அறிவித்தல் என்றும் பொருள். ஒவ்வொருவருமே இறந்தார் என்று அறிவிக்கப்பட உள்ளவரே எனக் கூறுவதாகவும் கொள்ளலாம்.

செல்வச் செழிப்பையும் அதிகார உயர்நிலையையும் காட்டும் வண்ணம் உயரத்தில் வலம் வந்த மன்னரும் உயிரிழந்து மண்ணோடு மண்ணாகினர். எனவே, எவ்வளவு உயர்ந்த பதவியில் அல்லது உயர்ந்த நிலையில் இரு்நதாலும் உடல் அழிவதே இயற்கை. எனவே, நிலையாமையை உணர்ந்து நிலைத்த அறம் புரிக! 

மாடி மனை கோடி பணம்

வாகனம் வீண் சம்பம்,

வாழ்வினிலே ஒருவனுக்குத்

தருவதல்ல இன்பம்!

என்பார் ‘மனமுள்ள மறுதாரம்’ திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி. யாக்கை நிலையாமையை உணர்ந்து செய்யும் யாவும் நல்லறமாக ஆற்றுவதே நம் கடமை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)