தலைப்பு-வேலையில்லாத்திண்டாட்டம்-தி.வே.விசயலட்சுமி : thalaippu_velaiyillaa_thindaattam_thi.vea_visayalatshumi

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று

  நம் குமுகாயச் சூழலில் ஒரு நிறைவான வாழ்வு வாழ அனைவர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியை முறையாக, ஆழமாகப், பல அல்லல்கட்கிடையே (பெற்றோரை வருத்தி, அவர்கள் தேவையைக் குறைத்து) 4, 5 பட்டங்கள் பெற்றாலும், நாட்டில் வேலை கிடைப்பது எளிதான ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண்மணி தன் அணிகலன்களை விற்று, இருவேளை உணவை ஒரு வேளையாகக் குறைத்துத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். படிப்புக்கேற்ற வேலை மகனுக்குக் கிடைக்கவில்லை. என்னிடம் தன் பெரிய மகனை அனுப்பிவைத்தாள். பையன் மிகவும் ஆழ்ந்த அறிவும், சுறுசுறுப்பும், நல்ல ஆங்கில நடையில் பேசக்கூடிய திறமையும் பெற்றிருந்தான். கவர்ச்சியான தோற்றமும்கூட. அவன் பட்டங்களைப்பற்றி அறிந்தால் அயராதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களுக்கு மேல் 2, 3 இருக்கும். தந்தையோ இதய நோயாளி, தாயின் உழைப்பில் குடும்பம் ஓடுகிறது. உடன்பிறந்தவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். தம்பி பள்ளியில் படிக்கிறான். தமக்கை   கைத்தொழில்கள் செய்து ஓரளவு பொருள் ஈட்டுகிறாள். இந்நிலையில்  இவன் வெளிநாட்டிற்குச் சென்று படித்தோ, பொருள் ஈட்டவோ முடியாத நிலை, இன்னொரு தம்பியும் உயர்கல்வி படிக்கிறான். பையன் முகத்தில் கப்பிய சோகத்தைக் கண்டு கவிபாடலாம்போல் இருந்தது.  பொறியியல் பட்டம் பெற்றவன்; அலுவலகத்தில் எழுத்தராகவோ, கணினி அச்சாக்கம் செய்பவனாகவோ போக முடியவில்லை. இவன் உடன்பட்டாலும் அவர்கள் கொடுக்க மறுத்துவிடுகிறார்கள். தகுதிக்கேற்ற பணி கிடைக்கிற வரை, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்த்துவிட்டேன். வருமானம் குறைவுதான். இருப்பினும் தன்னம்பிக்கை அவனுக்கு இப்போது ஓரளவு வந்திருக்கிறது. இப்பணியும் இன்றேல் அவன் தன் உயிரை முடித்துக்கொள்ளத் தயாராக இருப்பதுபோல் தோன்றியது. அவ்விளைஞரின் தந்தையாரும் அந்த நிலையில் தான் இருந்தார். இப்போது அவ்வில்லத்தில் ஓரளவு மகிழ்ச்சி நிறைந்த முகத்தைப் பார்க்க இயல்கிறது.

  பொதுவாக மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை கிட்ட அடிப்படைத் தேவைகள் எவை? அவை உடுக்க உடை, இருக்க இடம். மின் வசதி, குடிநீர் வசதி என்பன தேவையுள் அடங்கும். இவ்வனைத்தும் ஏற்றவாறு இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்குக் கிடைத்துப் பலருக்குக் கிடைக்காமல் இருக்கும் நிலை மிகக் கொடியது. இந்நிலை ஏற்படக் காரணம் மக்களா? மன்பதையா? ‘ அரசா? – அரசே காரணமாகும்! மன்பதையில் வாழ்கின்ற மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது – கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அக்கடமையை நிறைவேற்ற ஒரு வழி, படித்தவர்கட்கு ஏற்ற பணியும், படிக்க இயலாத, பாமரனுக்கு ஏற்ற வேலை வாய்ப்பையும் தருதல். வாய்ப்பை அரசே உருவாக்கித் தரவேண்டும். வேலையின்மை சோம்பலில் உய்க்கும்; துயரத்தில் ஆழ்த்தும்; பிணிகள் வந்து சேரும். நாட்டில் உற்பத்திக் குறையும். படித்தவர்கள் சக்தி வீணாகும். உலகத் துன்பங்கள் எல்லாவற்றுள்ளும் மிகக் கொடுமையான துன்பம் வறுமையே.

கொடிது கொடிது வறுமை கொடிது” என்றார் ஔவையார்.

திருவள்ளுவரும்,

இன்மையின் இன்னாதது யாதெனில் இன்மையிற்

இன்மையே இன்னா தது.”   (குறள் 1041)

என்றும்

      “நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பியவன்

      யாதொன்றும் கண்பா டரிது. ”   (குறள் 1049)

என்றும் கூறியுள்ளார்.

      அவ்விளைஞனுக்கு மற்றைய தகவல் நிறுவனங்கள், வங்கிகள் இவற்றுக்கு விண்ணப்பித்துப் பார்க்க  வழிவகைகள் சொன்னேன். அவனும் தன்னால் இயன்றவரை முயன்று குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிச் சென்றுவிட்டான். இதுபோல் ஒன்றல்ல பல குடும்பங்கள் வாடி வதங்குகின்றன. இப்பேற்பட்ட சூழ்நிலையில் இந்நாளில்தான் மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பது இல்லை. அந்த நாளில் பலரும் கவலைப்பட்டிருக்கின்றனர்.

இலக்கியச் சான்று

  படிக்காசுப் புலவர் என்ற ஒருவர் கி-பி.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தொண்டை வள நாட்டுச் சான்றோருள் ஒருவர். தம் கவி வளத்தால் புவி மக்கள் போற்ற பல பரிசுகள் பெற்றவர். தொண்டை மண்டலச் சதகம், புள்ளிருக்கு வேலூர் கலம்பகம் முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

“படிக்காசன் உரைத்த தமிழ் வரைந்த  

ஏட்டைத் தொட்டாலும் கைமணக்கும்,

சொன்னாலும் வாய் மணக்கும்.

துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடும்

என மற்றொரு புலவர் ஒருவர் இவரைப் போற்றிப் பாடுகின்றார்.

  படிக்காசுப் புலவர் தாம் வாழும் ஊரில் தனக்குப் பணியில்லை என்று வருத்தப்பட்டிருக்கின்றார். ஊரில் பலர் பல மாதிரிப் பிழைப்பதைப் பார்க்கிறார். கழைக்கூத்தாடி? கூத்தாடிப் பிழைப்பதையும், செப்பிடு வித்தைக்காரன் பல வித்தைகள் செய்து பிழைப்பதையும் புலவர் காண்கிறார். உடலை விற்று உணவுண்ணும் பெண்களைப் பார்க்கின்றார். “தமிழைப் படித்து நான் கண்டதென்ன? எதற்கும் உதவவில்லையே!” எனக் கூறிப் பின்வரும் பாடலை வருந்திப் பாடுகின்றார்.

அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக் கல்வி

      அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில் லாமல்

திடமுளமோ கனம்ஆட கழைக் கூத்தாடச்

      செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை

உடலெழில் வேசையராகப் பிறந்தோ மில்லை

      சனியான தமிழைவிட்டுத் தைய னார்தம்

இடமிருநது தூதுசென்று பிழைத்தோ மில்லை

      என்னசென்மம் எடுத்துஉலகில் இரக்கின் றோமே.

அவருடையக் காலச் சூழ்நிலை இவ்வாறு அமைந்துள்ளது போலும்.

இந்தப்பாடல் இன்றைய இளைய சமுதாயத்தின் மனக்குமுறல், வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுவது போல் இருக்கின்றது.

தி.வே.விசயலட்சுமி