பேராசிரியர் சி.இலக்குவனார்: s.Ilakkuvanar

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3

  தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.

 

வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப் பற்றி விரிவாக அறிவரேயன்றி, நம் நாட்டுப் போரைப்பற்றி நன்கு அறியார். அது அவர்கள் குற்றமும் அன்று. தமிழ் நாட்டு வரலாறு நன்கு அறிந்து கொள்வதற்குரிய முறையில் கல்வித் திட்டம் அமைந்திலது. வருங்காலக் கல்வித்திட்டமாவது தமிழர்கள் தம் முன்னோர்களை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்.

 

இவ்வாறு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழக நில வரலாற்று அறிவையும் தமிழ்ப்பெயர் வரலாற்று அறிவையும் படிப்பவர்களுக்கு ஊட்டுவதையே பேராசிரியர் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்.

  சொற்பொருள் விளக்கங்களின் பொழுது மட்டும் அல்லாமல் தொடர் விளக்கங்களிலும் தமிழ் உணர்வை ஊட்டப்பேராசிரியர் தவறியதில்லை. சங்க இலக்கியப் பாடல்களை நாடக வடிவில் விளக்கும் பேராசிரியர் தலைவியும் தோழியும் உரையாடும் பொழுது பிறமொழி கலந்து பேசுவதால் ஏற்படும் தீமையை விளக்குகிறார்; இதன் மூலம் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என வலியுறுத்துகிறார். அகநானூற்றறுப் பாடல் 211 இல் வரும் மொழிபெயர் தேஎத்தர் என்னும் தொடரைப் பின்வரும்வகையில் விளக்குகிறார். (தலைவி, தோழி ஆகியோரின் உரையாடலில் இடைப்பகுதி)

தலைவி : (தலைவர்) எங்குப் போவதாகக் கூறினார்.

தோழி : தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகட்குச் செல்வதாகக் கூறினார்.

தலைவி : இப்பொழுது தமிழ்நாட்டின் வட எல்லை எது?

தோழி : ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வட எல்லை இமயமலையாக இருந்தது. இப்பொழுது திருவேங்கடமலைதான் வட எல்லை.

தலைவி : திருவேங்கட மலைக்கு வடக்கேயுள்ள நாடு?

தோழி : அம்மலைக்கு வடக்கேயுள்ள நாடு இப்பொழுது வேறு மொழி வழங்கும் நாடாகக் கருதப்படுகிறது.

தலைவி : அதன் காரணம் என்ன?

தோழி : என்ன? அதற்கு வடக்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் தெற்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தெற்கேயாண்ட தமிழ் அரசர்கள் வடக்கேயுள்ள தமிழ் மக்கட்கு நல்ல செந்தமிழ்க்கல்வியை அளிக்கத் தவறிவிட்டனர். வடபகுதிகளில் தமிழ்ப்புலவர்கள் தோன்றித் தமிழை வளர்க்கப் பாடுபடவில்லை. இச்சமயத்தில் ஆரியமொழி பேசும் இனத்தார் அப்பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தம் மொழியையும் வழக்க ஒழுக்கங்களையும் நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்து தொண்டாற்றினர். அப் பகுதியிலிருந்த தமிழர்கள், தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டதோடு, தம் மொழியையும் சிதைத்து வழங்கினர். பின்னர் ஆரிய மொழியைப்படித்து அதன் இலக்கணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆகவே இன்று, அவர்கள் பேசும்தமிழ் நம் தமிழினின்றும் வேறுபடுகின்றது.

தலைவி : பிற மொழிச் சொற்களைக் கலந்து பிற மொழி இலக்கணத்தை ஏற்றுக் கொண்டதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டுவிட்டது?

தோழி : ஆம் அம்ம! அப்பகுதியில் வழங்கும் மொழி நம் மொழியினின்றும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.

தலைவி : இப்பொழுதுஎன்ன பெயர் பெற்றுள்ளது?

தோழி : என்ன பெயர்? ஒரு பெயரும் கிடையாது. தமிழ் என்று சொல்வதற்கும் தகுதியுடையதில்லை. வேறு மொழியாயும் இல்லை.

தலைவன்-தலைவி காதல் செய்தியிலும் தமிழ்க்காதலை இணைக்கும் பேராசிரியரின் தமிழ்க்காதலும் வரலாற்றை உணர்த்தியாவது நம்மை விழிப்படையச் செய்ய எண்ணும் அவரின் நுண்மாண் திறனும் போற்றுதற்கு உரியன அல்லவா?

அகநானூற்றுப் பாடல் 31 இல் வரும் தமிழ்கெழுமூவர் காக்கும்’ என்னும் அடியை விளக்கித் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததாகத் திரித்துக் கூறுவோருக்குத் தமிழ் என்னும் சொல்லே நம் மொழியின் மூல முதன்மைச் சொல் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.

தமிழ் : இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காண்ப்படுகின்றதால், கி.பி.5ஆம் நூற்றாண்டில் தோன்றிய திராவிட என்ற சொல்லே தமிழ் என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்.

 

  தமிழ் என்பதே தமிழர்கள் தம் மொழிக்கு இட்ட பெயர் என இனியேனும் பகைமுக ஆராய்ச்சியாளர்கள் உணர்வார்களாக!

  இலக்கியச் சுவையில் மயங்கி விடாமல் இலக்கியச் சுவை வாயிலாகவும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு தொடர்பான காப்பு உணர்வையும் மீட்பு உணர்வையும் படிப்பவர்களிடையே விதைத்தமையால்தான் பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்க்காப்புத் தலைவராகத் தமிழர் உள்ளங்களில் வாழ்கிறார்.

பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று நாம்

தமிழிலேயே பேசுவோம்! தமிழிலேயே எழுதுவோம்!

தமிழ்வழிக்கல்வியே பெறுவோம்!

தமிழால் உலகாளுவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்