(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)

 kannadasan04

ஆரியக் கசப்பு

உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே,

தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை

தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை

(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2)

 என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார்.

‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர் கண்ணதாசனால் திரைப்பாடலுக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அந்த அளவிற்கு அவரையே கவர்ந்த அவரது தொடர்கள் அமைந்துள்ளன. இதனைத் தனிக் கட்டுரையாகவே எழுதலாம்.அதற்குச் சான்றாக இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘தேரில்லை சிலையில்லை’ என்னும் தொடரைக் குறிப்பிடலாம். இவற்றை அவ்வாறே கையாளாமல் ‘தேரேது சிலை யேது’ என மாற்றிப் பாடல் எழுதி யுள்ளார்.

   தரணி போற்றும்தமிழிசையில் மயங்குபவரல்லவா கவிஞர் கண்ணதாசன். எனவே, வடநாட்டு இசையை ஆந்தையின்   அலறலாக எண்ணுகிறார். ஆதலால்,

ஆந்தையதும் வடநாட்டு இசைபா டிற்று

இக்காவின் இசைராணி நானே என்ன

எள்மூக்குச் சில்வண்டு குரலோட் டிற்று

(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 3: 4-6)

எனப் படை முகாமிருக்கும் வெளியின் இரவு நேரத்தைக் கூறுகிறார்.

தமிழர்களின் வீரத்தையும் சிறப்பையும் அறியாமல் கனகவிசயர் புத்தியின்றிப் பேசியதால்தானே கல்சுமக்க நேரிட்டது என்கிறார் கவிஞர். சொன்னவர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விற்பயிற்சி உரியவர்கள் என்றால் போர்க்களத்தில் வாகை சூட வாய்ப்பு நேர்ந்திருக்காவிட்டாலும் மோசமான தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.. ஆனால தருப்பப்புல் லன்றி வேறறியாப்புல்லர் கூட்டமன்றோ? எனவே, வீரமும் அறிவுமற்றவர்கள் கல்சுமக்க நேரிட்டது என்பதைக் கவிஞர் கண்ணதாசன்

புல்லன்றி வில்லறியாப் புல்லர் கூட்டம்

புத்தியின்றிச் சொல்லுகின்ற சொல்லால் என்றும்

கல்சுமக்க வரும்

(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 4:1-3 )

என விளக்குகிறார்.

பழந்தமிழ் நாட்டில் ஆரியச்சடங்கு கோயிலில் புகுந்து தொல்லை தரவில்லை என்பதை விளக்க,

தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை

(மாங்கனி : 1.வஞ்சியில் விழா7:2)

என்கிறார்.

ஆரியர்கள் தன்மையை அழகாகப் படம் பிடித்து,

ஆரியம்தம் மனம்போலும் காடு; தீப்பாய்

அவர்கள்குண நலம்போலும் கோடு

(மாங்கனி : 29.விலைக்குச் சிலை 1:1-2)

என்கிறார்.

சூழ்ச்சியிலே ஆரியர்க்கு முன்பி றந்தோன்

சூதுநிறை மனங்கொண்டோன் தளிவேல்!

(மாங்கனி : 33. கொடுத்ததை எடுத்துப் போனான் 1 :1-2)

 

என்றும் ஆரியர் பண்பினை எடுத்துக்காட்டுகிறார்.

 

மேன்மை மிகு மோகூர்

காப்பியங்குளுக்குரிய சிறப்புகளில் ஒன்று நகர் விளக்கம்(வண்ணனை). மோகூர் நகரம் வெயில் வாட்டாமல், மழைமுகில் மூடி, அதனால் மயில்கள் ஆட, இணைபிரியாமல் காதலர்கள் இன்பமாய் இருக்கும் வண்ணம் கதகப்பாய் இருக்கிறது என்கிறார். இதனை,

 

அழகுநகர்; இருபுறத்து ஏரி கொண்டு

அணிமணியாய்த் தென்னைமரம் சிலிர்த்து நிற்க

மழைமுகில்கள் வான்மூட, வெய்யி லின்றி

மந்தாரம் போட்டது போல், சிலுசி லுப்பில்

சூழைமயில்கள் சுவரேறிக் கோட்டை சுற்றிக்

கூத்தாடக் காதலர்கள் நெருங்கிச் சேர்ந்து

இழையளவும் விலகாமல் கதப்புக் காண

இன்பமயமா யிருக்கும் பழையன் மோகூர்!

(மாங்கனி : 16. எங்கே பகைவர் 1:1-8)

என விளக்குகிறார்.

குறுநிலந்தான்! ஆனாலும் வேண்டு மட்டும்

கொடைகொடுக்கும் கையார்கள் மலிந்த பூமி

சிறுஇடந்தான் என்றாலும் ஏழை யென்னும்

திண்டாட்டக் கூட்டமில்லாச் செல்வ பூமி

(மாங்கனி : 16. எங்கே பகைவர்? 2:1-4)

 

எனக் கூறிக், கொடையுள்ளம் கொண்டோர் வாழும், ஏழமையில்லாச் செல்வபூமி மோகூர் என்கிறார் கவிஞர்.

(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை)

mangani-attai02

(சுவைக்கும்)