முதலமைச்சர் மாநாடும் இந்தி மொழியும் – கூட்டரசன்
மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிந்துவிட்டது. இந்தியையும் ஆங்கிலத்தையும் இந்தியக் கூட்டரசின் அலுவலர் தேர்வு மொழிகளாக ஆக்குவதெனவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் ஏனையோரும் ஒத்த நிலையில் மதிப்பெண்கள் பெறுவதற்கு வழியொன்று வகுக்கப்படும் எனவும் அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் கூறுகின்றார். இதற்குத்தாமே பொறுப்பாளி என்றும் நம் முதலமைச்சர் அறிவிக்கின்றார். இந்தியைத்தாய் மொழியாகக் கொண்டோர் இந்தியில் எழுதுவதில் எளிமையும் ஆற்றலும் கொள்வர். ஆங்கிலத்தில் எவ்வளவுதான் புலமை பெற்றிருப்பினும் ஆங்கிலம் அயல் மொழிதானே, அயல்மொழியைப் பயன்படுத்துவதில் அவ்வளவு எளிமையும் ஆற்றலும் கொள்ள இயலாது. இருவகை விடைத்தாட்களையும் திருத்துவோர் வெவ்வேறு ஆட்களாகத்தான் இருப்பர். இந்திமொழியாளர் இந்தி விடைத்தாட்களைத் திருத்துவர். இருசாரரையும் ஒரே படியாக மதிப்பெண்கள் அளிக்குமாறு செய்தல் எங்ஙனம் இயலும் என்பதை அறியோம். வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதுவோர்க்கு கொஞ்ச % மதிப்பெண்களைக் கூட்டிப் போடச் சொல்லலாம். அங்ஙனம் செய்வதற்கு இந்தி மொழியாளர் ஒருப்படமாட்டார். அங்ஙனம் அவர்கள் ஒத்துக் கொண்டாலும், அரசு மொழியாம் இந்தியில் தேர்வு எழுதியோர் சிறந்தோர் எனவும் அயல் மொழியாம் ஆங்கிலத்தில் எழுதியோர் தாழ்ந்தோர் எனவும் எண்ணும் உளப்பாங்கு நாளடைவில் தோன்றி, இந்தியறியாதார் இரண்டாம் நிலைக்குடி மக்களாகவே கருதப்படுவர் என்பதில் ஐயமில்லை. இவை பற்றியெல்லாம் கூட நாம் கவலைப்படவில்லை.
கூட்டரசு நாடுகளில் வழங்கும் தேசிய மொழிகளிடையே சமத்துவம் வேண்டாமா? ஒரு மொழிக்கு மட்டும் முதன்மை கொடுப்பதைத்தான் முதன்மையாக எதிர்க்க வேண்டியுள்ளது. தலைவரின் ஒற்றை வாக்கின்மூலம் அதனை அரசு மொழியாக ஆக்கிக் கொண்டு ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணிப்பது கொடுமையிலும் கொடுமையன்றோ! ஏனைய மொழியாளர் பொறுத்திருப்பினும் இந்திய மொழிகளின் தாய் மொழியெனக் கருதத்தகும் தமிழ் மொழியாளர் எங்ஙனம் பொறுத்தல் கூடும்?
இந்தி முதன்மையால் தமிழின் மானமும் மதிப்பும் உரிமையும் பாழ்படப்போகின்றன. இதனைத் தெள்ளத் தெளியப் பலர் பல முறைகளில் எடுத்துக்காட்டியுள்ளனர். அங்ஙனமிருந்தும் ‘‘கடவுள் போன்று தமிழ் என்றும் அழியாது’’ என்று முதலமைச்சர் கூறுகின்றதை என் என்பது! அறியாதோரைத் தெளிவித்தல் இயலும்; அறிந்தும் அறியார் போன்று கூறுவோரை எங்ஙனம் தெளிவித்தல் இயலும்? விழித்திருந்தும் உறங்குவது போல் நடிப்போரை எழுப்ப முயன்ற கதையாகத்தான் முடியும்.
மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தி மொழி கட்டாயப் படுத்தப்படுகின்றது என்பதை யாரும் அறிவர். முதல் அமைச்சர் அவர்கள் கட்டாயப் படுத்தப்படவில்லை என்கின்றார்கள். சொல்லில் கட்டாயமில்லைதான். ஆனால், நடைமுறையில் கட்டாயப் படுத்துதல் உள்ளது. இந்தி மொழியை விரும்பாதார் படிப்பதற்கு மாற்று எத்தனைப் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றன? அவர்கள் புள்ளி விவரப்படியே 102 பள்ளிக்கூடங்களில்தான் (90 தெலுங்கு, 9 மலையாளம், 3 கன்னடம்) இவ்வசதியுள்ளதாம். இரண்டாயிரத்து மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் 100 பள்ளிக்கூடங்களில் மட்டிலும் மாற்றுப் பாடம் இருந்தால் போதுமா? ஏனைய பள்ளிக்கூடங்களில் இந்தியைப் படித்துத்தானே ஆகவேண்டியுள்ளது. அங்ஙனம் படிப்போரில் எத்துணைபேர் அதனைத் தொடர்ந்து படித்துப்பயன் பெறுகின்றனர்? கல்லூரியில் வந்ததன் பின்னர் அதனைத் தொடர்ந்து படிப்போர் விரல் விட்டு எண்ணக் கூடியவராகவே இருப்பர். இந்தியை விரும்புவோர் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டியதுதான். விரும்பாதோரை எதற்கு வற்புறுத்திப் படிக்கச் செய்தல் வேண்டும்? இதனால் ஏற்படும் பொருட்செலவு எவ்வளவு?
உலகத் தொடர்பிற்கும் அறிவியல் பெருக்கத்திற்கும் எல்லாரும் ஆங்கிலம் கற்கின்றனர். அவ்வாங்கிலத்தைக் கொண்டே மாநிலங்களுக்கிடையே தொடர்பு கொண்டால் என்ன? ஆங்கிலம் அயல் மொழி என்றால், இந்தியும் இந்தி மொழியினர் அல்லாதார்க்கு அயல் மொழிதானே!
தமிழ் மொழியாளர் இந்தியும் ஆங்கிலமும் கற்குமாறு வற்புறுத்தப்படுகின்றார். இந்தி மொழியாளர் ஆங்கிலமும், தமிழும் கற்குமாறு வற்புறுத்தப்பட்டிலரே? அவ்வற்புறுத்தலால் பயனும் இல்லையே. பயன் அற்ற ஒன்றை வற்புறுத்தும் திட்டத்தைக் கைவிடுதலே நன்று.
ஒவ்வொருவருக்கும் அவரவர் மாநில மொழியும் ஆங்கில மொழியும் எனும் இரு மொழித் திட்டமே யாவருக்கும் ஏற்றதாகும்; பயன் விளைவிப்பதாகும். வேற்று மொழிகளைக் கற்க விரும்புவோர்க்குக் கல்லூரி நிலையில் வசதி செய்து கொடுத்தால் போதுமானது.
மாணவர்கள் இளமையில் தாய் மொழியை நன்கு கற்றுக் கொள்ளாத நிலையில் அயல்மொழிகள் இரண்டினைக் கற்குமாறு செய்தல் கொடுமையினும் கொடுமையாகும். வேண்டாத மொழிகளைக் கற்குமாறு மறைமுகமாக வற்புறுத்துதல் உலகில் வேறு எங்கும் நிகழாத வன்முறைச் செயலாகும்.
கூட்டரசு என்று கூறிக்கொண்டு அதன் பல மொழிகளுள் ஒன்றனுக்கே முதன்மையளித்து விரும்பினால் படிக்கலாம் என்று விளம்பரப் படுத்திக் கட்டாயமாக்கிக் கொண்டு, முதலில் தேர்வு வேண்டாமென்று கூறிவிட்டுப் பின்னர் தேர்வில் உட்கார்ந்தால் போதும் என்று வேண்டி, பின்னர்த் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் வெற்றிக்குத் துணை செய்யும் என்று விருப்பினைத் தோற்றுவிக்க முயன்று, படிப்படியாக இந்தி வன்முறையில் விரும்பாதார் மீது சுமத்தப்படுகின்றது. இன்னும் கூட்டரசு அலுவலர் தேர்வு மொழியாகவும் ஆக்கிவிட்டால், பல்கலைக்கழகப்பாட மொழியாகவும் வந்து விடும். திரு சக்ளா கூறியதுபோல் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி அமர்ந்து இனிதே தனி அரசோச்சும் என்பதில் ஐயமின்று. தமிழின் நிலை என்ன? ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைய வேண்டியதுதானா? தமிழ்ப் பெருமக்களே! இந்நிலையை எண்ணிப் பாருங்கள். வளமாகப் பொருளை ஈட்டிவயிறு நிறைத்து மாடமாளிகைகளில் வாழ்ந்தால் போதுமா? தேமதரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்யாது போயினும் தமிழ் நாட்டிலேனும் தனக்குரிய இடத்தைத் தமிழ் அடையுமாறு செய்தல் வேண்டாமா?
இந்தியக் கூட்டரசு வன்மையுற்று நிலைத்து அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமானால்,
1. கூட்டரசு மொழிகள் அனைத்தையும் அரசு மொழிகளாக ஏற்றல் வேண்டும்.
2. கூட்டரசு அலுவலர் தேர்வு மொழியாக அவரவர் மொழிகளே அமைதல் வேண்டும்.
3. விரும்புவோர்க்கு வேற்று மொழிகளைக் கற்கும் வசதி செய்து தரல் வேண்டும்.
4. எந்நிலையிலும், மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, விரும்பாத மொழிகளைக் கற்றலை வற்புறுத்துதல் கூடாது.
5. இன்றுள்ள சூழ்நிலையில் ஆங்கிலத்தையே உலகத்தொடர்பு மொழியாகவும் மாநிலத் தொடர்பு மொழியாகவும் கொள்ளுதல் வேண்டும். இவ்வைந்துமே இந்நாட்டில் நல் அமைதியையும் ஒற்றுமையையும் உண்டாக்கும் ஐந்து ஒழுக்கக் (பஞ்சசீலக்) கொள்கைகளாகும்.
– குறள்நெறி : பங்குனி 19, தி.பி.1995 / ஏப்பிரல் 1, 1964
Leave a Reply