thamizh02

  புகுமுக வகுப்புகளில் (Pre-University) ஆங்கிலத்தில் கற்பிக்குங்கால் – தமிழினும் –  பேச்சுத் தமிழினும் – கற்பிக்கலாம் எனப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகட்கு அறிவுரைக் குறிப்பு வந்துள்ளது. உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழிற் பயிலும் மாணவர்கள் கல்லூரிகட்குள் நுழைந்ததும் அயல்மொழியாம் ஆங்கிலத்தில் கற்பிப்பதை அறிந்த கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே கல்லூரிப்பாடமொழியும் தமிழ்தான் என்று சட்டம் செய்திருக்க வேண்டும்.

  பி.ஏ. வகுப்புகளில் விரும்புவோர் கலைப்பாடங்களை(arts) தமிழிற்  படிக்கலாம் என்று கூறிவிட்டுத்  தமிழ்நாட்டு அரசில் பணிபுரிய விண்ணப்பம் செய்வோர் தமிழறிவு பெற்றிருக்க வேண்டிய கட்டாயமில்லை பேராசிரியர் இலக்குவனார்என்று கூறிவிட்டுத் தமிழ்ப்புலமையைத் தாழ்வாக மதிப்பிடுவோரையும் தமிழறிவே இல்லாதவரையும் அரசினர் முதன்மைப் பதவிகளில் அமரச் செய்துவிட்டு, தமிழ் வழியாகப் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்று பறையறைந்து கொண்டு, தமிழ் வழியாகப் படித்தலை விரும்பாதவர்களைக் கல்லூரி முதல்வர்களாக வைத்துக் கொண்டு தமிழ் வழியாகப் படிக்க மாணவர்கள் வந்திலரே என முதலைக் கண்ணீர் வடிப்பது பொருந்தாது.உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழைப் பாடமொழியாக ஒரே சமயத்தில் ஒரே ஆணையால் ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் தமிழைப் பாடமொழியாக ஆக்கச் சட்டம் பிறப்பித்தல் வேண்டும். புகுமுக வகுப்பில் தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று அறிவித்து ஆணை பிறப்பிப்பதை விடுத்து ஆங்கிலம்தான் பாட மொழி என்று வைத்துக் கொண்டு பேச்சுத் தமிழினும் சொல்லிக் கொடுக்கலாம்  என்பது பொருந்தாது. புகுமுக வகுப்பில் ஆங்கிலத்தைப்பாடமொழியாக வைத்துக்கொண்டு(ஆ.அ.) இளங்கலை வகுப்பில் விரும்புவோர் தமிழிற் படிக்கலாம் என்று கூறிவிட்டு மாணவர் அதற்கு வராத சூழ்நிலையை அமைத்துக் கொண்டிருப்பது அறமாகாது; தமிழ்வழியாகப் படிப்பது தக்கது என்பதை ஒப்புக் கொண்டது ஆகாது.

  ஆகவே, கல்வியமைச்சர் அவர்கள் மாணவர் நலத்தினும் நாட்டு நலத்தினும் கருத்துக் கொண்டு கல்லூரியிலும் தமிழ் வழியாகப் படிக்கும் திட்டத்தை உடனே கொண்டு வரவேண்டுகின்றோம். பலர் விருப்பத்துக்கு மாறாக மது விலக்குச் சட்டம் இயற்றும் அரசு சிலர் விருப்பத்துக்கு மாறாகத் தமிழைப் பாடமொழியாக்கும் சட்டத்தை ஏன் கொண்டு வருதல்கூடாது. உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்குத் துணை செய்த துணிவும் அறிவும் இதற்குத் துணை செய்யாமை ஏனோ?

        துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி    

       இன்பம் பயக்கும் வினை.

kuralneri02

– குறள்நெறி(மலர் 1 இதழ் 22): கார்த்திகை16, 1995:1.12.64