பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)
ஆய்வகம்
ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது.
வகுப்பறை
பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன் இன்றி இருப்பின் உடனுக்குடன் மாற்றப்படவேண்டும். விளையாட்டு வகுப்பு தொடக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டுக் கருவிகள் சரியாக உள்ளதா? எனச் சரிபார்த்த பிறகே விளையாட இசைவளிக்கவேண்டும். எக்காரணத்தினை முன்னிட்டும் வில் விளையாட்டு, ஆசிரியர் துணையில்லாமல் விளையாடக்கூடாது.
உணவு இடைவேளையின்போது குழந்தைகள் நலமான முறையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார்களா என்பதை மேற்பார்வையிடவேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தி இருக்கவேண்டும். வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் குழந்தைகள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதனை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டுச் செல்லவேண்டும்.
சிறுநீர் இடைவேளை, உணவு இடைவேளை நேரங்களில் மேல்தளங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தவேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 1500க்கு மேல் இருப்பின் முறையான முழுநேர மருத்து சேவை வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.
வாகனம்
வாகனங்களை இயக்குவது பள்ளி நிருவாகங்களின் சொந்தப் பொறுப்பாகும். மாணவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக 31.8.2012 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் உள்துறையால் வெளியிடப்பட்டுள்ள (வரைவு விதிகள்) தமிழ்நாடு இயந்திர(மோட்டார்) வாகனங்கள் -பள்ளி வாகனங்கள் முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
(தொடரும்)
Leave a Reply