தலைப்பு-சுசுமா : susuma

ஈழப்படுகொலை : eezhapadukolai

பெறுமதியான பங்காளியா இலங்கை?

 

  வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு.

  இப்போது மைத்திரி பயன்படுத்தியிருக்கும் சொற்கள், கொடுத்திருக்கும் காலக்கெடு – எல்லாமே இராசபக்சவிடம் கைம்மாற்றாய் வாங்கியவை. ‘ஆறு மாதத்தில் மீள் குடியேற்றம்’ என்பது, ஆறு மாதத்துக்கு ஒருமுறை இராசபக்ச அலுக்காமல் சளைக்காமல் கொடுத்து வந்த வாக்குறுதி. இந்தியாவும் அமெரிக்காவும் சீனமும் பாகித்தானும் அதை எப்படியெல்லாம் நம்பின என்பதும், அப்படியொரு வாக்குறுதியை அவ்வப்போது கொடுத்ததற்காக இராசபக்சவை எப்படியெல்லாம் கொண்டாடின என்பதும் தனிக் கதை.

  “உள்நாட்டுப் போரால் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய தமிழர்கள், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது. காவல்துறையினர் மற்றும் படையினர் உதவியுடன் ஆறே மாதத்தில் அவர்கள் மீள் குடியேற்றப்படுவர்” என்று இப்போது தேனொழுகப் பேசியிருக்கிறார் மைத்திரி.

  மீள் குடியேற்றம் என்பதென்ன? தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர், அந்த இடத்தில் மீண்டும் குடியமர வழி வகுப்பது. வெளியேறுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களைக் கொண்டே மீள் குடியேற்றம் செய்வேன் என்று சொல்கிற அளவுக்கு மைத்திரியின் சொற்களில் கொழுப்புச் சத்து மிகுந்து விட்டிருப்பதுதான் கொடுமை.

  ஈழத் தமிழர்கள் தங்களது சொந்த நிலத்திலிருந்து வெளியேறியதற்கு, இலங்கைப் படையினரின் கொலைவெறியும் பாலியல் வெறியும் இடைவிடாத குண்டுவீச்சும்தான் காரணம். இலக்கு எதுவென்று தெரியாத பரந்த வெளியில் எதிரியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தும் பல்குழல் எறிகணைச் செலுத்தி (Multi Barrel Rocket Launcher) மூலம், கைக்கெட்டும் தொலைவிலிருந்த மக்கள் திரளைக் கொன்று குவித்த படை உலகிலேயே இலங்கைப் படை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

  மேலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிபாட்டுத்தளம் என்றெல்லாம் பார்க்காமல் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல் வேறு! மகிந்தனின் தம்பி கோதபாயவின் கூலிப்படையால் கொழும்பு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நேர்மையான இதழாளனான இலசந்த விக்கிரமதுங்கவின் இறுதி வாக்குமூலம் மறக்காமல் அதைப் பதிவு செய்தது. “தன்னுடைய சொந்த மக்களையே விமானத்திலிருந்து குண்டு வீசிக் கொல்கிற ஒரே நாடு எங்கள் இலங்கை மட்டும்தான்” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தான் இலசந்த.

  இத்தகைய திட்டமிட்ட தொடர் படைத் தாக்குதல்கள் மூலம்தான் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்தது இலங்கை. அதே படையினரின் உதவியுடன் அவர்களை மீளக் குடியேற்றி விட மைத்திரியால் முடியுமென்றால், அவர் உண்மையிலேயே அசகாய சூரர்தான்.

  மைத்திரி சொல்வதில், ஒரே ஒரு செய்தியை மட்டும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அது, வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பானது. மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களுக்குச் சொந்தமான அந்த இடங்களெல்லாம் இப்போது படையினரின் பயன்பாட்டிலிருக்கின்றன. வணிகம், உழவு, பாலியல் தொழில் என்று எல்லாவற்றுக்கும் அந்த நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  தங்கள் சொந்த இடங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேற வேண்டுமென்றால், முன்னதாக அந்த இடங்களிலிருந்தெல்லாம் படையினர் வெளியேற்றப்பட்டாக வேண்டும். மைத்திரியோ, ‘மீள் குடியேற்றம் செய்வேன்’ என்று சொல்கிற அதே வாயால் – ‘தமிழர் பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார். தமிழருக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து படைகளை வெளியேற்றாமல், தமிழர்களை எங்கே கொண்டு போய்க் குடியமர்த்தப் பார்க்கிறார் மைத்திரி?

  வட மாகாண அவை முதல்வர் நீதியரசர் விக்கினேசுவரன் அண்மையில் ஒரு மாநாட்டில், இந்தக் காணி (நில) செய்தி தொடர்பாக மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் பேசியிருந்தார்.

  “காணிகளை இழந்தவர்கள் யார்? அவர்கள் இப்போது எங்கே? வெளிநாடுகளுக்குப் போய்விட்டவர்கள், முகாம்களில் அல்லல்படுபவர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்ச மடைந்தவர்கள், வேறு பகுதிகளில் குடியேறி விட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்…..

  தங்கள் நிலங்களை அவற்றுக்கு உரிமையானவர்கள் திரும்பப் பெறச் சட்டம் துணையாயில்லை

  உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் படை முகாம்களைச் சுற்றியுள்ள நிலங்கள் விழுங்கப்பட்டு விட்டன.

  25 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா மனித உரிமைகள் அவையில் சில அமைப்புகள் கொடுத்த அறிக்கை ஒன்று, தமிழர் தாயகத்தைக் கைப்பற்ற அரசு முயல்வது குறித்து எச்சரித்திருந்தது.

 2009இல் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயுதங்கள் அணைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் தமிழர் பகுதிகளை விட்டுப் படை வெளியேறவில்லை. எமது மக்கள், முகாம்களிலும் வேறு இடங்களிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் படைகள் நிலை கொண்டிருக்கின்றன.

  காணிகளை விடுவிப்பதாக அறிவித்தார்கள்… அது வெறும் அறிவிப்போடு நிற்கிறது.

  விக்கினேசுவரனின் ஆதங்கம் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஆதங்கம். அவர் சொல்வதுதான் கண்கூடான உண்மை. தமிழரின் காணிகளைக் கைப்பற்றி நின்று கொண்டிருக்கும் படையினரை வெளியேற்றாமல், தமிழர்களை மீளக் குடியமர்த்த முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மைத்திரி பேசுகிறார் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டே, இராசபக்ச மாதிரி நடைமுறைக்கு ஒவ்வாத அறிவிப்பை வெளியிடுகிறார் அவர்.

  இனி ஆறு மாதத்துக்கு ஒருமுறை மைத்திரியிடமிருந்து இப்படியோர் அறிவிப்பு வெளியாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தொடர்ந்து, “இராசபக்ச காலத்தோடு ஒப்பிட்டால் மைத்திரி காலம் பொற்காலம் என்பது இதிலிருந்து புலனாகிறது” என்று நிசா பிசுவால்கள், சுச்மா சுவராசுகள் வெளியிடுகிற அறிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும்.

  நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முயலும் மைத்திரி அரசுக்கு இப்போதே சாமரம் வீசத் தொடங்கிவிட்டது இந்தியா. ‘புதிய இலங்கை அரசு இந்தியாவின் பெறுமதி மிக்க பங்காளி’ என்பது வெளியுறவு அமைச்சர் சுசுமாவின் மேலான கருத்து. தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் கொலைவெறித் தாக்குதலை, ‘பங்காளிச் சண்டை’ என்று சொல்லாமல் விட்டார! அந்த அளவில் நாம் மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்!

  பாரதிய சனதாவுக்குள்ளும் சுசுமாவின் ஆளுமை தனியாளுமை என்பதால், தமிழக பாரதிய சனதாவிலிருந்து உடன்பிறவி தமிழிசையோ வேறு எவருமோ அவரைக் கேள்வி கேட்கவும் முடியாது.

  சோனியாவின் வாழ்த்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கியபோது, இராசபக்சவிடமிருந்து பெற்ற ‘பெறுமதி’ மிக்க பரிசுப் பொருளை அரசிடமோ கட்சியிடமோ ஒப்படைக்காமல் கையடக்கிக் கொண்ட சுச்மாவுக்குப் ‘பெறுமதி’ குறித்துப் பேசுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்பது சுசுமாவின் இன்னொரு கூடுதல் தகுதி!

  நம்மைப் பொறுத்த வரை, நமது தொப்புள் கொடி உறவுகள் நூற்றைம்பதாயிரம் (ஒன்றரை இலட்சம்) பேரைக் கொன்று குவிக்க சோனியா அரசு கொடுத்த தளவாடங்களின் ‘பெறுமதி’ என்ன என்பதுதான் கேள்வியே தவிர, சுசுமா வாங்கிய பரிசுப் பொருளின் பெறுமதி பற்றியெல்லாம் நாம் கவலைப் படுவதில்லை. மைத்திரியின் மீள் குடியேற்றப் பித்தலாட்டம் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

  இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கான நீதியை மெல்ல மெல்ல நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த இக்கட்டான நிலையில், மீள் குடியேற்றம், ஆட்சியுரிமைப் பகிர்வு, வளர்ச்சி – என்றெல்லாம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இலங்கை. மைத்திரியின் பேச்சு அதைத்தான் காட்டுகிறது. ஆனால், இவற்றில் எதையும் அது செயல்படுத்தப் போவதில்லை என்பதைத்தான் சிங்கள ஆட்சியாளர்களின் கடந்த கால வரலாறு காட்டுகிறது.

  தமிழர் நிலங்களில் நின்று கொண்டிருக்கும் சிங்களப் படைகள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை கண்டிப்பாக ஒருநாள் உருவாகும். தெரிந்தோ தெரியாமலோ ‘‘இலங்கையில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” என்று மைத்திரியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது அதை உறுதி செய்கிறது.

  தமிழரின் காணிகள் மட்டுமல்ல, தமிழர் தாயகமும் சிங்கள அரசிடமிருந்து விடுதலை பெற வேண்டும். மைத்திரியின் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் ‘காரணங்கள் அப்படியே இருக்கின்றன’….. விடுதலை எப்படி இயலாமல் போகும்!

  “கூட்டாட்சிக் கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். எங்கள் விருப்பப்படி தீவின் ஒரு பகுதியில் எமக்கென ஒரு தனி நாடு அமைவதை சிங்கள மக்கள் ஒருநாள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஈழத்துக்காந்தி தந்தை செல்வா தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டது 1976 நவம்பரில்! தமிழினத்துக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகச் செல்வாவின் சொற்கள் இன்று வரை ஒளிர்ந்து கொண்டிருக்க, மைத்திரியின் பித்தலாட்ட வாக்குறுதிகளும் சுசுமாக்களின் அசட்டுத்தனமான உளறல்களும் செல்லுபடியாகும் என்றா நினைக்கிறீர்கள்!

– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு

pugazenthi thangarasu02

– தினச் செய்தி (காலை நாளிதழ்).

முத்திரை-தினச்செய்தி : muthirai_dinacheythi

 தரவு: மடிப்பாக்கம் அறிவொளி