(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)

46taxi01

14. போக்குவரத்துத் தீரச்யெல்கள்

  சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர்.

  புவிவெப்பமயமாகிக் கொண்டுள்ள இக்காலகட்டத்தில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வளர்க்க வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமை. ஆனால், மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்கும் பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இது எரிச்சலூட்டக்கூடிய நடவடிக்கை அல்லவா? அதே நேரத்தில், எரிபொருள் ஏற்றுமதி என்ற பெயரில் வல்லரசுகளும் இதன் பின்னணில் அந்நாட்டிற்குள் ஊடுருவி விடும். பொதுவுடைமை எனப் பெயர் வைத்துக் கொண்டாலும், இதற்குச் சீனா எவ்வகையிலும் விதிவிலக்கானதல்ல.

 46common_cycle_stand01

  கடுங்குளிர் நிலவும் காரணத்தால் மக்கள், இயல்பாகவே இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில்லை. ஆங்காங்கு காணப்படும் இருசக்கர வாகனங்கள் கூட அந்தந்த பகுதியில் சில பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்பவையாகவே இருக்கின்றன. ஆனால், மகிழுந்துகள் கணக்கற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

 46common_cycle_stand02

  சாலைகளில், மகிழுந்து செல்வதற்கான சாலையின் பரப்பே அதிகம். மிகக்குறைந்த அளவினரே, இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். பேருந்து – வாடகையுந்து என பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களே அதிகமாக உள்ளனர். இதற்கு மிக முதன்மைக் காரணம், இவற்றில் காணப்படும் மிகக்குறைந்த கட்டணமாகும். நகரப் பேருந்துகளில், எங்கு ஏறி எங்கு இறங்க வேண்டுமென்றாலும் வெறும் 1 யுவான் (நம் ஊரில் 10 உரூபாய்) செலுத்தினால் போதும்.

 46ladybusconductor

  பெரிய பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்கள் இல்லை. முன்பக்கம் ஏறும்போது, ஒவ்வொருவரும் 1 யுவான் பணத்தை, ஓட்டுநருக்கு வலப்பக்கத்தில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும். இறங்கும்போது, பேருந்தின் நடுப்பகுதி வழியே, கதவு திறக்கும்போது இறங்கிவிடலாம். ஆனால், சிறிய அளவில் காணப்படும் சிற்றுந்துகளில் நடத்துநர் பயணச்சீட்டு அளிக்கிறார்.

 46ladybusconductor02

  ஒவ்வொரு சாலையிலும் இரு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று போவதற்கு இன்னொன்று வருவதற்கு. ஒவ்வொரு வழித்தடத்திலும், இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்றைப் பொதுப் போக்குவரத்துக்கானப் பேருந்துகளும், மதிவண்டி உள்ளிட்ட இருசக்கர வாகனத்திற்காகவும், இன்னொரு அகலமான பாதை மகிழுந்துகள், கனமிகு வாகனங்கள் செல்வதற்காகவும் என ஒதுக்கியுள்ளனர். தமிழகத்திலும், இது போன்ற ஏற்பாடுகள் சென்னை மாநகரில் செய்யப்பட்டன. ஆனால், அதை யாரும் மதிப்பதில்லை. போக்குவரத்துக் காவல்துறையும் அதை கண்டு கொள்வதில்லை.

   ஆனால், இங்கு மிகப்பெரும் அதிசயமாக எங்குமே போக்குவரத்துக் காவலர்களைக் காண முடியவில்லை. அதே நேரத்தில், சாலையை இரண்டாகப் பிரிக்கும் வகையில் வெறும் கோடு மட்டுமே வரைந்துள்ள போதும் அதை ஒருவர் கூட மீறுவதில்லை. நமது ஊரில், நடுவிலே சிறிய அளவில் தடுப்பு வைத்திருந்தால் கூட எதிர்த்திசையில் வேகமாகப் பயணிக்கும் வாகனங்களை நாம் காண முடியும். ஆனால், இங்கோ நிலை தலைகீழாக உள்ளது.

   இதற்குக் காரணம், சீனக் காவல்துறையின் மீதுள்ள பயமா அல்லது போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்ற மக்களின் பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடா எனத் தெரியவில்லை. ஆனால், சாலை விதிமீறல்கள் இல்லாமல் மக்கள் சென்றுகொண்டுள்ளது வியப்பைத் தருகிறது.

  சீன அழைப்பூர்திகளைப் போலவே, இரு சக்கர வாகனங்களில் வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று விடுகின்ற சேவையும் இங்கு இயங்குகிறது. இந்த இரு சக்கர வாகனங்களைப் பெரும்பாலும், அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என வேகமாகச் செல்ல விரும்புபவர்கள் ஓடிச்சென்று ஏறிப் பயன்படுத்துகின்றனர்.

 கணிசமான அளவில், சீன இசுலாமியர்கள் வாடகை ஓட்டுநர்களாகவும், சாலையோர வணிகர்களாகவும் இருந்ததைக் காண முடிந்தது. எனது தோற்றத்தைப் பார்த்த ஒரு சீன இசுலாமியர்கள், என்னை சோமாலிய இசுலாமியரா எனக் கேட்டனர்.

  ஓர் அயிரைக்கோல்(கிலோ மீட்டர்) சாலையை, ஒரு தண்ணீர் வண்டியை வைத்துக் கொண்டு இரண்டு பேர் தூய்மை செய்கின்றனர். ஒருவர் வாகனத்தை ஓட்டுகின்றார். இன்னொருவர், பின்புறம் அமர்ந்து தண்ணீரைச் சாலையில் பீய்ச்சி அடிக்கின்றார். பின்னர், இன்னொரு வண்டி வருகின்றது. அந்தவண்டியின் அடியில், சக்கர வடிவில் துடைப்பம் வைக்கப்பட்டுள்ளது. அது, சாலையில் இருக்கும் குப்பைகளைப் பெருக்கி உள்ளுக்குள் இழுத்துக் கொண்டே வருகின்றது. ஆக, 1 அயிரைக் கோல் சாலையை 3 பேர் 1 மணி நேரத்தில் தூய்மை செய்துவிடுகின்றனர்.

   சீனப் பெண்கள் பார்ப்பதற்கு பொம்மை போல அழகாக இருக்கிறார்கள். பேருந்துகளில், ஒரு ஆண் அமர்ந்துள்ள இருக்கைக்குப் பக்கத்தில் பேருந்துகளில் ஒரு பெண் இயல்பாக அமர்ந்து விட்டுச் செல்கிறார். நமது ஊரில் இவ்வாறு பார்க்க முடியாதல்லவா? நமது பெண்களிடையே காணப்படும் ஆண்கள் குறித்த அச்சப்பார்வை, இங்கு கணிசமாக இல்லை என்றே தோன்றுகிறது. பேருந்துகளில் மட்டுமின்றி, வாடகையுந்துகள், கடைகள் என ஆண்களுடன் பழகுவதில் தயக்கங்கள் காட்டாமல், சீனப்பெண்கள் இயல்பாக இருக்கின்றனர். அவர்களுடைய சமூகம் அவ்வாறானதாகப் பண்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

46taxi_stand02

   மென்மையானவர்கள் எனக் கருதப்படும் பெண்கள், உண்மையில் கடினமான உழைப்பாளிகள். சியான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல், பகிர்வுமிதியுந்து (share auto) ஓட்டுவது வரை பெண்கள் கணிசமாகப் பணிபுரிவதைக் காண முடிந்தது.

 நம்மூரின் பொதுப் போக்குவரத்தை நாம் பார்க்கின்ற விதமும், சீனர்கள் பார்க்கும் விதமும் வெவ்வேறானது. அரசின் சொத்தை யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்ற நிலை இங்கு! அரசு சொத்தை யாருமே சேதப்படுத்தக்கூடாது என்ற மனநிலை அங்கு! இந்த மனநிலை, அரசால் பயிற்றுவிக்கப்பட்டதல்ல! தானே உருவானது. அரசியல் தலைமையின் மீதான அச்சத்திலிருந்தும், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடிக்கு பயந்தும் வருவது அல்ல! ஆனால், இங்கு நிலைமையோ தலைகீழ்!

46taxi03aruna