தலைப்பு-புத்தன்பூமி, நூலாய்வு, சொர்ணபாரதி, நந்தவனம் சந்திரசேகர் ; thalaippu_buththanbhuumiyil_nandavanat

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2

  நெருப்புக் கோளமான கதிரவனிலிருந்து உடைந்த துண்டின் பயணம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியாக உருவெடுத்தது. பூமிப்பந்தின் பல நூறாயிரம்(இலட்சம்) ஆண்டுகளின் பயணம் உயிர்களை உருவாக்கியது. உயிர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணம் மனிதனை உருவாக்கியது. மனிதனின் வாழ்க்கையும் ஒரு பயணம்தான்!

  பயணம் பட்டறிவுப் புதையலைக் கண்டெடுக்கும் அகழாய்வு; அறிவைச் சுரக்கும் பள்ளதாக்கு. பயணம் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் பல கண்டங்களைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் நாடுகளைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் புதிய நட்புகளை உருவாக்கின. என் வாழ்விலும் பயணம் ஒரு முதன்மைப் பங்கு பெறுகிறது.

  ஏனெனில், ஒரு பயணத்தில் பிறந்தவன் நான். சீரியத்திலிருந்து என் பெற்றோர் பீலிக்கான் முனிசுவரன் ஆலயத்திற்குச் சென்றிருந்தபொழுது அறுபதின் தொடக்கத்தில் கோவில் மடைப்பள்ளியிலேயே பிறந்து கோவில் மேலாண்மையால்(நிருவாகத்தால்) முனியாண்டி என்று பெயர் சூட்டப்பட்டவன்.

  இந்தப் பயணமும், நான் பிறந்த இடத்தின் தொடர்பும், ‘நந்தவனம்’ சந்திரசேகர் என் மீது கொண்டுள்ள நட்பும் இந்த முன்னுரையை எழுத என்னைப் பணித்திருக்கலாம்.

  முதல் பயண நூலாக ஏ.கே.செட்டியாரின் ‘எனது பயண அனுபவங்கள் நூல் அவரது உலக நாடுகளின் பயணத் துய்ப்புகளை(அனுபவங்களை) வெளிப்படுத்தியது. மேலும் மணியன், குரும்பூர் குப்புசாமி, நெ.து.சுந்தரவடிவேலு, செயமோகன், பாண்டி, மு.வேலு ஆகியோரின் பயண நூல்கள் படிப்பதற்கு மிகவும் இனிமையும், மகிழ்ச்சியும் அளிப்பவை.

  இசைத் திறனாய்வாளர்(விமர்சகர்) சுப்புடு இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பருமாவில் இருந்து கால் நடையாக வந்தபொழுது பட்ட, சந்தித்த துயரங்களை மனம் கசிய எழுதியிருப்பார்.  பருமாவில் தந்தை பெரியாரின் பயணத் துய்ப்புகளை நாரா.நாச்சியப்பன் எழுதியிருக்கிறார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி., தனது வரலாற்று நூலான ‘எனது போராட்ட’த்தில் 1956இல் பருமாவிற்குச் சென்றதையும், இரங்கூன், மாந்தலே, பகோ போன்ற நகரங்களில் பயணம் செய்த துய்ப்புகளையும் தனிப் பிரிவாக எழுதியிருப்பார். இன்னும் மு.இராமநாதன், கே.எல்.முனியப்பா, முகமது உயூனுசு, கோ.வேணுகோபாலன், வா.மு.சேதுராமன், திருவள்ளுவர் போன்றோரும் பருமியப் பயணத் துய்ப்புகளைத் தங்கள் பாணியில் எழுதியிருக்கிறார்கள்.  பேரறிஞர் அண்ணாவின் ‘இரங்கோன் இராதா’, கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படங்களிலும் பருமாவைப்பற்றிய செய்திகள் இருக்கின்றன. ‘பருமா – ஒரு தேசத்தின் ஆன்மா’ என்ற நூலில் எரால்டு பீல்டீங்கு ஆல் தனது ஆழ்ந்த பட்டறிவைப் (அனுபவத்தை) பதிவு செய்திருப்பார். பயண இலக்கியங்கள் என்பவை ஒரு நாட்டின் சுற்றுலா இடங்களை மட்டுமே சுற்றி வருபவை அல்ல. அவை ஒரு நாட்டின் வரலாற்றை, நில அமைப்பை, மக்களை, மக்களின் பண்பாட்டை, அரசியலை, துயரத்தை, இன்னும் பலவற்றை நாம் தெரிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகவும், பட்டறிவின் வெளிப்பாடாகவும் பயன்படுபவை.

 மியான்மர் எனப்படும் பருமா, புத்த சமயத்தைப் பேணுவதில் உயர்ந்த நாடு. பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டு நின்ற மக்களின் மண். இவ்வாறான மியான்மரில் பயணம் செய்து அடுத்த தமிழ் இலக்கிய நிகழ்விற்கான முன்னேற்பாட்டினைச் செய்ய வந்த இதழாளரும், உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கப் பொருளாளரும், என் இனிய நண்பருமான ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் தன்னுடைய ஏழு நாள் பருமியப் பயணத்தைச் சிறு சிறு பட்டறிவுக் குறிப்புகளோடு பெரும் படிப்பு இன்பத்தை உருவாக்கும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். அவர் பலமுறை என்னை வெளிநாடுகளுக்கு அழைத்திருக்கிறார்.  என்னால் செல்ல முடியவில்லை.  இந்த நூலைப் படிக்கும்பொழுது, எனது இளம்பருவத் துய்ப்புகளை அப்படியே தோண்டி எடுத்து வெளியில் கொட்டியது. சிறு அகவையில் என் தாயாரோடு இரங்கூன் மொகல் வீதிக்குச் சென்று தந்தையின் நகைப் பட்டறைக்காகத் தங்கமும், வைரமும் வாங்கி வந்ததும், மோல்மேனுக்கு அருகில் பான் சிற்றூரில் வாழ்ந்த தாத்தா – பாட்டியைப் பார்க்கக் கப்பலேறிப் பயணப்பட்டதும் நினைவில் கிடைக்கின்றன. இந்நூலில், திருச்சியிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்திற்குப் புறப்படும்பொழுது, அவருக்கு ஏற்படும் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாமும் அவரோடு பயணம் செய்கிற உணர்வை உருவாக்குகிறது.

 மியான்மரில் அவர் சந்தித்த பெருமக்கள் பெரும்பாலானோரைத் தமிழகம் வரும்பொழுது நானும் சந்தித்திருக்கிறேன். எங்கள் ‘பொன்மனம்’ கலை இலக்கியப் பேரவை மூலம்  பகுமாவிலிருந்து வருகை தருகின்ற பேராளர்களை விருந்தோம்பிப் பாராட்டு விழா நடத்துவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

  எங்கள் ‘பொன்மனம்’ கலை இலக்கியப் பேரவையின் நிறுவனத் தலைவர் அண்ணன்  இரா.கனிமொழியன் ஆண்டுதோறும் பருமாவிற்குச் சென்று இலக்கிய, இறையியல் (ஆன்மிக) நிகழ்வுகளில் கலந்து கொள்பவர். அது போலவே இங்கு வரும் அன்பர்களுக்கு மனிதநேயர் திரு.இ.சந்தானம் அலுவலகத்தில் பாராட்டுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அறநெறிக் கழகத் தலைவர் கோ.கலைச்செல்வன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர். “பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்” எனும் முழக்கத்துடன் குழந்தைகள் விழா, அண்ணா பிறந்தநாள் விழா என தல்லா நகரில் இலக்கியப் பணியாற்றுபவர். திரு.மு.க.முனியாண்டி, உலோகநாதன், உசேன், ஆறுமுகம் எனப் பலரையும் இங்குச் சந்தித்திருக்கிறோம்; பாராட்டியிருக்கிறோம்.

 கோ.கலைச்செல்வன் அவர்களுடன் ஒரு நேர்காணல் நடத்தி, நமது வியாசர்பாடி பக்தவச்சலம் நகரில் உள்ள பீலிக்கான் முனிசுவரர் ஆலயத் திடலில் ஒளிப்பதிவு செய்து, பலமுறை ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தேன்.

 நந்தவனம் சந்திரசேகருக்குப், பருமியப் பயணத்திற்கு முன்பே நம்பிக்கை வெளிச்சமாக  மியான்மரில் முருகானந்தம் தொடர்பு கிடைக்கிறது. கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து (இ)யாங்கூன் வானூர்தியில் பயணப்பட்டு பருமிய மண்ணில் கால் வைத்தது முதல் பருமியத் தமிழர்களின் விருந்தோம்பல் அளவிட முடியாதது. அத்தகைய அன்புள்ளம் உடையவர்கள்; விருந்தோம்புவதில் உயர்ந்தவர்கள். விருந்தோம்பலில் தமிழர்களின் மாண்பை வெளிப்படுத்துகின்ற இந்தப் பண்பினால்தான் வள்ளுவப் பேராசான் விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே ஒதுக்கினார்.  ஏழு நாட்களும் ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வோர் இல்லத்தின் விருந்தோம்பலுக்கும் தொடர்ந்து செல்வது சற்றுக் கடினமான செயல் என்றாலும், அத்தகைய அன்பான உள்ளங்களுக்குச் சொந்தக்காரர்களான பருமியத் தமிழர்களின் அன்பைத்  தட்ட முடியாது என்பதே இதன் வெளிப்பாடாகும்.  அங்கு அண்ணன் கோ.கலைச்செல்வன், அவரது மருமகன் சேதுபதி, பேரன் அதியமான்திரு.மு.கா.முனியாண்டி, ஏ.எசு.இந்திரன், எல்.சி.விசுவலிங்கம், எம்.ஏ.கருப்பையா, சோலையப்பன், விநாயகமூர்த்தி, சந்திரசேகர்,  தமிழ் வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த இளங்கோவன், பெரியார் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத் தலைவர் வீரா.முனுசாமி, கல்வி வளர்ச்சி மையத்தின் வி.ஏ.எம்.செல்வக்குமார், இன்னும் இந்து மாமன்றத்தின் தலைவர் எசு.எசு.செல்வம் – இவர்கள் அனைவரையும் சந்தித்ததும்,  அவர்களின் விருந்தோம்பலும், அடுத்த மாநாட்டுக்கான அவர்களது வழிகாட்டுதல்களும் சேர்ந்து ஒரு பயனுள்ள பயணமாக மாற்றியிருக்கின்றன.

(தொடரும்)

தமிழன்புடன்

கவிஞர் சொருணபாரதி,

ஆசிரியர் – கல்வெட்டு பேசுகிறது,

பொதுச் செயலாளர் – உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்,

பொதுச் செயலாளர் – பாரதி கலை இலக்கிய மன்றம்,

செயல் தலைவர் – ‘பொன்மனம்’ கலை இலக்கியப் பேரவை,

துணைச் செயலாளர் – முத்தமிழ் ஆய்வு மன்றம்,

அமைப்பாளர் – ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம்.

பேச: 9677110102, 9884404635.

மின்னஞ்சல்:

ssornabharathi@gmail.com

kalvettu1996@gmail.com