தலைப்பு-வித்யாசாகர் செவ்வி, இலக்கியவேல் சந்தர்; thalaippu_piramozhi_vidyasakar_sevvi_ilakkiyavel02

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை

  – கவிமாமணி வித்தியாசாகர்

செவ்வி  கண்டவர் :

இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

1/3

  இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன்  சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட  செவ்வி.

?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள்,  தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான  பின்புலம் என்ன?

  என் தாய்மண் மீதான அக்கறை. மொழி எனது களம்;அது  போராடுவதற்கு இடம் தருகிறது. மொழி எனது ஆயுதம்; எனது கோபத்தை எழுத்தாக்கப் பயன்படுகிறது. மொழி எனது யாவும்;  அது என்னைத் தான் வாழ்ந்த காலத்திலிருந்து வந்தவனாக்குகிறது. மொழி எனது தமிழ்; அது என்னைத் தன்னோடு ஈர்த்துக் கொள்கிறது. ஆங்காங்கே இரண்டாம்நிலை ஆகிப் போன என் மக்களை  எண்ணி எண்ணி நோவதன் பொருட்டு, உலகின் எம்மூலையில்  இருந்தாலும் தமிழர்க்கு மொழி குறித்தும் இனம் குறித்தும்  விடுதலை பற்றியுமொரு ஈர்ப்பு இருந்து கொண்டேதான்  இருக்கிறதென்பதை எனது வாழ்வின் பட்டறிவாக உணர்கிறேன்.

?. பொதுவாக உங்கள் படைப்புகளில் குமுகாய(சமூக)ச் சிந்தனைகள் வெகுவாக காணப்படுகின்றன. இதற்கான காரணம் நீங்கள் வளர்ந்த சூழலில் கண்ட காட்சிகளின் தாக்கமா அல்லது,  இலட்சிய உலகைக் காணவிழையும் இலக்கியவாதியின்  நோக்கா?

  இலட்சியம் என்று பெரிதாய் ஒன்றுமில்லை. ஆயினும் என்  மக்கள் விடுதலைக்கான வலி; எனது மண்ணின்  சமத்துவத்திற்கான சமர்; என் வழித் தடத்தில் உள்ள தூசையாவது கலைந்து போகச் செய்யும் முயற்சியின் ஊடே  சமூகம் குறித்து ச் சிந்திக்க வேண்டி யுள்ளது.

  யாரோ செய்தார், யாரோ செய்தார் என்பதைவிட தவறுகளைத்,  தான் செய்ததாய் ஏற்றுத் திருத்திக் கொள்ளவும், நல்லதை  நானே செய்ய முன்வருவேன் எனும் முன்னெடுப்பிலும் மட்டுமே  நான் முனைப்பாக, ஆதாரமாக நின்று, உடன் வருவோரையும்  நன்னிலம் நோக்கித் திருப்ப எண்ணுகிறேன்.

  இப்படி வாழ் என்று சொல்லிச் செல்வதைவிட, வாழ்வின்  நோக்கில் உலகை மாற்ற விழைகிறேன். என்னைப்  பொறுத்தவரை, குமுகாயப் பொதுநல அக்கறை என்பது படைப்பாளிக்கு மட்டுமே வேண்டிய ஒன்றாக இல்லாமல்  ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளதொரு குணமாக மாறுதல்  வேண்டும். தெருவில் போகும் ஒரு பிச்சைக்காரனுக்குத் தானும்  பொறுப்பென்று ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். அன்று  மனிதம் தானே செழித்தோங்கும். 

?.  வாழ்க்கையின் அவலங்களை உங்களின் பல படைப்புகளில் மிக எதார்த்தமாகச் சித்தரிக்கும் நீங்கள், அத்தகைய  ஒவ்வொரு நிகழ்வுக்கும் தீர்வையும் வைக்கின்றீர்களா? ஆம் எனில், அத்தீர்வு சாத்தியமா?

  எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்போர் உணர இயலும்.  பொதுவாக நான் எந்தத் தீர்வையும் சொல்ல முயல்வதில்லை.  எனக்குத் தெரிந்த ‘இன்றைய சரி’. ‘நாளை தவறா’க மாறலாம்.  எனக்கு இரண்டு தேக்கரண்டி சருக்கரை ஒரு குவளை தேநீருக்குப்  போதுமெனில் மற்றவருக்கு மூன்று தேக்கரண்டி தேவைப்படுகிறது. இன்னும் சிலருக்கு ஒன்றுகூடப் போதும்,  சிலருக்குச் சருக்கரையே இல்லாது இருந்தால் சரி என்கிறார்கள்.  எனில் இந்த சரி-தவறு அளவே அவரவர் சுவை உணர்வு,  அறிவுக்கு ஏற்றாற்போல் மாறும்பொழுது எது சரி எது தவறு  என்று தீர்மானிக்க எவரால் முடியும்?

  இயற்கையில் நேராக முளைத்த முடியைத்தான், சாய்வாக வளைத்து  அழுத்தி வாரிவிட்டு அதை நாம் நேர் என்கிறோம். தலை வாரியவன் ஒழுக்கமானவன், இல்லாதவன் ஒழுக்க மற்றவன்  எனில் யாரிங்கே குற்றவாளி? எல்லாம் காலத்தின் கைக்குள்ளே  அடங்கிப்போகும் வாழ்க்கையிது. இந்தக் காலம்தான் நமை  அவ்வப்பொழுது அதன் இயல்பு வடிவத்திற்கு ஏற்ப நமை  மாற்றியும்விடுகிறது.

 எனவே, இங்கே சிந்தனையைத் தூண்டவும், வாழ்வின்  பட்டறிவுகளை ஆதாரமாக வைக்கவும், சமக்காலத்தை  இதுவென்று பதிந்து செல்லவுமே இலக்கியத்தில் இடம்  வேண்டியுள்ளது. அதையே நானும் செய்கிறேன். எழுதுவது  நானாயினும் சரி, அது யாராயினும் சரி, சிந்திப்பது  வாசிப்பவராக இருத்தல் வேண்டும். எனவே நல்ல சிந்தனையைப் படிப்பவருக்கு தரும் எழுத்தாகவே எனது எழுத்தும்  இருக்கவேண்டும் என்பதே எனது எண்ணமும். ஆயினும்  சாதியில் மேல்கீழ், விதவையின் மறுமணம், இறைத்தத்துவம்,  எண்ண வலிமைப் பயிற்சி என்றெல்லாம் வருகையில் சிலநேரம் அதனதன் முதன்மை கருதி தீர்வினைச்  சொல்லவும் கட்டாயம் வந்து விடுகிறது. 

?. புதுக்கவிதையில் பல்வேறு நூல்களைப் படைத்துள்ள நீங்கள்,  உங்களுடைய முன்னோடியாக யாரைப் பின்பற்றுகிறீர்கள்? அவருடைய தாக்கம் உங்கள் படைப்புகளில் எவ்வாறு  பிரதிபலிக்கிறது?

  எனக்கு முன்னோடி எனில் அது நான் வாழும் வாழ்க்கையும்அன்றாடம் காணும் எனது சமகால மனிதர்களும்விலங்குகளும், பூவும் மரமும் மண்ணும் மழையும் காற்றும் வானமும் நட்சத்திரங்களும் எனலாம்.

   இளமைக்கால வயதில் விவேகானந்தர், சாண்டில்யன்,  பாலகுமாரன், சுசாதா, தேவிபாலா, இராசேசுகுமார்,  இரமணி சந்திரன், வைரமுத்து என இன்றும் நிலைத்திருக்கும் சில சாம்பவான்களின் சில படைப்புகள் வழியாகவும், ஆன்மிகக் கதைகள், ஆனந்தவிகடன், குங்குமம், இராணி, குமுதம் போன்ற வார இதழ்கள் வழியாகவும், பல திரைப் படங்களின் வழியாகவும் வாழ்வைப் படித்ததுண்டு. அவற்றோடு சேர்ந்த அன்றைய ஆதார நிகழ்வுகளையே எனது படைப்பு களுக்குத் தேவையான ஆக்கவிதைகளாகவும் மாற்றிக் கொள்கிறேன்.  

   எனவே எனக்கு முன்னோடி எனில் எனக்குமுன் வீசும் காற்றும்,  முளைவிடும் ஒரு வித்தும், கதறியழும் குழந்தையின் பசியும்,  மழை கசியும் கூரைவீடும், யாரோ ஒரு தூரத்து நண்பன் எழுதும்  கவிதையும் கூட எனக்கு முன்னோடிதான்.

(தொடரும்)

இலக்கியவேல் மாத இதழ் – புரட்டாசி-ஐப்பசி 2047 / செட்டம்பர் 2016: வித்யாசாகர் செவ்வி