வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
13. களவு விலக்கல்
(களவு- திருட்டு)
- களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல்.
களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும்.
- வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை.
ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும்.
- களவினை யேவுதல் களவிற் குதவுதல்.
களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும்.
- தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை.
தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில் அதுவும் களவு ஆகும்.
- உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம்.
இந்த செயலுக்கான தண்டனை பொருளை இழந்தவர்களின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும்.
- களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன்.
களவு செய்பவர்களும் மற்றவர்களிடம் களவுத் தொழில் இழிவானது என்றே கூறுவர்.
- கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர்.
களவு செய்பவர்கள், தங்களுடைய களவினைத் தடுப்பவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.
- கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர்.
பொருளுக்கு உரிமையாளர்களால் களவு செய்பவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் ஏற்படலாம்.
- களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம்.
களவு பல பிறப்புகளுக்கு மிகுந்த வறுமையைக் கொடுக்கும்.
- களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம். களவு செய்யாமல் இருந்தால் அளவற்ற செல்வம் கிட்டும்.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply