(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

20. அழுக்கா றொழித்தல்

(அழுக்காறு- பொறாமை)

  1. அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல்.

அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும்.

  1. அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே.

அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை.

  1. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே.

பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை.

  1. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே.

பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது.

  1. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும்.

அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் இல்லாத நிலைமை ஏற்படும்.(வறுமை ஏற்படும்)

  1. வறுமையும் பசியுஞ் சிறுமையு முளவாம்.

அழுக்காறு கொண்டவனுக்கு ஏழ்மை, பசி, துன்பம் ஆகியவை ஏற்படும்.

  1. அழுக்கா றுடைமைகீழ் வழுக்கா றென்ப.

அழுக்காறு கொள்வதைப் போல் இழிவான செயல் ஏதும் இல்லை.

  1. விலங்குகளு மழுக்கா றிலங்குத லில்லை.

விலங்குகளுக்கு இடையே பொறாமை நிலவுவதில்லை.

  1. அறிவுடை மக்க ளதுகொளல் புதுமை.

அப்படி இருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதர் பொறாமை கொள்ளுதல் வியப்புக்கு உரியது ஆகும்.

  1. அழுக்கா றுளத்துறா தநுதின மோம்புக.

ஆதலால் அழுக்காறு உள்ளத்தினுள் ஏற்படாதவாறு அநுதினமும் மனத்தினைக் காத்தல் வேண்டும்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

வ.உ.சிதம்பரனார்