பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 தொடர்ச்சி)
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்
09. பணத்தினைப் பெருக்கு!
தொழில் நோக்கமும், தொழிலுக்கு அடிப்படைத் தேவையும் என்ன? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அன்றோ?
“பொருளில்லார்க்கிலை யிவ்வுலகு என்றநம்
புலவர்தம்மொழி, பொய்ம்மொழி யன்றுகாண்
பொருளி லார்க்கின மில்லை, துணையில்லை
பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்”
(பக்கம் 255 / சுயசரிதை)
எனும் பொய்யாமொழிப் புலவரைப் போன்று ‘செய்க பொருள்’ என்கிறார். பொருள் எதற்கு?
“இல்லாமையை இல்லாமல் ஆக்குக
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” (பக்கம் 152 / பாரதியார் கவிதைகள் – திருவே பகை)
“தனியொருவனுக்குணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்” (பக்கம் 41 / பாரதியார் கவிதைகள் – பாரத சமுதாயம்)
எனப் புரட்சிக் குரல் கொடுத்து
“வறுமை என்பதை மண்மிசைமாய்ப்பேன் (பக்கம் 137 / பாரதியார் கவிதைகள் – ஏ காளீ)
என வறுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர் அல்லவா பாரதியார்!
“ஓவிலாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!” (பக்கம் 25 /பாரதியார் கவிதைகள் – சயபாரத)
எனச் செல்வத்தை வேண்டும் பாரதியார்,
“பணத்தினைப் பெருக்கு” (65) எனக் கட்டளையிடுகிறார்
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply