பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23
- 22. பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே!
- இந்நூலில் இடம் பெற்றுள்ள மனுநூல் மேற்கோள்களைப் பார்த்தாலே இவ்வாறு கூறுவது எவ்வளவு பெரிய அண்டப்புளுகு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
- பாண்டு குந்தியிடம் மனிதர்களில் சிறந்தவன் பிராமணன் என்று கூறுவதை நோக்குங்கள்.
சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும்.
- 23. பிராமணனை ஏன் கொல்லக்கூடாது என்கிறார்கள்?
- இது குறித்துக் ‘கோரா’வில் ஒருவர் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.
“ஓர் ஊரில் எல்லாருக்கும் 4 வருணத்தினரையும் சேர்த்துக் கல்வி சொல்லித் தருவது தான் பிராமணன் வேலை. பிராமணன் இல்லா விட்டால் அந்த ஊரில் அனைவரும் தற்குறி தான். அதனால் தான் பிராமணனைக் கொன்றால் ஓர் ஊரே முட்டாளாய் மாறுமே என்று தான் அக்காலத்தில் பிராமணனைக் கொன்றால் பாவம் என்றார்கள். மற்ற வருணத்தினர் ஏன் சொல்லி தரக் கூடாதா ? என்றால் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களின் வேலையில் நிறைய வருமானம் கிடைக்கும்”
எத்தகைய பொய்யுரை? பிற வருணத்தார் கல்வி சொல்லித் தந்தால் குறைவாய் வருமானம் கிடைக்கும் என்று வரவில்லையாம். பிராமணர்கள் ஈக-தியாக மனத்துடன் கற்பிக்கும் தொழிலுக்கு முன் வந்துள்ளார்களாம். அப்படிப் பார்த்தால், பிராமணர் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்றுத் தர மாட்டார்களே! பிராமணனை உயர்த்திச் சொல்லி விட்டு அவனைக் கொன்றால் பாவம் என அச்சுறுத்தி விட்டு இது குறித்துப் பிறர் கேள்வி கேட்டதும் மழுப்பி மறைக்கப் பார்க்கிறார்கள். கற்பிப்பவர் இல்லாமல் போவார்கள் என்றால் ஆசிரியர்களைக் கொல்லக் கூடாது என்றல்லா சொல்லி யிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லாமல் வருண அடிப்படையில்தானே சொல்லியுள்ளனர்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக். 44-45
Leave a Reply