(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 3. தாய் தந்தையர் போற்றல்-தொடர்ச்சி)

எழுத்தறிவு

என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது கல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு ஊர். அவருக்கு அந்த ஊரிலும் அதற்கடுத்த ஊராகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் சீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர் சிரீரங்கப் பட்டணத்தைப் பிடித்த சமயம் (1792 கி.பி.) அவர் ஆங்கிலேய சைனியத்துடன் சிப்பாய்களுக்கு உணவுப் பொருள்கள் சேகரித்துக் கொடுக்கும் வேலையில் போயிருந்தாராம். சிரீரங்கப் பட்டணம் முற்றுகையின் போது அகழியின் ஒரு மூலையில் பதுங்கியிருந்தாராம்; மேலே குண்டுகள் பாய்கிற சப்தத்தைக் கேட்டுத் தான் பிழைப்பது அரிது என்று நடுங்கிக் கொண்டிருந்தனராம். பிறகு சிரீரங்கப் பட்டணத்தில் சிப்பாய்கள் சூறையாடிய போது அவர்கள் கொண்டு வந்த பொருள்களை சரசமாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உரூபாயாக கொடுத்து வந்தனராம். இப்படி சேகரித்த பொருள்களை யெல்லாம் நாலைந்து பொதி மாடுகள் மீது போட்டுக் கொண்டு அடையாளம் பேட்டுக்குத் திரும்பி வந்தனராம். அவற்றை விற்று (உ)ரொக்கமாக்கி வானகரத்தில் ஒரு சத்திரம் கட்டி வைத்தனராம். அச்சத்திரம் இன்றும் இருக்கிறது.

என் தாயாரைப் பெற்ற பாட்டனரும். என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரும் நான் பிறக்கு முன்பே காலகதி அடைந்து விட்டனராம்.

என் தகப்பனார் எங்களை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்து வந்ததற்குச் சில உதாரணங்களைக் கூறுகிறேன். தினம் காலை மாலைகளில் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளை. அதன்படி, நாங்கள் படித்து விட்டோமானால் மற்ற வேளைகளெல்லாம் நாங்கள் விருப்பப்படி விளையாடலாம். விடுமுறை தினங்களில் கட்டாயமாய் விளையாட வேண்டும். அதற்காக எங்களுக்கெல்லாம் கோலி பம்பரம் முதலிய விளையாட்டுக் கருவிகளை, தானே வாங்கிக் கொடுப்பதுமன்றி தன் வயதையும் பாராமல் எங்களுடன் எங்கள் விளையாட்டுகளில் கலந்துக் கொள்வார்.

இன்னொரு உதாரணத்தை இங்கு எழுதுகிறேன். நான் பி. ஏ. படித்துக் கொண்டிருந்த போது என் பால்ய சிநேகிதரான வி. வி. சீனிவாச ஐயங்கார் (இவரைப் பற்றி பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.) என்னை அடிக்கடி பார்க்க வருவார். அச்சமயங்களில் நான் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்தால் அவரைக் கீழேயே நிறுத்தி “சம்பந்தம் படித்துக் கொண்டிருக்கிறான். 4-மணி வரையில் அவன் படிக்கவேண்டிய காலம்” என்று சொல்லி, அது வரையில் அவருடன் பேசிக் கொண்டிருந்து, நான்கு அடித்தவுடன் அவரை மெத்தைக்கு அழைத்து வந்து என்னிடம் விட்டு நாங்கள் பேசுவதற்கு தடையாயிருக்கலாகாதென்று கீழே போய் விடுவார்!

நாங்கள் வாலிபத்தை அடைந்த பிறகு தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் மொழிப் படியே எங்களை பாவித்து வந்தார் என்றே நான் கூறவேண்டும்.

இனி என் சொந்தக் கதையை எழுத ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவனும் தான் சிறு குழந்தையாய் இருந்த போது! முதல் முதல் என்ன சம்பவம் அவன் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது ஒரு வேடிக்கையாய் இருக்கும். எனது மூன்றாவது வயதில் நேரிட்ட இரண்டு விசயங்கள் எனக்கு இப்போது ஞாபகமிருக்கின்றன.

ஒரு சிறிய கிருட்டிணன் விக்கிரகத்தை வைத்துக் கொண்டு எங்கள் வீட்டின் குறட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் “தெருவில் விளையாடக் கூடாது. வீட்டிற்குள் விளையாடு” என்று என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனது; என் தமக்கை மீனாம்பாள் என்பவர்கள் மரித்த போது என் தாயார் அவர்கள் பக்கலில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டதும் அவர்களுடைய உடலை பல்லக்கில் எடுத்துக் கொண்டு போனதுமாம். மேற் குறித்த சம்பவங்களும் நடந்தது நான் இப்போது இருக்கும் எங்கள் பிதுரார்சித வீடாகிய ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் இலக்க வீட்டிலாகும்.

1876-ஆம் வருடம் எங்கள் தாயார் இந்த வீட்டிலிருந்தால் எந்நேரமும் தன் மடிந்த குமாரத்தியின் ஞாபகம் வருகிறதெனக் கூற என் தகப்பனார் தன் குடும்பத்துடன் இதே வீதியில் எங்கள் பங்காளியாகிய கட்டைக்கார ஆறுமுக முதலியாரின் சந்ததியாரின் வீடாகிய 54ஆவது கதவிலக்கமுள்ள பெரிய வீட்டில் குடி புகுந்தார். இந்த வீட்டில் நான் அது முதல் முதல் 1893 ஆம் வருடம் வரையில் வசித்து வந்தேன்.

எனது அட்சராப்பியாசம் 1877-ஆம் வருடம் இங்கிருக்கும்போது நடந்தது. என்னை முதல் முதல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்று காலையில் என் தாயார் என்னைக் குளிப்பாட்டியது; என் தகப்பனார் மடியில் உட்கார்ந்து நான் தெலுங்கு அட்சரங்கள் பயின்றது, தெருப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் என்னைத் தன் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டுபோனது, எல்லாம் மிகவும் நன்றாய் நேற்று நடந்தது போல் என் மனத்தில் படிந்திருக்கிறது. அச்சமயம் எனக்கு அணிவித்த பட்டு சொக்காய், நிசார், கோணல் டொப்பி முதலியவற்றை, எனக்குப் படம் எழுதும் சக்தியிருக்குமானால் அப்படியே வரைந்து காட்டுவேன்; இதில் வேடிக்கையென்னவென்றால் நேற்று தினசரி பத்திரிகையில் நான் படித்த விசயங்களைப்பற்றிச் சொல்வ தென்றால் எனக்கு ஞாபகமறதியாய் இருக்கிறது! சுமார் 84 வருடங்களுக்கு முன் நடந்த மேற்கண்ட விசயங்களைப்போன்ற பல விசயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.

எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் என்னுடைய ஐந்தாம் வயதின் ஆரம்பத்தில் எனக்கு மேற்கண்டபடி அட்சராப்பி யாசம் செய்வித்தார்கள். அது முதல் 1879-ஆம் வருசம் வரையில் மூன்று தெருப்பள்ளிக்கூடங்களில் நான் படித்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை