ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 தொடர்ச்சி)
நீதிமன்றப் பணி
இப்படி இருந்தும் நீதிமன்றத்தில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய்ப் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருடம் வழக்குரைஞர்களாக பதிவு செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய்க் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருடம் எனது நண்பர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருடம் நான் 55 ஆவது வயதில் விலக வேண்டி வந்தது. அதே வருடம் அவரும் உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவியிலிருந்து விலகினார்! மேற்கூறியபடி நாங்களிருவரும் ஏறக்குறைய சமமாக உயிர் வாழ்ந்ததைப் பரம் பொருள் எங்களுக்கு : அளித்த பேரருளாகக் கொள்கிறேன். பிறகு 1954-ஆம் வருடம் எனது தீயூழால் என்னை விட்டு வைகுண்டம் அடைந்தார்.
இனி 1882-ஆம் வருடத்தின் என் பழைய கதைத் தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் படித்தபோது நடந்த செய்திகளில் தற்காலம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருப்பது அங்குள்ள உபாத்தியாயர்களுக்கெல்லாம் பிள்ளைகள் பட்டப்பெயர் / நிந்தைப் பெயர் வைத்ததேயாம். தமிழ் வாத்தியாருக்கு மாங்காய் வாத்தியார் என்று பெயர். மற்றொருவருக்குப் பழஞ்சால்வை என்று பெயர். தலைமை ஆசிரியருக்கு (Head master) நெட்டைக் கால் என்று பெயர். மற்றவர்களுக்கு மிப்படியே. இதில் வேடிக்கை யென்னவென்றால் அவர்களின் உண்மையான பெயர் எனக்குத் தெரியவே தெரியாது! மூன்றாவது வகுப்பில் படித்த போது முதலாவதாக இருந்ததற்காக எனக்குப் பரிசு கிடைத்தது. அன்றியும் பாராயணம் (Recitation) ஒப்பு வித்த தற்காக அரசாட்சியர் (Viceroy) பரிசு கிடைத்தது. இது முதல் ஒவ்வொரு வருடமும் பதின்நிலை(மெட்ரிக்குலேசன்) வகுப்பு வரையில் வருடா வருடம் பரிசு கிடைத்தது.
பிறகு 1883, 84 வருடங்களில் பி. டி செங்கல்வராய நாயக்கர் பள்ளியில் நான்காவது கீழ் வகுப்பு, நான்காவது மேல் வகுப்பு (lower fourth, upper fourth) வகுப்புகளில் படித்தேன். நான்காவது கீழ் வகுப்பில் படித்தபோது நடந்த ஒரு விந்தையான சம்பவத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அக்காலம் இவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மேல் இடைநிலை (அப்பர் செகண்டரி) பரிட்சை என்று ஒரு பரிட்சை இருந்தது. அப்பரிட்சை நெருங்கியபோது தினம் நான் காலையில் பள்ளிக்குப் போகுமுன் பிள்ளையாரண்டை பூசை செய்யும் போது இப்பரிட்சையில் முதல் வகுப்பில் நான் மூன்றாவதாகத் தேற வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தேன். அரசிதழில் (கெசட்டில்) தேறினவர்களின் பெயர் அச்சிட்டபோது அப்படியே. முதல் வகுப்பில் மூன்றாவதாக என் பெயர் இருந்தது! இதை நான் ஏதோ பெருமையாகவோ டம்பமாகவோ எழுதவில்லை, எழுதியதற்குக் காரணம் கூறுகிறேன். நான் வகுப்புகளில் நன்றாய் படித்து வருகிறேன் என்று நினைத்து பரிட்சையில் எல்லோரையும் விட முதலாவதாக இருக்க வேண்டுமென்று கோருவது சகசமாயிருக்கலாம், மூன்றாவதாக இருக்கவேண்டுமென்று ஏன் கோர வேண்டும்? இதற்குக் காரணம் இன்றளவும் எனக்குத் தெரியாது! ஆயினும் நான் அப்படி கோரிப் பிரார்த்தித்தது என்னவோ வாசுதவம். என் பிரார்த்தனை நிறைவேறியதும் வாசுதவம். இது ஒரு அற்ப விசயமானாலும், இதனால் தெய்வத்தைப் பிரார்த்திப்பது பயனானது என்று உறுதியாய் எனது மனதில் உதித்தது. இச்சந்தர்ப்பத்தில் டெனிசன் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு வரி ஞாபகம் வருகிறது. அதாவது :– “உலகம் கனவு காண்கிறதை விடப் பிரார்த்தனையினால் உலகில் பல விசயங்கள் (சரியாக) நடந்து வருகின்றன” என்பதாம். 1885-ஆம் வருடம் இப்பள்ளியின் வருடாந்திர விழாவில் அலெக்குசாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில சிறு நாடகத்தில் கள்வனாக பாராயணம் ஒப்புவித்த பரிசு பெற்றேன்.
1886-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரிக்கு மாற்றப் பட்டேன். இங்கு இரண்டு வருடங்கள் படித்து மெட்ரிகுலேசன் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து பரிட்சைக்குப் போன பிள்ளைகளுள் முதலாவதாக இருந்தபடியால் (நான் சிறு வயதில் கோரியபடி) எனக்கு செயராமச் செட்டியார் பொற்பதக்கம் (Jayarama chetty’s Gold medal) கிடைத்தது. அன்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதலாவதாக இருந்தபடியால் இரண்டு பரிசுகளும் பெற்றேன். அன்றியும் (,)லவரி (Lovery) பரிசும் கிடைத்தது. இப்பரிட்சையில் தேறினவுடன் பச்சைப்பன் கல்லூரியை விட்டு மாநிலக்கல்லூரி(Presidency college) என்னும் அரசு கல்லூரியைப் போய்ச் சேர்ந்தேன். இப்படி நான் கல்லூரியைவிட்டு வேறொரு கல்லூரிக்குச் சென்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. என் தகப்பனார் இக்கல்லூரியிலிருந்து தான் திறனர் (Proficient) பரிட்சையில் தேறினார். எனது மூத்த சகோதர்களும் இக்கல்லூரியில் படித்தவர்கள். எனது சிறு வயது முதல் எப்போது நாமும் இந்த கல்லூரியைப் போய் சேர்வோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பழைய நண்பராகிய வி. வி சீரீனிவாச ஐயங்காரை விட்டுப் பிரிந்து இக்கல்லூரியைச் சேர்ந்தேன். இப்படி நான் என் பழைய பள்ளியை விட்டுப் பிரிந்ததற்காக எனது நண்பர் என்னை ‘பச்சையப்பன் கலாசாலைக்கு துரோகி’ என்று எப்போதும் அழைப்பார். இக்கலாசாலையில் 1888-1889 வருடங்களில் எப். ஏ. (F. A.) வகுப்பில் படித்து பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். இப்பள்ளியைச் சேர்ந்தது என்னுடைய நல்லூழ்களில் ஒரு முக்கியமான அம்சம் என்று கூற வேண்டும். முதலில் இங்கு சேர்ந்தபடியால் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவ்வாறு புதிதாய் கிடைத்த நண்பர்களுள் முதலாவதாக அ. சீனிவாச பாய் என்பவரைச் சொல்ல வேண்டும். இவர் எனக்குக் கிடைத்த ஆப்தர்களுள் ஒருவர் என்று நான் கூற வேண்டும். இவரும் நானும் சுமார் 8 வருடம் இக்கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் (law college) ஒன்றாய்ப் படித்தோம். பிறகு இவர் வழக்குரைஞராகி மங்களுருக்குப் போனார். இவர் எனது ீயூழ் வசத்தால் தனது 76-ஆவது வயதில் பரலோகம் சென்றார். இவருடைய மூத்த மகன் பிரதம மந்திரி பண்டித நேரு அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாக (Private Secretary) இருக்கிறார் என்று சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கிடைத்த எனது இரண்டாவது நண்பர் மேற்சொன்ன சீனிவாச பாயின் அண்ணன் அ. வாமன் பாய் என்பவர். இவர் 1888-ஆம் வருசம் எங்கள் வகுப்பிற்கு மேல் வகுப்பில் படித்திருந்தார். ஆயினும் சீனிவாச பாாயின் மூலமாக எனக்குச் சிநேகிதமானார். மிகுந்த புத்திசாலி. மனிதர்களுடைய குணங்களை அறிவதிலும் புத்தகங்களின் சாரங்களை கிரகிப்பதிலும் வெகு நிபுணர். இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
Leave a Reply