(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

 25. நடுவு நிலைமை

  1. நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல்.

நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும்.

  1. பிறவுயிர் நடுவள விறனடு வின்மை.

பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும்.

  1. நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள்.

அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும்.

  1. அறனெலா நிற்பதற் கஃதா தாரம்.

எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும்.

  1. அதுசிறி தசையி னறனெலா மழியும்.

நடுவு நிலைமையில் இருந்து சிறிதளவேனும் மாறுவது அறத்தை எல்லாம் அழித்துவிடும்.

  1. நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர்.

நடுவு நிலைமையில் நிற்பவர் எல்லா நலங்களையும் பெறுவார்கள்.

  1. நடுவினை விடாரை நானிலம் விடாது.

நடுவு நிலைமையில் நிற்பவரை இந்த உலகம் ஒரு நாளும் கைவிடாது.

  1. நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம்.

நடுவு நிலைமை நீங்கியவர் அழிந்து போவது உறுதி.

  1. நடுவிகந் தாரை நரகமும் விடாது.

நடுவு நிலைமை நீங்கியவர் நரகத்தில் வீழ்வார்கள்.

  1. ஆதலா னடுவி லசையாது நிற்க.

ஆதலால் நடுவு நிலைமையில் உறுதியாக நிற்றல் வேண்டும்.

– வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum