(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி)

தலைப்பு-வஞ்சினமாலை, இராம.கி. -thalaippu_vanjinamaalai முத்திரை-வளவு :muthirai_valavu

3/3

 அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும்.

  1. ……………………………………………………………….   இணையாய

  மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று

  வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள்

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19)

 

  புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று பயந்து தன் பிள்ளையையும் கிணற்றுள் வீழ்த்தித் தானும் பாய்ந்து பிள்ளைகளைக் காப்பாற்றியது இங்குசொல்லப்படுகிறது. தன்பிள்ளையை அவள் ஏன் வீழ்த்தினாள்? – என்பது வாதத்திற்குரியது. ஆனால் கற்பு நெறியில் அவள் தவறவில்லை. மாற்றாள்பிள்ளையைத் தன்பிள்ளைபோலவே பார்த்துக்கொண்டதாய் ஊர்மெச்சும். கணவனுங் கொள்வானன்றோ? வீழ்த்தேற்று என்னும் அடியில் எதுகைச்சிக்கலுள்ளது. பாட்டின் இவ்வடியிலும் செல்லரிப்பு நடந்திருக்கலாம். அடுத்தகதை நம்மில் ஒரு பகுதியினரிடம் இன்றைக்கும் பழக்கத்திலுள்ள கருத்துதான்.

  1. ……………………………………………………………….. – வேற்றொருவன்

  நீள்நோக்கங் கண்டு நிறைமதி வான்முகத்தைத்

  தானோர் குரக்குமுகம் ஆகென்று – போன

  கொழுநன் வரவே குரக்குமுகம் நீத்த

  பழுமணி யல்குற்பூம் பாவை ………………..

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 19-23)

  வருமானந்தேடிக் கொழுநன் வெளிதேசம் போக, கணவனல்லான் நீள்நோக்கில் தன்னைப் பார்த்ததுகண்டு துணுக்குற்று, தன்னைப்பேணும்படி தன்முகத்தை குரக்குமுகமாக்கித் திருத்தியெழுதி மூடி, கொழுநன் வந்தபின் குரக்குமுகம் நீத்த பெண்பற்றிய கதையிதுவாகும். இற்றை முசுலீம்பெண்கள் ”முகத்திரை” போடும் சூழ்க்குமம் இக்கதையின் இன்னொரு வெளிப்பாடாகும். இது சரியா, தவறா என்பதைவிட, இச்சிந்தனை அரபுத்தேசத்தில் மட்டுமின்றி, 2000 ஆண்டுகள்முன் நம்மூரிலுமிருந்தது என்பதே சரியாகவிருக்கும்.. இதுவும் கற்பின் வெளிப்பாடுதான். கடைசிக்கதை இரு தோழியரிடையே நடந்ததைச் சொல்வது.

  1. …………………………………………………………………..- விழுமிய.

  பெண்ணறிவு என்பது பேதைமைத்தே யென்றுரைத்த

  நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே – எண்ணிலேன்

  வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்,

  ஒண்டொடி நீயோர் மகன்பெறிற் – கொண்ட

  கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்

  கெழுமி அவளுரைப்பக் கேட்ட – விழுமத்தால்

  சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்

  தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் – முந்தையோர்

  கோடிக் கலிங்க முடுத்துக் குழல்கட்டி

  நீடித் தலையை வணங்கித் –   (———-        

????       ———-)

தலைசுமந்த

  ஆடகப் பூம்பாவை அவள்போல்வார் ……….

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 23-34)

   பொதுவாக 5-7 வயதில் தொடங்கும் பேதைமை விட்டகுறை, மிச்சகுறை போல மங்கைப்பருவம் வரைகூடத் தொடரலாம். இக்கதை அதைப்பற்றியாகும். மேலோர்கருத்தை நோக்காது வண்டல்மண்விளையாட்டில் பங்கெடுக்கும் தோழியர் இருவர், “எனக்கு மகள்பிறந்து உனக்கு மகன்பிறந்தால், கொள்வினை கொடுப்பினை செய்துகொள்வோம்” என விளையாட்டாய்ச் சொல்ல, மகனைப்பெற்றவள் அதை உண்மையென நம்பி, தன்பிள்ளை பெரியவனாகையில் தோழியிடம் பெண்கேட்க, பெண்ணின் பெற்றோர் அதுபற்றித் தங்களுக்குள் கவலையோடு உரையாடிக்கொள்ள, பேச்சைக்கேட்ட இளம்பெண் தாய்சொல்லைக் காப்பாற்றுவாளாய் கோடியுடுத்திக் குழல்முடித்துத் தலைவணங்கித் தாயின் தோழிமகனையே தன்கணவனாய்க் கொண்டு தலைசுமக்கும் உறுதி பூணுகிறாள். பேதைமையானாலும், சொன்ன சொல் காப்பாற்றப்படுகிறது.

  இப்படி 7 பேர் கற்பின் வெவ்வேறு படிநிலைகளை வெளிப்படுத்துவர். ஒன்றிற்கூட உடலுறவு பற்றிய பார்வை கிடையாது பாருங்கள். கற்பென்பது தமிழர் புரிதலின் படி ஒருவகையில் நல்லொழுக்கம்மட்டுமே. 7 மாதர் கருத்து தமிழர்வாழ்வில் ஐயனார்கோயில் வழிபாட்டில் இன்றுமுண்டு. ஐயனார்கோயில் அற்றுவிகஞ் சார்ந்ததென்பார் பேரா. க.நெடுஞ்செழியன். அவர்கூற்று பெரிதும் ஆயவேண்டிய ஒன்று. அதில் பலவுண்மைகள் பொருந்தியுள்ளன. (7 மாதரை பிராமி, மகேசுவரி, கௌமாரி, விண்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி என்றுகொண்டு புராணக்கதைசொல்வது வேறுவகை முயற்சி.)

  ………………………………………………………… – நீடிய

  மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்

  (———-           ????       ———-)

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 34-35)

  இத்தகைய மங்கையர் பிறந்த பதியில் நானும் பிறந்தேன். இவர்களில் எவருக்கும் நான் குறைந்தவளில்லை என்று கண்ணகி பெருமிதங் கொள்கிறாள். இங்கும் பாட்டில் ஓரடி குறைகிறது. இந்த 7 பேர் செய்தி பட்டினத்துப் பிள்ளையார் புராணத்தின் பூம்புகார்ச் சருக்கத்திலும் வருகிறது.

கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான்

திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்

வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்

புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்

பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையைநுன் கேள்வனெனும்

கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள்

பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி

ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று

மேவினாள் குரக்குமுகம் வீடுடையாள் வரவிடுத்தாள்

பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

முற்றாத முலையிருவர் முத்துவண்டல் அயர்விடத்துப்

பெற்றற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்

சொற்றார்கள் பிறந்தபெண் நாயகனைத் தலைசுமந்தாள்

பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

பெருமிதங்கொண்ட கண்ணகி அடுத்துச் சூளுரைக்கத் தொடங்குகிறாள்.

  பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்

  (———-           ????       ———-)

  ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்

  பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா ……………..

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 36- 38)

  அப்பதியில் பட்ட யானும் ஓர் பத்தினியென்றால் “இனி ஒருப்படமாட்டேன்; மதுரையை ஒழிப்பேன். என் பட்டிமையை நீ காண்பாய்” என்று கோப்பெருந்தேவி நோக்கிச் சூளுரைக்கிறாள். அரசி இறந்ததை கண்ணகி முதலில் உணரவில்லை. பின் உணர்ந்திருக்கவேண்டும். சூளுரைப்பின் பின்னால், அரண்மனையை விட்டுத் தெருவுக்கு வந்திருக்கவேண்டுமென ஊகிக்கிறோம். வெளியே மக்கள்கூட்டம் குமிந்திருக்கவேண்டும். .

…………………………………………………………….- விட்டகலா

  நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்

  (———-           ????       ———-)

  வானக் கடவுளரு மாதவருங் கேட்டீமின்

(———-           ????       ———-)

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 38-40)

  கூடிய கூட்டத்தைப் பார்த்துச் சொல்லுகிறாள். திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்மாடக் கூடல். தேவாரத்தில் வரும் சில நள்ளாற்றுப் பதிகங்கள் மதுரைப் பகுதியைக் குறிக்கின்றன. காரைக்காலுக்கு அருகிலுள்ள நள்ளாற்றையல்ல. நடுவூர் = downtown. வானக்கடவுளர் = தேவர். அற்றுவிகம், சமணம், புத்தம் போன்ற வேதமறுப்பு நெறியினருக்கும் தேவகணம் ஏற்புடையதுதான். இங்கும் பாட்டில் ஈரடிகள் தொலைந்து போயிருக்கின்றன.. 

  யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த

  கோநகர் சீறினேன் குற்றமிலேன் – யானென்(று)

  இடமுலை கையால் திருகி மதுரை

   (———-           ????       ———-)

  வலமுறை மும்முறை வாரா – வலமந்து

   (———-           ????       ———-)

   மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து

  விட்டாள் எறிந்தாள் விளங்கிளையாள் – ……………

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 41-46)

 பேச்சு மக்களுக்கு அறிவிப்பதாய்த் தொடர்கிறது. “என்காதலனுக்குத் தவறிழைத்த கோநகர்மேல் சீறினேன். ஆனாலும் குற்றமிலேன்.” என்று சொல்கிறாள். தன் இடமுலையை வலக்கையால் திருகியெடுத்து அதைக் கையிலேந்தி 3 முறை மதுரைக்கோட்டையை வலம்வந்து மட்டார் மறுகில் (இதுவென்ன மறுகென்று தெரியவில்லை.) அரத்தம் சிந்தும் மணிமுலையைச் சுழற்றி விட்டெறிகிறாள். நேரம் மாலை ஏழு, ஏழரையாகலாம். வேனிற்காலத்தில் சற்று நேரங்கழித்தே முற்றுமுழுதாக இருள்சேரும். (இங்கேயும் பாட்டில் ஈரடிகளைக் காணோம். எனவே நம் விளக்கம் குறைப்படுகிறது. ஒரு பெண்ணால் வலக்கை கொண்டு இடமுலையைத் திருகியெடுக்க முடியுமா? – என்பது உடலியலின்படி பெருங்கேள்வி. எப்படி இது நடந்ததென யாருக்கும் விளங்கவில்லை. நமக்குக் கிடைத்த அடிகள் சரியானபொருள் தருவதில்லை. ஏதோவொரு கற்பனையில் நாம் சொல்கிறோம்.) அடுத்துவரும் பாட்டில் 6 அடிகள் செல்லரித்துள்ளன. காட்சி நாடகத்தனமாய் இருந்தாலும் எதெல்லாம் இடைச்செருகலென்று சொல்லமுடியாதுள்ளோம். பொருள்சொல்கையில் குத்துமதிப்பாகவே சொல்லவேண்டியிருக்கிறது..

  …………………………………………………………….- வட்டித்த

  நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்

  (———-           ????       ———-)

  பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் – கோலத்து

  (———-           ????       ———-)

  மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி

   (———-           ????       ———-)

   மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்

  (———-           ????       ———-)

  பாயெரி யிந்தப் பதியூட்டப் பண்டேயோர்

  (———-           ????       ———-)

   ஏவ லுடையேனா கியார்பிழைப்பா ரீங்கென்னப்

  (———-           ????       ———-)

 

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 46-52)

  வானத்தில் நீலநிறம் கூடிப்போனது. ஆயினும் செக்கர் வானக்கீற்றுகள் அங்கங்கே இடைகாட்டுகின்றன.. அந்நேரத்தில் வெள்ளைப் பல்கொண்ட பால்நிறத்து பார்ப்பனன் போல் (பார்ப்பனன் = வெள்ளை நிறத்தவன்.) அக்கினியான் தோன்றி, “பத்தினியே! பிழைநடக்கும் நாளொன்று வரும். அப்போது இந்நகரை எரியூட்டவேண்டும் என முன்னே எனக்கோர் கட்டளையுண்டு. இதில் யார்பிழைக்கவேண்டுமெனச் சொல்” என்கிறான். இனிக் கடைக்காட்சி. இங்கும் பாட்டில் ஓரடியைக் காணோம். எதெது இடைச்செருகலெனச் சொல்லமுடியவில்லை. பார்ப்பாரையும், பசுவையும் விட்டுவிடு என்பது சங்ககாலத்தில் நடந்திருக்குமா? தெரியவில்லை..

  பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

   (———-           ????       ———-)

  மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

  தீத்திறத்தோர் பக்கமே சேர்கென்று – காய்த்திய

  பொற்றொடி யேவப் புகையழல் மண்டிற்றே

  நற்றேரான் கூடல் நகர்.

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 54-57)

 

  பசு என்பது காப்பற்றவேண்டிய விலங்கென சங்க இலக்கியஞ் சொல்லவில்லை. கி.பி. 400களுக்கப்புறம் புராணங்கள் எழுந்தபோது அந்தச்சிந்தனை வந்தது. ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் பெரும்பாலும் இங்கு இடைச்செருகலுண்டு. எப்படி இத்தனைபேரை விட்டு மற்றவரை மட்டும் நெருப்பு சூழமுடியும் என்பதும் பகுத்தறிவிற்குப் புறம்பாகவே தெரிகிறது. நன்றாகத் தேராதவனின் கூடல்நகரில் எரிசூழ்ந்து புகைமண்டிற்று.

இராம.கி.

transliteration_raamki22