மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி)
- ? 28. சிலர் தனது அறியாமையால் சனாதன தருமம் பிரிவினையை, தீண்டாமையை போதிக்கிறது என்று கூறுகிறார்கள், ஒருபோதும் அப்படி இல்லை. – என்கிறாரே ஆளுநர் இரவி.
உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.
பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம்.
“ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என் செய்வது? “சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அஃது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது” (மனு 8.416.) என்கிறது சனாதனம். எனவே, “பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” (மனு 8. 417) என்கிறது சனாதனம். பிராமணன் இருந்துண்டு உண்பானாம். சூத்திரன் எனப்படுவோன் உழைத்துண்டு உண்ணக்கூடாதாம். இதுதான் சனாதனம்.
தான் உழைப்பதிலிருந்து பெறும் ஊதியத்தைக்கூடப் பயன்படுத்த உரிமையில்லை எனப் பிரிவினையையும் தீண்டாமையையும் காட்டும் சனாதனத்தைத்தான் மெத்த படித்தவர்கள் எனப்படுபவர்களும் உயர்த்திக் கூறுகிறார்கள்.
வெளிப்படையாகச் சனாதனம் கூறும் பாகுபாட்டை இல்லை என்பவர்களை நாம் எந்த வகையில் சேர்ப்பது?
இவ்வாறு மிகுதியான பாகுபடுத்தும், இழிவு படுத்தும் கருத்துகளைப் பார்க்கலாம். மேலும் சிலவற்றையும் பார்ப்போம். பின்வரும் சனாதனக் கருத்துகளைப் படிப்பவர்கள் யாரும் அதில் பாகுபாடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.
நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். ‘’நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் ஊரிலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (மனு 4 : 61).
மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (மனு 8 : 21)
நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (மனு 8 : 22).
அன்றாடப் பின்பற்றலை மேற்கொள்ளாத பிராமணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (மனு 8 : 417)
வருணமற்றவர் – நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர்- என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (மனு 10 : 47 – 49)
இவர்கள் வாழும் இடமாக ‘’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’’ (மனு 10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.
‘சண்டாளர்களின்’ இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ஊருக்கு வெளியில் சண்டாளனும், சுவபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது. (மனு 10 : 52)
இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (மனு 10 : 52).
இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார் மனு. ‘’ பிராமணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’’ (மனு 10 : 62). என்கிறார்.
(தொடரும்)
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.52-54
Leave a Reply