குனிவு02 :kunivu02

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

  மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே!

  அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும் திருத்திக்கொள்ளப்படாமல் பண்பாட்டுத் தலைக்குனிவை நமக்கு ஏற்படுத்தி வருகிறது. பண்பாட்டுத்தலைக்குனிவு என்று சொன்துமே தலைவி செயலலிதா, தனக்கு அடுத்த நிலையிலிருந்து அடிமட்டம்  வரை உள்ள யாவராயினும் தன்முன்நெடுங்சாண்கிடயாக வீழ்தலையும் எந்த அளவிற்குக் குனிய முடியுமோ அந்த அளவிற்குக் குனிந்து வணங்கச்செய்தலையும் ஊர்தி உருளைகளையும் வானூர்தியின் அடிப்பாகங்களையும் பார்த்துக் கூழைக்கும்பிடு போடுதலையும்  ஊக்கப்படுத்தும்  இழிசெயல்தான் அது என்பது நன்றாகவே புரியும்.

  பிறந்தநாள், திருமணநாள் போன்ற சிறப்பு நாள்களில் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களாகக் கருதப்படுவோரின் காலில் விழுந்து வணங்குதலும் மணிவிழா முதலான சீர்மிகு நாள்களில் பெரியோர்கள், ஆன்றோர்கள் காலில் இளையோர்கள் விழுந்து வணங்குவதும் பண்பாடான செயல்தான். ஆனால்,    காலில் வீழ்வதையும் உடம்பை வளைத்தலையும்  தவிர வேறு வேலை இல்லை என்பதுபோல் அதிமுகவினரை நடத்தும் ஒழுகலாறு  நிலையான இழிவினை நமக்குத் தருகின்றது. அவரிடம் உள்ள இப்பழக்கம் பிற தலைவர்களிடமும் தொற்றிக்கொண்டு பிறர் முன்னிலையில் தமிழ் மக்கள் குனியும் நிலையை ஏற்படுத்துகிறது. கட்சிக்காரர்களைக் குனியச்செய்வதன் மூலம் தமிழக மக்களைப் பிறர் முன் நாணிக் குனியச்செய்யலாமா?

  “அவர்கள் விரும்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்” என்று சொல்ல இயலாது. குனிபவர்கள் ஆதாயம் தேடத்தான் போலியாக வணங்குகிறார்கள் என்றாலும் அவற்றைத் தடைசெய்வதுதான் தலைவிக்கு அழகு. இந்நேரம் 1990 இல் நிகழ்ந்த ஒரு நேர்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். அந்த ஆண்டு அரசில் பணியாற்றிக் கொண்டிருந்த அறுவர் தமிழ்வளர்ச்சி உதவிய இயக்குநராகவும் நேரிடையாக அறுவர் தமிழ் ஆய்வு அலுவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியில் சேர்ந்திருந்தோம். பன்னிருவரும் முதல்வரைச் சந்தித்துப்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெறுவதற்காக அன்றைய தமிழ்வளர்ச்சி செயலர் முனைவர் ஔவை  நடராசனுடன் சென்றிருந்தோம். அவர் முதல்வருக்கு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.  அப்பொழுது் முதல்வருக்கு – கலைஞர் கருணாநிதிக்கு – முதலில் என்னை பொன்னாடை அணிவிக்கச் சொன்னார்கள். நான் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த திமுக இளைஞரணியில் இருந்த ‘இரா.’ என்பவரை முதலில்  பொன்னாடை அணிவிக்கச்சொன்னேன். அவர் மீண்டும் என்னை அணிவிக்குமாறு கூறினும் அவரே முதலில் அணிவிக்க வேண்டும் என்றேன். அவர்  முதல்வருக்குப் பொன்னாடை அணிவித்து அவர்  காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அடுத்து நான் பொன்னாடை மட்டும் அணிவித்தேன். காலில் விழவில்லை. எனக்கு அடுத்து ‘வ.’ என்பவர் காலில் விழக் குனிந்தார். உடனே முதல்வர் தடுத்து,  “அதிகாரிகள் எல்லாம் ஏன் காலில் விழுகின்றனர்.  தேவையில்லை. துண்டினை அணிவித்தால்போதும்” என்றார். வெளியே வந்ததும்  பிறர் என்னிடம், “சிலர் காலில் விழுந்து, சிலர் விழவில்லை என்றால் நன்றாக இராது என்பதால் காலில் விழ  வேண்டா என்றார். ஏன், அவ்வாறு செய்தீர்கள்” என்றார்கள். நான் “பெற்றோர் காலில் விழுந்து வணங்கியதில்லை. எனவே,  யார் காலிலும் விழக்கூடாதென்றுள்ளேன். ஆனால்,  முதல்வர் தோளில்  துண்டு அணியக் கூடாது இடுப்பில்தான் கட்ட  வேண்டும் என்றதால்  தன்மானத்துடன் இசைக்கலையைத் துறந்தவர். எனவே, அதனை உணர்ந்ததால்தான் யாரும்  காலில் விழ வேண்டா என்றார்” என்றேன். ஆகத், தலைவராக இருந்தாலும் தமக்கு விருப்பமின்மையை வெளிப்படுத்தினால், யாரும் அதனைச் செய்யப்போதில்லை.

  இன்றைய முதல்வரின் காலில் மண்டியிடுவோரிடம் கண்ணசைவில் தன் விருப்பமின்மையைக் காட்டினால் தலைக்குனிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்களே!  இதன் நோக்கம் பலர் முன்னிலையில் அடிமையாய்க் காட்டிக்கொண்டு தனித்து, அரசவாழ்விற்கேற்ற செல்வத்தைத் திரட்டுவதே என்பதை விழுபவர்களும் விழுவதால் மகிழ்பவரும் அறிவார்கள். அப்படியிருந்தும் போலி வணக்கத்தை  நாளும் பொழுதும் அரங்கேற்றித் தமிழ் நாட்டவர்க்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதேன்!

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு(திருவள்ளுவர்,திருக்குறள் 901).

  யாரும் தன்னை எளிதாகக் காணும் நிலையில் இருப்பதுதான் பண்பு என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். யாரும் தன்னை அண்ட விடாமல் ஒதுங்கி நிற்பதும் பிறரை ஒண்ட விடாமல் ஒதுக்கி வாழ்வதும் தன்னை மேம்பட்டவராகக் காட்டுவதன் மூலம் உயா்வாய்க் காட்டிச் செயல்படுவதும் பண்பாகாது.  தவறு என்று அறியவந்தால் அதைத் திருத்திக் கொள்ளும் தகைமை உடையவராக விளங்கும் வகையில் அதிமுக தலைவி செயலலிதா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

   அவ்வாறில்லாவிடில், இது போல் நடந்துகொள்ளாவிட்டால் நமக்கு மதிப்பில்லையே  என எண்ணிப் பிற தலைவர்களும் காலடி பற்றி வாழ்வதை ஊக்கப்படுத்தும்போக்கு பரவும். சான்றாகத் தாலின் பிறர் காலில்விழ,  வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது அல்லது தொலைபேசியை இயக்கிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் வருகின்றன. முன்பு பதவி யேற்பு போன்ற நாள்களில் காலில் விழுந்தவர்கள் இப்பொழுது அதிமுகவிற்குப் போட்டியாக எப்பொழுதும்  காலில் விழத்தொடங்கி விட்டனர். எனினும், கூனிக் குறுகிக் கிடப்பதில் அதிமுகவை யாரும்விஞ்ச முடியாது. என்றாலும் அதிமுகவின் ஒழுகலாறு அனைத்துக் கட்சிகளிடமும் பரவும் முன்னர் இதை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, இத்தகைய பண்பாட்டுச்சீரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இவர்கள் ஆட்சிக்குமுற்றுப்புள்ளி வைப்பதுதான்!

  வைகாசி 06 /  மே 19 அன்று அதிமுக தோல்வியால் தலைகுனியட்டும்!

பண்பாட்டுச் சீரழிப்பைத் தடுத்ததால் மக்கள் தலை நிமிரட்டும்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்