மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல!

புதிய வினைக்கு அழைப்பு!

  மகிழ்ச்சியே மயக்கம்;  மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளல் வேண்டும். அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும். தொடர்ந்து மகிழ்ச்சி மயக்கமாகுதல் கூடாது. மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனித குலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகளுக்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மதுவன்று.

  கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம். மண்தான்; எனினும் மதிமிக்க செயலன்றோ? மனிதன் அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்! எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்! மகிழ்ச்சி, வினையின் இறுதி முடிவு அல்ல; வினைப்பயன்! புதிய வினைக்கு அழைப்பு; புதிர் அல்ல; புண்ணியம் பேசிடுவோர் தத்துவம் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை.

  தமிழர்களுக்கு இது புதிதுமன்று. தாயின் அழகைப் பெற்றிடும் மகவு. பிறகு தாயுமாகித் தன் அழகளித்துச் சேயை அளித்திடும்;  காண்கிறோம் அன்றோ? அது போலவேதான் மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு தொடர்ந்து தொகை தொகையாக வகை வகையாக மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபடவேண்டும்.

பேரறிஞர் அண்ணா:

அண்ணாவின் சிந்தனைகள்:

தொகுப்பு : புலவர் இளஞ்செழியன்:

பக்கம்.136-137