(வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும் – தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம் : மனையும் மக்களும்.2

கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய

புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின்‘” என்பது அகப்பாடல்.

அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில்

ஆருயிர் போக்கத் துணிபவரார்?

இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை

இன்னகை யால்ஒளி,செய்பவரார்?

எல்லாம் பெண்கள் அன்றோ! அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன்றோ பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், “அம்மா ! பிச்சை”‘ என்றுதானே கேட்கின்றான். ஆதலின் இவ் வுலகில்,

மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா’’

என்று மகளிர் பெருமைகளைக் கவிமணி விளக்குவார். இல்லறத்தே புகுந்த நல்லார்க்கு விளக்கம் தருபவர் நன்மக்களே. பிள்ளை இல்லாத வீடு காடென்பர் நல்லறிஞர். பிள்ளைச் செல்வமே பெருஞ்செல்வம் என்பது வள்ளுவர் கருத்து. தம்பொருள் என்ப தம் மக்கள், என்றே கூறுவார். ஒருவன் பெறும் பேறுகளுள் நன்மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை யாம் மதிப்பதில்லை என்று உறுதி தோன்ற உரைத்தருளுவார்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த,

மக்கட்பே றல்ல பிற’’

என்பது வள்ளுவர் சொல்லமுதம், பிறரால் பழிக்கப்படாத பண்புடைய மக்களை ஒருவன் பெற்றால் அவனை எழுபிறப்பும் தீயன தீண்டாவாம். அம்மக்களது மெய்யைத் தீண்டுதல், பெற்றோர்க்கு இன்பம் தரும். அவரது மழலைமொழிகளைக் கேட்டல், செவிக்கு இன்பம் விளைக்கும். தம் மக்களுடைய மழலைச்சொல்லைக் கேளாத பெற்றோரே குழலிசையும் யாழிசையும் இனியன என்று இயம்புவர்.

பொருளறி வார வாயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை

என்பது புறப்பாடல். தம் மக்கள் இளங்கையால் அளாவப்பட்ட சோறு அமிழ்தினைக் காட்டிலும் இனிய சுவை உடையது.

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்”

என்பது வள்ளுவர் சொல்லமுதம். பாண்டியன் அறிவுடைநம்பி என்னும் அரசன் இன்பத்துறையில் எளியனாயிருந்தான். பிசிராந்தையார் என்னும் பெருக்தமிழ்ப் புலவரால் அவன் நெறிப்படுத்தப்பெற்றான். பல்லாண்டு மக்கட்பேறு இன்றி வருந்தி மயங்கினான். பின்னர் அதனைப் பெற்றுப் பேருவகை உற்றான். அவன், தன் பெயருக்கேற்ப நல்லறிவு நிறைந்த நம்பியராய்த் திகழ்ந்தானாதலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கும் காட்ட எண்ணினான். தனது இளஞ்சிறார்கள் செய்யும் இன்பச் சிறு தொழில்களைக் கண்டு மகிழ்ந்தான். அச் செல்வச் சிறுவர்கள் தம்முடைய சிறுகை நீட்டிக் குறுகுறு நடந்துவந்து, உண்ணும் உணவில் தம் இரு கைகளையும் இட்டும் தோண்டியும் கவ்வியும் துழாவியும், தம் உடலெங்கும் சிதறியும் இன்ப விளையாட்டு ஆடுதலைக் கண்டு அகமகிழ்ந்தான், அவர்கள் சிதறிய உணவை உண்ணுங்கால் உண்டாகும் இன்பம் பெரிதாதலை அறிந்தான். அவர்கள் மிழற்றும் மழலைச்சொல்லும், செய்யும் செயலும் கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் இன்பம் ஊட்டி அறிவை மயக்குதலின் உயிர் வாழ்வின் பயன் இதுவே என உயிர் அமைந்து போதலை உணர்ந்தான். இத்தகைய நலம் சான்ற மக்களைப் பெறாதார்க்கு உயிர் வாழ்வால் முடிக்கக் கூடிய பொருளே இல்லை என்று அறவுரை பகர்ந்தான். அவனது பொன்மொழியாக அமைந்த பாடலைக் கானுக:

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்

உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.”

மக்கட் பேற்றின் மாண்பினை விளக்கப்போந்த புகழேந்தியாரும், “

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்(று)

என்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில்

புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்ய வாய்

மக்களை இங் கில்லா தவர்

என்று பாடுவார். மக்களைப் பெறாதவர், மாநிலத்தில் மற்றைய எல்லாம் பெற்றிருப்பினும் பெற்றவராகார் என்று பேசுவர். கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும் மக்களின் பால்வாய்ச் சிறு குதலை கேளாக் செவி என்ன பயனுடைத்தாம் ? என்று கேட்டார் அப்புலவர். தந்தை, தன் மக்களைக் கல்வி அறிவால் சிறந்தவர் ஆக்குதல் வேண்டும். கற்றவர் நிறைந்த அவைக்கண் தலைவராய் வீற்றிருக்கும் தகுதி உடையராக்க வேண்டும். அதுவே தந்தை மக்கட்குச் செய்யும் நன்மையாகும் என்பர் வள்ளுவர்.

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற

என்றார் பிறரும். தந்தை, தன்னைக்காட்டிலும் மக்களை மிக்க அறிவினராக்குதல்வேண்டும். அச்செயல், தனக்கும் பிறர்க்கும் பேரின்பம் விளைப்பதாகும் என்று கூறுவர். அறிவால் நிறைந்தவராக ஆக்கினால்மட்டும் போதாது. நற்குணங்களால் நிறைந்த சான்றோர் ஆக்குதல் வேண்டும். அவர்களது சான்றாண்மையைக் கண்டு, அறிவுடையார் போற்றவேண்டும். அப் புகழ் மொழிகளக் கேட்டால் அம்மக்களைப் பெற்ற தாயர், ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பர் என்பார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்பது அவர் சொல்லமுதம்.

பொன் முடியார் என்ற பெண்புலவர், பலர் ஆற்றவேண்டிய கடமைகளை ஒரு பாட்டில் குறிப் பிட்டார்.

ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே.
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’’

என்று கூறி, மக்களைச் சான்றோர் ஆக்கும் பொறுப்பினைத் தந்தைக்குச் சுமத்தினார். இங்ஙனம் அறிவா னும் குணத்தானும் பெரியராக்கிய தந்தைக்கு, மக்களும் ஆற்றும் உதவி ஒன்று உண்டு. இத்தகைய சிறந்த மக்களைப் பெறுதற்கு இவரது தந்தையர் என்ன தவம் இயற்றினரோ ? என்று வியந்து போற் றும் புகழ்ச்சொல்லை விளக்கவேண்டும். இத்தகைய நன்மக்களே, பெற்ருேர்க்கு விளக்கம் தரும் பெற்றியர் ஆவர்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் நவநீத கிருட்டிணன்