(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2. தொடர்ச்சி)

 

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 1 தொடர்ச்சி

“அப்பா போய்விட்டார்” என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான்.நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்” என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அடுக்கிற்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.

மரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால்! செத்துப்போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.

சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, “என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே?” என்று கேட்டேன்.

“ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, “திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா” என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.

அதைக் கேட்டு, “இதோ வந்துவிட்டேன், அப்பா” என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.

அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.

பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்
ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்!”

தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. “அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் மருத்துவரை(டாக்டரை)க் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கவலையோடு கேட்டேன்.

அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். “நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!” என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.

நான் மருத்துவரோடு திரும்பியபோது தம்பி ‘ஓ’வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.

அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லாக் கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.

வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.

“நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா” என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.

அப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல. ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு! வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.

எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்‘ என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா – அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான அலைவரிசையில்  வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.

பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற நகரப்பேருந்துகளில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி