மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே!
உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும். சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் பேசும் மொழியாகவும் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டுப்புற இலக்கிய வடிவங்களையும் கொண்டு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவங்கள் அமையப் பெற்று தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இலக்கண வடிவம் பெற்று எண்ணற்ற இலக்கியங்களைக் கொண்ட மொழி தமிழ் மொழியாகும்.
தமிழ் நாடு என்பது இன்று நாம் காண்பது போல் இல்லாது தெற்கே பல்லாயிரம் கற்கள் (மைல்) தூரம் பரவியிருந்ததும் அந்நிலப்பகுதியில் பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கமும் இருந்தன என்பதும் வரலாற்று உண்மையாகும். அப்பகுதி உலகின் மாந்த இனம் தோன்றிய இலெமுரியாக் கண்டமாகும். அந்த நிலத்தில் வழக்கில் கொள்ளப்பட்ட மொழி தமிழ் என்பதும் அங்கு தமிழ்ப் புலவர்கள் பலர் சங்கம் வைத்து மொழி வளர்த்தனர் என்பதும் நமக்குக் கிடைக்கின்ற ஆய்வுச் சான்றுகளாகும். எனினும் தமிழ் மொழியும் கால ஓட்டத்தில் உலகின் பிற மொழிகளுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்கும் புணர்ச்சிகளுக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனால் பிற மொழிகளைப் போல குறுகியோ அழிவு நிலையையோ எட்டவில்லை. அதன் கரணியம் அம்மொழியின் இயற்கைக் கூறுகளேயாகும். அறநெறிக் கொள்கைகளையும் அறிவியல் சிந்தனைகளையும் மருத்துவம் வானவியல் அறிவையும் கொண்ட ஒரு மொழி இந்தியத் துணைக்கண்டத்தில்மறையாது மங்காது வாழ்ந்து வழங்கி வருவது எண்ணி இந்தியக் குடிமக்கள் எந்த மாநிலத்தவராயினும் பெருமை கொள்ளவேண்டும். ஆனால் தமிழ் மொழியின் இந்த மேன்மையும் தமிழ் மக்களின் அறிவுக் கூர்மையும் பிற மாநில (குறிப்பாக வட இந்திய மாநில) மக்களிடையே வெறுப்புணர்வையும் பொறாமை உணர்வையும் தூண்டியிருக்கின்றன. அதற்குக் காரணம் இந்திய வரலாறு என்பது வடக்கிருந்து தொடங்குவதாகவும் இந்தியப் பண்பாடு என்பது வேதகால ஆரியப் பண்பாடு எனவும் சமசுகிருதம் தான் முதன்மொழி எனவும் பல வரலாற்றுத் திரிபுகள் தொடர்ந்து நிலைப்படுத்தப் பட்டுள்ளமையே ஆகும். இந்த வரலாற்றுச் சிதைவு தொல்காப்பியர் காலம் முதலே தொடங்கப் பெற்றதாகும். ஒரு மொழியைச் சிறுகச்சிறுக சிதைப்பதின் மூலம் அம் மொழிப் பேசும் மக்களிடையே பண்பாட்டு ஊடுருவலையும் எளிதாகச் செய்து விட முடியும் என்ற உள்நோக்கமும் ஆகும். அன்றுமுதல் இன்று வரை ஒரு கலப்பு மொழியை உருவாக்குவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இதன் விளைவாகவே இன்று தமிழ் நாட்டில் எண்ணற்ற வடமொழிச் சொற்கள் கலக்கப் பட்டு, தாம் பேசுவது தமிழ் மொழி அல்ல என்று அறியாத வண்ணம் தமிழ் மக்கள் பலர் வடமொழிக் கலந்த சொற்களை அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்தி வருகின்றனர். அன்புக்குப் பதில் பிரியம், அமைதிக்குப் பதில் சாந்தம், நட்புக்குப் பதில் சிநேகம், பகைக்குப் பதில் விரோதம், அறிவுக்குப் பதில் புத்தி, நாணத்திற்குப் பதில் சங்கோசம், நல்வாய்ப்புக்குப் பதில் அதிர்ட்டம், இழப்புக்குப் பதில் நட்டம், விருப்பத்திற்குப் பதில் இட்டம், முழக்கத்திற்குப் பதில் கோசம், நினைவுக்குப் பதில் ஞாபகம், கனவுக்குப் பதில் சொப்பனம், மகிழ்ச்சிக்குப் பதில் சந்தோசம், வணக்கத்திற்குப் பதில் நமசுகாரம் என்பவை சில சான்றுகளாகும்.
பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழில் மணிப்பிரவாள நடை என ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழையும் சமசுகிருதத்தையும் சேர்த்து எழுதுவது என ஒரு புதிய உத்தியும் கையாளப் பட்டது. இதன் மூலம் தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி அல்ல என்று மறைவாக ஓதப்பெற்றது. தொடர்ந்து வந்த மொகாலாய அரசுகள், விசய நகரப் பேரரசு, ஆங்கிலேயர்கள் எனப் பல நூற்றாண்டுகளாகப் பிற மொழிகள் தமிழில் ஊடுருவின. இதன் விளைவாகத் தமிழ் மண்ணில் ஒற்றுமைக் கேடு, பண்பாட்டுப் படையெடுப்புகள், மொழி இழிபு, ஊர்ப்பெயர்கள் மாற்றம், வருணசாதி உருவாக்கம், பல கடவுளர்கள், மதப்பூசல்கள் எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. குடமூக்கு கும்பகோணமாகவும், சிற்றம்பலம் சிதம்பரமாகவும், முதுகுன்றம் விருதாச்சலமாகவும், மறைக்காடு வேதாரண்யமாகவும், மயிலாடுதுறை மாயூரமாகவும், வினைதீர்த்தான் கோயில் வைத்தீசுவரன் கோயிலாகவும் மாற்றம் பெற்றன. தமிழ்ப் புலவன் பாரதி கூட வேற்றுமொழிச் சொற்களை வெகுவாகக் கையாண்டார். அந்த அளவுக்கு மொழி இன பண்பாட்டுக் கலப்பு தமிழ் மண்ணில் ஆழ வேறூன்றியது.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த கிறித்துவப் பேராயர்களில் ஒருவரான கால்டுவெல் திராவிட மொழிகளை ஆய்ந்து தமிழ் மொழியின் தனித்தியங்கும் தன்மையையும் அதற்கும் வட இந்திய மொழிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் தன் ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தினார். பின்னர் மொழிச் சிதைவிலிருந்து மொழியைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழறிஞர்களிடையே தோன்றியது. 1916 ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அதை முன்னெடுத்துச் சென்றவர் மறைமலை அடிகள் ஆவார். அவரைத் தொடர்ந்து தேவநேயப் பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், இராச மாணிக்கனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எனப் பலரும் தனித்தமிழ் இயக்கம் வெற்றி பெற உழைத்தனர்.
மொழித்தூய்மை என்பது மொழிச் சிதைவிலிருந்து மொழியைக் காத்தல் என்னும் தலையாய நோக்கம் கொண்டது. ஆனால் அது இன்று ஏதோ தமிழன் என்றால் மொழி வெறியன் என்று பார்க்கப்படுகிறது. எந்த ஒரு மொழியும் பிற மொழிகளின் மேலாண்மைக்கும் வன்புணர்ச்சிக்கும் உள்ளாகாதவாறு இருக்கும் வரையில் தான் அம் மொழியின் தூய்மையும் கருப்பொருளும் காப்பாற்றப்படும்; நெறிகள் போற்றப்படும். ஆனால் இன்று அரசியல் காரணங்களுக்காகவும் தமிழின் மேன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதாலும் பல முனைகளிலிருந்து வட மொழிகள் குறிப்பாக சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் வலிந்து புகுத்தப் படுகின்றன. தமிழ் தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று சொற்பெருக்கத்தைக் காலத்திற்குத் தகுந்தவாறு ஏற்படுத்திக் கொண்டாலும் சொந்த மொழியில் பேசுவதற்குத் தயக்கம் காட்டும் தமிழர்கள் பெருமளவில் வளர்ந்து வருகின்றனர். தமிழர்களிடம் சோற்றுக்குப் பஞ்சம் வரலாம் ஆனால் சொற்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதை உணராது மொழியின் ஊடே பண்பாட்டுக் கலப்புக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். சொந்த மொழியில் சொல்லிருந்தும் சோம்பேறித்தனத்தினால் பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்குகிறார்கள். இது தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் கேடு விளைவிப்பதாகும் என்பதை உணர வேண்டும்.
தனித் தமிழ் இயக்கம் கண்டு நூறாண்டுகள் கடந்த நிலையிலும் மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லை என்ற ஏக்கத்துடனும் தமிழினம் தன் மொழி நெறிக் கொள்கையில் வளர வேண்டும் என்ற நோக்கத்துடனும் சில செய்திகளைத் தமிழ் கூறும் நல்லுலகுடன் பகிர்ந்து கொண்டோம். அறநெறி நூற்கள் அமைவுறப்பெற்ற அருந்தமிழ் மக்கள் வாழ்வு செறிவுற செழிப்புற வேண்டும் என்பதே எம் அவா.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு திருவள்ளுவர், திருக்குறள் .1
கனிவுடன் சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்.
Leave a Reply