‘பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17: இலக்குவனார் திருவள்ளுவன்
‘பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 தொடர்ச்சி)
திட்டங்கள் மக்களுக்காகத்தான். அப்படி என்றால் திட்டங்களின் பெயர்களும் தமிழில்தானே இருக்க வேண்டும்! மக்களின் குறைகளைக் களையவும் முன்னேற்றத்திற்காகவும் பல நல்ல திட்டங்களைச் செயற்படுத்தி வரும் தமிழ்நாட்டின் அரசு அவ்வாறு கருதாதது விந்தையாக உள்ளது. உலகத் சதுரங்க விழா(44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி: நம்ம chennai, சென்னை செசு) மாணாக்கியர், இளம்பெண்களுக்கான காவல்துறை உதவித் திட்டம்(போலீசு அக்கா’) என எதில் பார்த்தாலும் பெயர், முழக்கம், முத்திரை, விளம்பரம் என ஆங்கிலத்திணிப்பு நடந்து வருவதைப் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் நேற்றுகூடப் பிறமொழித் திணிப்பிற்கு எதிராகப் பேசிய முதல்வர் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார் எனப் புரியவில்லை. அயற்சொற்களையும் தமிழ்ச்சொற்களாகக் கருதும் அறியாமை மிக்கவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் ஆங்கிலச் சொல்லையே குறிக்கும் பொழுது எப்படி அமைதி காக்கிறார்கள்? அல்லது ஊக்கப்படுத்துகிறார்கள்?
தாங்கள் படித்த பள்ளி வளர்ச்சிக்காக அரும்பணிகள் ஆற்றியும் தத்தெடுத்தும் சிறப்பான தொண்டுகளை நம் நாட்டிலும் பிற நாடுகளில் பணியாற்றுநரும் செல்வர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வப்பொழுது இவைபோன்ற செய்திகளைப் படிக்கும் பொழுது அவர்களைப் பாராட்டுவதுடன் ஒவ்வொரு பள்ளியையும் இவ்வாறு தத்தெடுத்து மேம்படுத்தலாமே! அரசு இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளலாமே எனத் தோன்றும்.
இவ்வாறான பலரின் கனவு நனவாகும் வகையில் ‘தமிழ்நாடு அரசாங்கம்’ நமது பள்ளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விநிலையங்களையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வரும் அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் பாராட்டுகிறோம். கட்டைமப்புக் குறைபாடுகளுடன் கல்வி கற்போர் இனிச் சிறப்பான கல்வி பெற வாய்ப்புகள் அமையும் என்பது மகிழ்ச்சிதானே!
தரமான கல்வியும் உணவும் பெறுவதன் மூலம் உடலும் மனமும் வலிவும் பெற வழி உண்டாகிறது. கல்வியுடன் விளையாட்டிலும் பிற கலைகளிலும் மாணாக்கர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வாய்ப்பு கிட்டுகின்றது. முழுமையான அளவில் பள்ளி முன்னேற்றத்தில் தமிழ் வழிக்கல்வியுடன் இத்திட்டச் செயற்பாடு இருப்பின் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் உலகளாவிய போட்டிகளில் வாகை சூடும் வீரர்களையும் நாம் காண இயலும்.
இச்சிறப்பான திட்டத்தின் பெயர் என்ன? தமிழ்நாட்டரசின் திட்டமாயிற்றே தமிழில் பெயர் சூட்டக்கூடாது என்பதுதானே அதன் இலக்கணம். அப்படியென்றால் தமிழில் பெயர் இருக்காது அல்லவா? ஆம் நம் அரசின் இலக்கணத்திற்கேற்ப ‘நம்ம school’ / Namma School Foundation எனப் பெயர் சூட்டியுள்ளார்கள். இவ்வாறு பெயர் சூட்டி மூன்று தவறுகளைச் செய்துள்ளது அரசு. பேசுவதுபோல் எழுதக்கூடாது. எழுதுவதுபோல் பேச வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். அவ்வாறு இல்லாமல் நமது என்று சொல்லாமல் நம்ம எனக் குறித்துள்ளார்கள். கேட்டால் அப்பொழுதுதான் உரிமையும் நெருக்கமும் இருக்கும் என்பார்கள். சரி, இதனை மன்னிக்கலாம் என்றால் அடுத்து school என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கில எழுத்திலேயே குறித்துள்ளார்கள். school என்றால் பள்ளி எனத் தெரியாதோ இவர்களுக்கு. அப்படிஎன்றால் இவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் தமிழ் பயில.
மூன்றாவதாகச் சில இடங்களில் Foundation என ஆங்கிலத்திலும் சில இடங்களில் ஒலி பெயர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் திட்டத்திற்கு ஏன் இந்த மொழிக்கொலை. ‘நமது பள்ளி நிறுவனம்’ எனலாம். அல்லது ‘நம் பள்ளிப் பீடம்’ எனலாம். ஆங்கில வழியில்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. ‘நம் பள்ளிப் பெட்டகம்’ எனலாம். இவ்வாறு சொல்லும் பொழுது நமக்குரியது என்ற உரிமை தொனிக்கத்தானே செய்கிறது. நமது பள்ளிக்காக நிறுவப்பட்டது என்னும் பொருளில் நிறுனம் என்றோ, பீடு(சிறப்பு/வளம்/பெருமை) உடைய அமைப்பு என்னும் பொருளில் பீடம் என்றோ, பள்ளி வளர்ச்சிக்கான பணப்பேழை என்னும் பொருளில் பெட்டகம் என்றோ சொல்கையில் கிடைக்கும் பொருள் பொதிந்த சிறப்பு ஆங்கில ஒலிபெயர்ப்பில் இல்லையே!
13ஆம் நூற்றாண்டில் தமிழுடன் சமற்கிருதச் சொற்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட நடை மணிப்பிரவாளம் ஆகும். இதனால், தமிழ் கேடுற்றது; பாழ்பட்டது; சிதைந்து போனது; தான் வழங்கும் பரப்பில் குறைந்து போனது. ஒரு வழியாகத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித்தமிழ்நடை எழுச்சியால் மக்களிடையே தனித்தமிழ் உணர்வு அரும்பிற்று. இவர் வழியில் நடைபோட்ட அறிஞர்கள் பிறரின் முயற்சிகளால் மணிப்பிரவாளம் மறைந்தது. ஆனால், அந்தோ பரிதாபம்! தமிழைக் கெடுக்க வென்றே பிறந்த சிலரால் புதிய வகை மணிப்பிரவாளம் தோன்றியது. தமிங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அதனால் ஆங்கிலச் சொற்களும் தொடர்களும் தமிழில் கலந்து எழுதத் தொடங்கினர். இந்த நிலை இன்று மிகுதியாகித் தமிழை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.
இந்த அழிவிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. ஆனால், அரசே இத்தகைய அழிவை முன்னெடுத்துச் செல்கிறது. காப்பானே கள்வன் ஆனால் என் செய்வது? காக்கவேண்டியவனே கொலைகாரனானால் யாரிடம் முறையிடுவது?
அதிகாரிகளை ஆற்றுப்படுத்த வேண்டிய அரசும் அரசிற்கு வழிகாட்ட வேண்டிய அதிகாரிகளும் தமிழ்க் கொலைச்செயலில் ஈடுபட்டால் தமிழ்விரைவில் அழியாதா? இதனால், தமிழினம் மறைந்துபோகாதா? தமிழ்நாடு என்பது இல்லாமல் போகாதா? இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் ஆட்சி செய்த தமிழ் இத்தகைய மொழிக்கொலைகளால்தான் பெரும்பரப்பில் அழிந்து சுருங்கியது என்பதை அறிந்த பின்னும் நாம் மொழிக்க்கொலையில் தொடர்ந்து ஈடுபடலாமா? தமிழறிஞர்களே! நீங்கள் ஏன் உறங்கிக் கொண்டுள்ளீர்கள்?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)
என உணர்ந்து செயற்படாவிட்டால், நீடிக்க வேண்டிய நல்லரசு நிலை கெட்டுப் போகாதா?
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களும் வேடதாரிகளாக இருக்கக் கூடாது. இவர்களின் சொல் தமிழாகவும் செயல் ஆங்கிலமாகவும் இருந்தால் இவர்களைப்பற்றி மக்கள் என்ன எண்ணுவார்கள்? நம்பிக்கை வைப்பா்களா? என்றெல்லாம் எண்ண மாட்டார்களா?
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
எனப் பாரதியார் பாடலைக் கூறி எள்ளி நகையாடமாட்டார்களா?
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!
என வள்ளலார் இராமலிங்க அடிகளார் வழியில் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் உள்ளவர்களை உதறித்தள்ள முன் வரமாட்டார்களா?
எனவே, பள்ளிக்கல்வித்துறையும் அரசும் விரைந்து செயற்பட்டு, இத்திட்டத்தின் பெயரை நல்ல தமிழில் சூட்ட அன்புடன் வேண்டுகின்றோம். ஒன்றிய அரசு இந்தியில் திட்டங்களுக்குப் பெயர்வைப்பதாகக் குற்றம் சாட்டும் நாம், நமது திட்டங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து பிற திட்டங்களின் பெயர்களையும் தமிழில் மாற்றவும் இனித் தமிழில் சூட்டவும் வேண்டுகிறோம்!
ஆங்கிலக் காவல் அரசாக இல்லாமல் தமிழ்க்காவல் அரசாகத் திகழ வேண்டுகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றாக நறுக்கு நறுக்கெனக் கேட்டுள்ளீர்கள் ஐயா!
உலகச் சதுரங்கப் போட்டிக்கு ‘நம்ம செசு’ என்று இந்த அரசு பெயர் சூட்டியபொழுதே நீங்கள் அதைக் கண்டித்தீர்கள். இப்பொழுது ‘நம்ம இசுக்கூல்’ என அடுத்த திட்டத்திற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். இது கண்டிப்பாகப் புதிய மணிப்பிரவாளமே! இதைப் பற்றி நீங்கள் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினால் நலமாக இருக்கும்.